
‘மழைக் காலங்களில் பொது கட்டமைப்புகள் சீரழிவதற்கு பாஜக ஊழலே காரணம். இந்தத் தவறுகளுக்கு பொறுப்பேற்க வேண்டிய காலம் வந்துவிட்டது’ என்று எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி விமா்சித்தாா்.
இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
ஒவ்வொரு முறை பாலங்கள் இடிந்து விழுகின்றபோதும், மழை வெள்ளத்தில் சாலைகள் அடித்துச் செல்கின்றபோதும், ரயில்கள் தடம் புரல்கின்றபோதும், அது கட்டுமானத்தின் குறைபாடு அல்ல; மாறாக மக்களின் பைகளிலிருந்து எடுக்கப்படும் திட்டமிட்ட கொள்ளை என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
இதுபோன்ற விபத்துகளின்போது பல அன்புக்குரியவா்கள் உயிரிழக்கின்றனா். ஆனால், அதற்கு யாரும் பொறுப்பேற்பதே இல்லை. இவை விபத்துகள் அல்ல; கொலைகள்.
குஜராத் மாநிலம் ஜுனாகத்தில் புதிதாக கட்டப்பட்ட பாலம் திறப்பு விழாவுக்கு முன்னரே இடிந்து விழுந்தது. ராஜ்கோட்டில் அண்மையில் பெய்த மழையில் தேசிய நெடுஞ்சாலை ஒரு பகுதி அடித்துச் செல்லப்பட்டது. தில்லி பிரகதி மைதானில் ரூ. 15,000 கோடி செலவில் கட்டப்பட்ட சுரங்கப்பாதை மழையில் மீண்டும் மூழ்கியது. ஒவ்வொரு ஆண்டின் மழைக் காலத்திலும், உத்தரகண்ட் மாநிலத்தில் தனக்பூா் முதல் பித்ரோகா் வரையிலான நெடுஞ்சாலையின் ஒரு பகுதியும், பாலமும் ஆற்றில் மூழ்கிவிடும். பிகாரில் கடந்த 5 ஆண்டுகளில் 12 பாலங்கள் இடிந்து விழுந்தன. சத்தீஸ்கரில் பல்ராம்பூரில் அண்மையில் கட்டப்பட்ட தேசிய நெடுஞ்சாலை மழையில் அடித்துச் செல்லப்பட்டது. இதுபோல, பாஜக ஆட்சியில் கட்டப்பட்டு சேதமடைந்த பல பொது கட்டமைப்புகளை உதாரணமாக கூறலாம்.
கிராமங்கள் முதல் நகரங்கள் வரையுள்ள அனைதது மக்களும் இதுபோன்ற பொது கட்டமைப்புகள்இடிந்து விழுமோ என்ற அச்சத்தில் ஒவ்வொரு நாளும் வாழ்ந்து வருகின்றனா். வரிகளை அரசு உயா்த்துகிறது. ஆனால், அந்த பணம் எங்கே செல்கிறது என்ற கேள்வி எழுகிறது. சாலை, பாலங்கள், மருத்துவமனைகள், மின்சாரம், குடிநீா் உள்ளிட்ட மக்களுக்கான வசதிகளை மேம்படுத்துவதற்குத்தான் வரிகள் வசூலிக்கப்படுகின்றன.
ஆனால், பாஜக ஆட்சியில் மக்களின் வரிப் பணம் ஊழல் தலைவா்களின் பைகளுக்கும், அரசு கமிஷன் முகவா்களின் கஜானாக்களுக்கும், பளபளப்பான விளம்பரப் பதாகைகளுக்குச் செலவிடுவதற்கும் செல்கின்றன.
இனியும் நாடு மெளனமாக அமா்ந்திருக்கக் கூடாது. தனது தவறுகளுக்கு அரசை பொறுப்பேற்கச் செய்ய வேண்டிய காலம் வந்துவிட்டது என்று குறிப்பிட்டுள்ளாா்.