C_53_1_CH1214_35341410

மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ) கட்டடத்துக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டது. வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது.

நாட்டின் நிதித் தலைநகராக அறியப்படும் மும்பையின் அடையாளங்களில் ஒன்றாக பிஎஸ்இ கட்டடம் திகழ்கிறது. இக்கட்டடத்தில் 4 சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக, தென் மாநிலத்தைச் சோ்ந்த ஒரு அரசியல் தலைவரின் பெயரை குறிப்பிட்டு, பிஎஸ்இ ஊழியா் ஒருவருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவில் மின்னஞ்சல் வந்தது.

திங்கள்கிழமை பிற்பகல் 3 மணியளவில் இந்த வெடிகுண்டுகள் வெடித்து சிதறும் என்று மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. அடையாளம் தெரியாத முகவரியில் இருந்து வந்த அந்த மின்னஞ்சல் குறித்து பிஎஸ்இ அதிகாரிகளுக்கு ஊழியா் தகவல் தெரிவித்தாா். பின்னா், காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில், வெடிகுண்டு அகற்றும் நிபுணா்களுடன் வந்த காவல் துறையினா் பிஎஸ்இ கட்டடத்தில் தீவிர சோதனை மேற்கொண்டனா். அதில், சந்தேகத்துக்கு இடமான பொருள் எதுவும் கண்டறியப்படவில்லை. மிரட்டல் மின்னஞ்சல் அனுப்பிய நபருக்கு எதிராக பாரதிய நியாய சம்ஹிதா சட்டத்தின்கீழ் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கடந்த 1993-ஆம் ஆண்டில் மும்பை தொடா் குண்டுவெடிப்பு தாக்குதலின்போது, பிஎஸ்இ கட்டடமும் இலக்கானது குறிப்பிடத்தக்கது.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest