
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 20 வயதே ஆன ரிதுபர்னா என்ற பொறியியல் மாணவி, ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.72 லட்சத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.
எந்தத் தோல்வியும் முடிவல்ல, வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன, நம்பிக்கை, அயராத உழைப்பு இருந்தால் மிகப்பெரிய கனவுகளை எட்டலாம் என்பதற்கு உதாரணமாக மாறியிருக்கிறார் ரிதுபர்னா.
ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு, நீட் தேர்வை எழுதி டாக்டராக நினைத்த ரிதுபர்னா, அதில் தோல்வியடைந்தபோது துவண்டுபோகவில்லை. பிறகு யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராக முடிவு செய்தார். ஆனால், அவரது தந்தையின் சொல்படி, பொறியியல் சேர்ந்து படித்தார்.
இன்று பிரிட்டனில் தலைமையிடத்தைக் கொண்டு இயங்கும் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.72 லட்சம் சம்பளத்தில் பணிக்கு சேர்ந்துள்ளார். இந்த நிறுவனத்தில் இளம் வயதில் பணியில் சேர்ந்திருக்கும் பெண் என்ற பெருமைக்குச் சொந்தக்காரராக மாறியிருக்கிறார்.
கர்நாடகத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில் படித்து அதில் ஆர்வத்தை வளர்த்துக்கொண்டதோடு, விவசாயத் துறைக்குத் தேவையான ரோபோடிக் இயந்திரங்களை தயாரித்து சர்வதேச அளவில் விருதுகளைப் பெற்றார்.
படிக்கும்போதே, தன்னுடைய திறமையால் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தில் இன்டர்ஷிப் கிடைத்தது. தற்போது அது பணி வாய்ப்பாக மாறியிருக்கிறது.
2025, ஜனவரி முதல், வீட்டிலிருந்து பணியாற்றி வருகிறார். நள்ளிரவில், பணியாற்றத் தொடங்கி, காலை 6 மணி வரை வேலை செய்வாராம். பிறகு, பகலில் தன்னுடைய கல்லூரி படிப்புகளை கவனிப்பாராம். ஏழாவது பருவத் தேர்வு முடிந்ததும், அவர் அமெரிக்காவின் டெக்ஸாஸ் சென்று, ரோல்ஸ் – ராய்ஸ் நிறுவனத்தில் முழு நேரப் பணியாளராக சேரவிருக்கிறார். கடந்த ஏப்ரல் மாதம் வரை அவரது ஆண்டு வருவாய் ரூ.39.6 லட்சமாக இருந்த நிலையில், அவரது அயராத உழைப்பு மற்றும் திறமையைப் பார்த்த நிறுவனம் சம்பளத்தை ரூ.72.3 லட்சமாக உயர்த்தியிருக்கிறது.