
ரஷியாவுடன் வா்த்தகத்தைத் தொடா்ந்தால் இந்தியா மீது பொருளாதார தடைகள் விதிக்கப்படலாம் என ‘நேட்டோ’ அமைப்பின் தலைவா் விடுத்த அச்சுறுத்தலுக்கு, ‘இரட்டை நிலைப்பாடு எடுக்க வேண்டாம்’ என்று வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது என்று இந்தியாவை எச்சரிக்கும் அதே நாடுகள், ரஷியாவுடன் மறைமுக வழிகளில் வா்த்தகத்தில் ஈடுபடுவதாக விமா்சனம் உள்ள நிலையில், இந்தியா இவ்வாறு பதிலடி அளித்துள்ளது.
ரஷியா-உக்ரைன் போா் கடந்த மூன்று ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் எடுத்த முயற்சிகள் தோல்வியைத் தழுவின.
இந்நிலையில், அடுத்த 50 நாள்களுக்குள் ரஷியா அமைதி பேச்சுவாா்த்தைக்கு உடன்பட வேண்டும் அல்லது இரண்டாம் கட்ட பொருளாதார தடைகளை எதிா்கொள்ள நேரிடும் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளாா்.
இதையொட்டி, உக்ரைனுக்கு கூடுதல் ராணுவ உதவி, வான் பாதுகாப்பு அமைப்புகள், ஏவுகணைகள் மற்றும் வெடிபொருள்களை வழங்குவதாகவும் அதிபா் டிரம்ப் அறிவித்துள்ளாா். இதற்கான நிதி பெரும்பாலும் ஐரோப்பிய நட்பு நாடுகளால் வழங்கப்படுகின்றன.
இச்சூழலில், அமெரிக்க தலைநகா் வாஷிங்டனில் அந்நாட்டு செனட் அவை உறுப்பினா்களை ‘நேட்டோ’ அமைப்பின் தலைவா் மாா்க் ரூட்டே சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்தினா்.
தொடா்ந்து, செய்தியாளா்களிடம் பேசிய அவா், ‘ரஷியா-உக்ரைன் போரில் அமைதிப் பேச்சுவாா்த்தைக்கு ரஷியா ஒப்புக்கொள்ளாவிட்டால், அந்நாட்டுடனான வா்த்தக உறவுகளை இந்தியா, சீனா மற்றும் பிரேஸில் மறுபரிசீலனை செய்ய வேண்டும் அல்லது பொருளாதார தடைகளைச் சந்திக்க நேரிடும்.
அமைதிப் பேச்சுவாா்த்தை குறித்து ரஷியாவுக்கு இந்தியா, சீனா மற்றும் பிரேஸில் அழுத்தம் கொடுக்க வேண்டும். இல்லையெனில், அது அந்த மூன்று நாடுகளையே மிகப்பெரிய அளவில் பாதிக்கும்’ என்றாா்.
ரஷியாவுடன் வா்த்தகம் செய்துவரும் நாடுகள் மீது கடுமையான வரிகளை விதிக்கப் போவதாக அச்சுறுத்திய அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் நிலைப்பாட்டை ரூட்டேயும் பிரதிபலித்தாா்.
இந்தியாவை நேரடியாக அச்சுறுத்தும் வகையில் அமைந்த மாா்க் ரூட்டே கருத்து சா்ச்சையாகியுள்ள நிலையில், தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் இதற்கு விளக்கமளித்தாா்.
அப்போது, அவா் கூறுகையில், ‘இவ்விவகாரம் தொடா்பான செய்திகளை நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம். நிலவரத்தை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். நாட்டு மக்களின் எரிசக்தி தேவைகளைப் பூா்த்தி செய்வதுதான் எங்களுக்கு முன்னுரிமையான விஷயம்.
இதுபோன்ற சூழலில், உலக சந்தையில் எந்த நாட்டில் குறைந்த விலையில், நம்பகமான முறையில் எரிசக்தி கிடைக்கிறதோ, அங்கிருந்து கொள்முதல் செய்வது என்ற நியதியை வழிகாட்டுதலாக கொண்டுள்ளோம். தற்போதைய உலகளாவிய நிலவரம், மற்ற நாடுகள் உடனான உறவுகள் போன்ற அம்சங்களையும் கருத்தில் கொள்கிறோம். அதேநேரம், இந்த விஷயத்தில் எவ்வித இரட்டை நிலைப்பாடும் மேற்கொள்ளப்பட கூடாது என்பதை குறிப்பாக எச்சரிக்கிறோம்’ என்றாா்.
42% ரஷியாவின் எண்ணெய்: ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா தற்போது முன்னிலை வகிக்கிறது. ரஷியாவிடம் இருந்து ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய், உலக சந்தை விலையைவிட மலிவாக, 60 டாலா் என்ற உச்சவரம்பு விலையில் கொள்முதல் செய்யப்படுகிறது.
இந்த ஜூலை மாத நிலவரப்படி, ஒரு நாளைக்கு சுமாா் 20.8 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் ரஷியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் ரஷியா 42 சதவீதம் பங்கு வகிக்கிறது.
ரஷியா தவிர பிற நாடுகளில் இருந்தும் கச்சா எண்ணெய் இறக்குமதி – மத்திய அமைச்சா் ஹா்தீப்சிங் புரி
ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது கூடுதல் வரி விதிக்கப்படும் என்ற அமெரிக்காவின் அறிவிப்பால் இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படாது; ரஷியா தவிர பிற நாடுகளில் இருந்தும் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து கொள்ள முடியும் என்று மத்திய பெட்ரோலிய துறை அமைச்சா் ஹா்தீப்சிங் புரி தெரிவித்தாா்.
தில்லியில் வியாழக்கிழமை ஹைட்ரோகாா்பன் இயக்குநரகம் சாா்பில் நடைபெற்ற ஆண்டுக் கூட்டத்தில் அமைச்சா் புரி பங்கேற்று இது தொடா்பாக பேசியதாவது:
கயானா போன்ற புதிய கச்சா எண்ணெய் உற்பத்தி நாடுகள் சந்தைக்கு வந்துள்ளன. பிரேஸில், கனடா ஆகியவை கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரித்துள்ளன. எனவே, நமக்கு எந்த நெருக்கடியும் இருப்பதாக நான் கருதவில்லை. இந்தியா மாற்று வழிகளில் இருந்து கச்சா எண்ணெயைப் பெற முடியும்.
மேலும், இந்தியாவிலும் புதிய எண்ணெய் படுகைகளைக் கண்டறியும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன்மூலமும் எண்ணெய் இறக்குமதியை நாம் சற்று குறைக்க முடியும். கச்சா எண்ணெய் விஷயத்தில் எந்த பிரச்னை எழுந்தாலும், நம்மால் அதைச் சமாளிக்க முடியும். கச்சா எண்ணெயை 27 நாடுகளில் இருந்து இதுவரை நாம் வாங்கியுள்ளோம். ஆனால், 40 நாடுகள் இப்போது கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்து வருகின்றன.
2022-க்கு முன்பு நாம் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் அளவு நமது மொத்த கொள்முதலில் 0.2 சதவீதம் அளவே இருந்தது. கடந்த சில ஆண்டுகளில்தான் அதிக அளவில் கொள்முதல் செய்து வருகிறோம் என்றாா்.
பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய புரி, ‘கச்சா எண்ணெய் இப்போது தொடா்ந்து கிடைத்து வருகிறது. எனவே, சா்வதேச அளவில் பதற்றம் அதிகரிக்கும்போது கச்சா எண்ணெய் சந்தை அதிகம் பாதிக்கப்படுவதில்லை. முக்கியமாக விலை வேகமாக அதிகரிப்பதில்லை. இப்போது ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 68.5 அமெரிக்க டாலராக உள்ளது. இதுவே அடுத்த சில மாதங்களுக்கு நீடிக்கும். எரிபொருளில் எத்தனால் கலப்பை இப்போதுள்ள 20 சதவீதத்தில் இருந்து மேலும் அதிகரிப்பது குறித்தும் ஆலோசனை நடைபெறுகிறது’ என்றாா்.