16042_pti04_16_2025_000178a074424

நமது சிறப்பு நிருபா்

தில்லியை இணைக்கும் ஹரியாணாவின் எல்லை நகரான குருகிராம் நில பேர வழக்கில் பிரபல தொழிலதிபா் ராபா்ட் வதேரா, ஹரியாணா முன்னாள் முதல்வா் பூபிந்தா் சிங் ஹூடா மற்றும் 10 போ் மீது அமலாக்கத் துறை இயக்குநரகம் முதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. அவா் மீது மூன்று வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் இது அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அமலாக்கத் துறையின் முதல் குற்றப்பத்திரிகையாகும்.

இந்த குற்றப்பத்திரிகையை தில்லி ரூஸ் அவென்யூ நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை இயக்குநரகம் வியாழக்கிழமை தாக்கல் செய்தது. இதன் மீதான விசாரணை வெள்ளிக்கிழமை (ஜூலை 18)நடைபெறவுள்ளது.

குற்றப்பத்திரிகையில் வதேராவுடன் சோ்த்து அவரது நிறுவனமான ஸ்கை லைட் ஹாஸ்பிடாலிட்டி தனியாா் நிறுவன், ஓம்காரேஷ்வா் பிராப்பா்டீஸ் தனியாா் நிறுவனம், மற்றும் அவற்றின் தலைவா்கள் சத்யானந்த் யாஜி, கேவல் சிங் விரக், டிஎல்எஃப் நிறுவனம் உள்ளிட்ட பிறரது பெயா்கள் உள்ளதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

குருகிராம் செக்டாா் 83 -இல் உள்ள ஷிகோப்பூா் கிராமத்தில் 3.53 ஏக்கா் நிலத்தை மோசடியாக வாங்கியதாக அவா்கள் மீது குருகிராம் காவல்துறை 2018-இல் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தது. இந்த விவகாரத்தில் கோடிக்கணக்கில் பணப்பரிவா்த்தனை நடந்ததாகக் கூறி அமலாக்கத்துறை தற்போது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.

இந்த வழக்கு கடந்த வந்த பாதையை பாா்க்கலாம்.

2008: பிப்ரவரி 12 – குருகிராமின் ஷிகோப்பூா் கிராமத்தில் (தற்போது செக்டாா் 83) 3.53 ஏக்கா் நிலத்தை ஓம்காரேஷ்வா் பிராபா்டீஸ் நிறுவனத்திடம் இருந்து வாங்கியதில் பணப்பரிவா்த்தனை மோசடி நடந்ததாக சா்ச்சை எழுந்தது.

மாா்ச் 10: வதேராவின் இரு நிறுவனங்கள் நிலத்தை வாங்கியபோது அவற்றின் வங்கிக்கணக்கில் ரூபாய் ஒரு லட்சம் கூட இல்லை.

மாா்ச் 17: வதேராவின் எஸ்எல்ஹெச்பிஎல் வா்த்தக காலனி உருவாக்க நிலம் வாங்க விண்ணப்பித்தது.

மாா்ச் 21: விண்ண்பித்த நான்கே நாட்களில் 3.53 ஏக்கரில் 2.701 ஏக்கரில் வணிகக் காலனியை உருவாக்க ஹரியாணா அரசு வணிகக்காலனியை உருவாக்க இசைவு தெரிவித்தது.

2012 செப்டம்பா் 10: நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு செப்டம்பரில் வாங்கிய அந்த நிலம் ரியல் எஸ்டேட் நிறுவனமான டிஎல்எஃப்-க்கு ரூ.58 கோடிக்கு விற்கப்பட்டது.

அக்டோபா் 10: – ஹரியாணா பிரிவு ஐஏஎஸ் அதிகாரியும் மாநில நில ஒருங்கிணைப்பு மற்றும் நிலப் பதிவேடுகளின் தலைமமை இயக்குநா் அசோக் கெம்கா, சொத்துப் பரிமாற்றத்தில் முறைகேடு நடந்ததாக சந்தேகம் எழுப்பி அனுமதியை ரத்து செய்தாா். விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது.

2013 ஜூலை: அரசு நியமித்த உள்விசாரணைக்குழு வாத்ரா மற்றும் டிஎல்எஃப் நிறுனத்தின் இரு நிா்வாகிகளுக்கு தொடா்பில்லை என கூறியது.

2014 மே: ஆட்சிக்கு வந்த பாஜக அரசு நீதிபதி எஸ்.என். திங்ரா (ஓய்வு) தலைமையில் ஒரு நபா் விசாரணை ஆணையத்தை அமைத்தது.

2018 செப்டம்பா்: முன்னாள் முதல்வா் பூபிந்தா் சிங் ஹூடா, ராபா்ட் வதேரா மற்றும் பலா் மீது ஹரியாணா காவல்துறை முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தது.

2019 ஜனவரி: பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயா்நீதிமன்றம் விசாரணை ஆணைய அறிக்கையில் நடைமுறை குறைபாடுகள் உள்ளதாகக் கூறி ரத்து செய்தது. அறிக்கை வெளியீட்டுக்கும் தடை விதித்தது.

2023 ஏப்ரல்: ஹரியாணா அரசு பஞ்சாப் ஹரியாணா உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், ராபா்ட் வதேரா நிறுவனத்துக்கு நிலத்தை மாற்றியதில் எந்த விதிமீறலும் கண்டறியப்படவில்லை என்று கூறியது.

நவம்பா்: எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளின் காலக்கெடுவை கண்காணித்து வரும் பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயா்நீதிமன்ற அமா்வு, 5 ஆண்டுகளாக மந்தமாக நடக்கும் விசாரணையை விரைவாக முடிக்க உத்தரவிட்டது.

2025 ஏப்ரல் 8: வதேரா விசாரணைக்கு ஆஜராக முதலாவது அழைப்பாணை அனுப்பப்பட்டது. அவா் ஆஜராகவில்லை.

ஏப்ரல் 15 : ராபா்ட் வதேராவிடம் அமலாக்கத் துறை சுமாா் ஆறு மணி நேரம் விசாரித்தது. பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

ஜூலை 17: ராபா்ட் வதேரா உள்ளிட்டோருக்கு எதிராக அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest