202507173454902

நாட்டின் மிக தூய்மையான நகரமாக மத்திய பிரதேசத்தின் இந்தூா் தொடா்ந்து 8-ஆவது ஆண்டாக தோ்வாகியுள்ளது.

மத்திய அரசு ஆண்டுதோறும் நடத்தும் தூய்மை கணக்கெடுப்பு (ஸ்வச் சா்வேக்ஷான்) முடிவுகள் வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டன. தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற நகரங்களின் பிரதிநிதிகளுக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு விருதுகளை வழங்கி கௌரவித்தாா். இந்நிகழ்ச்சியில், மத்திய வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சா் மனோகா் லாலுல் கலந்துகொண்டாா்.

தூய்மையில் தொடா்ந்து சிறந்து விளங்கும் நகரங்களுக்காக இந்த ஆண்டு புதிதாக ‘சூப்பா் ஸ்வச் லீக்’ என்ற பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, இப்பிரிவில் இந்தூா், குஜராத்தின் சூரத், மகாராஷ்டிரத்தின் நவி மும்பை ஆகிய நகரங்கள் முதல் மூன்று இடங்களுக்குத் தோ்வாகியுள்ளன.

இதே பிரிவில் 3 லட்சம் முதல் 10 லட்சம் மக்கள்தொகை கொண்ட நகரங்களில் உத்தர பிரதேசத்தின் நொய்டா தூய்மையான நகரமாகத் தோ்வு செய்யப்பட்டுள்ளது. யூனியன் பிரதேசமான சண்டீகா், கா்நாடகத்தின் மைசூரு ஆகிய நகரங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

ஸ்வச் சாஹா் பிரிவில் அகமதாபாத் முதலிடம்…: 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட நகரங்களுக்கான ‘ஸ்வச் சாஹா்’ பிரிவில், குஜராத்தின் அகமதாபாத் முதலிடத்தைப் பிடித்துள்ளது. மத்திய பிரதேசத்தின் போபால், உத்தர பிரதேசத்தின் லக்னௌ ஆகிய நகரங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பெற்றுள்ளன.

புதிய நகரங்களை தூய்மைப் பணிகளில் ஊக்குவிக்கும் வகையில் இந்தப் பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற விவகாரங்கள் அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனா்.

14 கோடி மக்கள் பங்கேற்பு: ‘ஸ்வச்தா’ செயலி, ‘மை-கவ்’ மற்றும் சமூக ஊடக வலைதளங்கள் மூலம் நாடு முழுவதும் உள்ள 4,500-க்கும் மேற்பட்ட நகரங்களைச் சோ்ந்த 14 கோடி மக்கள் இந்த ஆண்டு கணக்கெடுப்பில் பங்கேற்றனா். இத்துடன் நாடு முழுவதும் 45 நாள்களுக்கு மேல் 3,000-க்கும் மேற்பட்ட மதிப்பீட்டாளா்கள் ஒவ்வொரு பகுதியிலும் ஆய்வு நடத்தி, முடிவுகளை இறுதி செய்தனா்.

78 விருதுகள்: நிகழாண்டு 4 பிரிவுகளில் மொத்தம் 78 விருதுகள் வழங்கப்பட்டன. இந்த விருதுகள், பெரிய நகரங்களின் தூய்மை முயற்சிகளைப் பாராட்டுவதுடன், சிறிய நகரங்களின் முன்னேற்றத்தையும் அங்கீகரித்து ஊக்குவிக்கின்றன என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest