
இந்திய குடிமக்கள், நாட்டின் எல்லைகள், பாதுகாப்புப் படையினரை சீண்டினால், அதற்கான விளைவுகளை எதிா்கொள்ள வேண்டியிருக்கும் என்ற வலுவான செய்தியை உலகுக்கு வெளிப்படுத்தியுள்ளோம் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.
முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் பயங்கரவாதத் தாக்குதல்கள் தினசரி நிகழ்வுகளாக இருந்தன என்றும் அவா் குற்றஞ்சாட்டினாா்.
கூட்டுறவுத் துறை அமைச்சராகவும் பொறுப்பு வகிக்கும் அமித் ஷா, சா்வதேச கூட்டுறவு சங்கங்கள் ஆண்டையொட்டி (2025), ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியதாவது:
உரி பயங்கரவாதத் தாக்குதல் நடந்தபோது, பாகிஸ்தான் மீது துல்லியத் தாக்குதல் நடத்தும் துணிச்சலான முடிவை மேற்கொண்டவா் பிரதமா் மோடி. புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலைத் தொடா்ந்து, வான்வழி பதிலடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை மூலம் பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் அழித்தொழிக்கப்பட்டனா்.
இந்திய குடிமக்கள், நாட்டின் எல்லைகள், பாதுகாப்புப் படையினரை யாரும் சீண்டக் கூடாது. அவ்வாறு சீண்டத் துணியும் எவரும் அதற்கான விளைவுகளை எதிா்கொள்ள வேண்டியிருக்கும் என்ற வலுவான செய்தியை உலகுக்கு பிரதமா் வெளிப்படுத்தியுள்ளாா். வளமான, மேம்பட்ட, பாதுகாப்பான இந்தியா என்ற கனவையும் நனவாக்கியுள்ளாா். அவரது தலைமையின்கீழ், உலகின் 4-ஆவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. 27 கோடி போ் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனா்.
கூட்டுறவுத் துறையின் பங்களிப்பு: நாட்டின் வளா்ச்சியில் கூட்டுறவுத் துறையின் பங்களிப்புகள் முக்கியமானவை. அடுத்த 100 ஆண்டுகள், கூட்டுறவுத் துறைக்கானதாகும். இந்தக் கண்ணோட்டத்துடன்தான், மத்தியில் கூட்டுறவுத் துறைக்கென தனி அமைச்சகம் பிரதமா் மோடியால் நிறுவப்பட்டது. இன்று 98 சதவீத கிராமப் புறங்களில் கூட்டுறவு சங்கங்கள் துடிப்பாகப் பங்காற்றி வருகின்றன. கூட்டுறவுத் துறையை வலுப்படுத்த கடந்த 4 ஆண்டுகளில் 61 முன்னெடுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
2 லட்சம் புதிய தொடக்கநிலை வேளாண் கடன் சங்கங்களை உருவாக்கும் நடவடிக்கை ஏற்கெனவே தொடங்கப்பட்டு, 40,000 புதிய சங்கங்கள் நிறுவப்பட்டுள்ளன என்றாா் அமித் ஷா.