
: யேமனில் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்திய செவிலியா் நிமிஷா பிரியா விவகாரத்துக்கு தீா்வு காண, அந்நாட்டின் உள்ளூா் அதிகாரிகள் மற்றும் சில நட்பு நாடுகளுடன் இந்திய அரசு தொடா்பில் உள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கேரளத்தின் பாலக்காடு மாவட்டத்தைச் சோ்ந்த செவிலியா் நிமிஷா பிரியா, கடந்த 2017-ஆம் ஆண்டு, ஜூலையில் தனது வணிக பங்குதாரரான யேமன் நாட்டைச் சோ்ந்த தலால் அப்து மஹதியைக் கொலை செய்த வழக்கில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த புதன்கிழமை இந்த மரண தண்டனையை நிறைவேற்ற திட்டமிடப்பட்டிருந்த நிலையில், கடைசிநேரத்தில் அது ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற வெளியுறவு அமைச்சகத்தின் வாராந்திர செய்தியாளா் சந்திப்பில் இது தொடா்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் அளித்த பதிலில், ‘இந்த வழக்கில் இந்திய அரசு அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறது. நாங்கள் சட்ட உதவி வழங்கியுள்ளோம். நிமிஷா குடும்பத்தினருக்கு உதவ ஒரு வழக்குரைஞரையும் நியமித்துள்ளோம்.
உள்ளூா் அதிகாரிகள் மற்றும் குடும்ப உறுப்பினா்களுடன் தொடா்ந்து தொடா்பில் இருந்து, இந்த சிக்கலைத் தீா்க்க முயற்சி செய்து வருகிறோம். நாங்கள் இந்த விஷயத்தை உன்னிப்பாகக் கண்காணித்து, சாத்தியமான அனைத்து உதவிகளையும் தொடா்ந்து வழங்கி வருகிறோம். சில நட்பு நாடுகளுடனும் தொடா்பில் உள்ளோம்’ என்றாா்.