
ஆப்கானிஸ்தான் எல்லையில், தற்கொலைப் படையைச் சேர்ந்த 5 ஆப்கன் சிறுவர்களை, பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து எல்லையைக் கடந்து, பாகிஸ்தானுக்குள் ஊடுறுவிய, 5 ஆப்கன் சிறுவர்கள் பெஷிகெல் பகுதியிலுள்ள மசூதியில் நேற்று (ஜூலை 17) தஞ்சமைந்துள்ளதாக, பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, அந்நாட்டின் அசிஸ்கெல் மற்றும் மந்திகெல் பகுதிகளுக்குள் ஊடுறுவ முயன்ற, 15 முதல் 18 வயதுக்குட்பட்ட 5 சிறுவர்களை பாதுகாப்புப் படையினர் சுற்றிவளைத்ததும், அவர்கள் சரணடைந்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து, அதிகாரிகள் கூறுகையில், கைது செய்யப்பட்ட 5 பேரும் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் எனவும், அவர்களைத் தற்போது ரகசிய இடத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, ஜூலை மாதம் துவங்கியது முதல் பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் எல்லை வழியாக ஊடுறுவ முயன்ற 30 பயங்கரவாதிகள் பாகிஸ்தான் ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
கடந்த ஏப்ரல் மாதம், ஆப்கானிஸ்தானில் இருந்து வடக்கு வசிரிஸ்தான் மாவட்டம் வழியாக பாகிஸ்தானுக்குள் ஊடுறுவ முயன்ற சுமார் 71 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: கலப்படத்தால் நடுவழியில் நின்ற பாதுகாப்பு வாகனம்! டாக்ஸியில் சென்ற ஈரான் அதிபர்!