
இந்த வாரம் திரையரங்குகளில் வெளியான படங்களின் லிஸ்ட்!
பன் பட்டர் ஜாம் (தமிழ்) :
பிக்பாஸ் பிரபலம் ராஜு ஜெயமோகன், ஹீரோவாக அறிமுகமாகியுள்ள திரைப்படம் ‘பன் பட்டர் ஜாம்’ இன்று (ஜூலை 18) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. இப்படத்தை ராகவ் மிர்தாத் இயக்கி உள்ளார். சார்லி, தேவதர்ஷினி, சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட நடிகர்கள் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர். கல்லூரி செல்லும் இளைஞனாகவும், அம்மாவின் பிள்ளையாகவும் இருக்கிறார் ராஜு. இந்த தலைமுறையில் நடக்கின்ற காதல் மற்றும் திருமணம் எப்படி இருக்கிறது என்பதனை காமெடியுடன் கலந்து சொல்லும் திரைப்படமாக இருக்கிறது இந்த ‘பன் பட்டர் ஜாம்’.

கெவி (தமிழ்) :
தமிழ் தயாளன் இயக்கத்தில் ஆதவன், ஷீலா, ஜாக்குலின், சார்லஸ் வினோத் ஆகியோரின் நடிப்பில் இன்று (ஜூலை 18) திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் திரைப்படம் ‘கெவி’. கொடைக்கானல் அருகே இருக்கும் மலைவாழ் கிராமம் வெள்ள கெவி. மலை வாழ் மக்கள் படும் சிரமங்களையும், அவர்கள் வாழ்வில் நடக்கும் வெளியில் தெரியாத கொடுமைகளையும் வெளிப்படையாக சொல்லும் திரைப்படமாக இருக்கிறது கெவி. சாலை, மருத்துவ வசதி சரிவர கிடைக்காத மலை கிராம மக்களின் குரலாக ஒலிக்கும் திரைப்படமாக கெவி வெளியாகி உள்ளது.
ஜென்ம நட்சத்திரம் (தமிழ்):
பி. மணிவர்மன் இயக்கத்தில் தமன் ஆக்ஷன், மாளவி மல்ஹோத்ரா, மைத்ரேயா, ரக்ஷா செரின், சிவம், அருண் கார்த்தி, காளி வெங்கட், முனிஷ்காந்த் ஆகியோரின் நடிப்பில் இன்று (ஜூலை 18) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது ‘ஜென்ம நட்சத்திரம்’ திரைப்படம். ஹாரரும் த்ரில்லரும் கலந்த திரைப்படமாக வெளியாகியிருக்கிறது. கோடிக்கணக்கில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ள பழைய கட்டடத்தின் உள்ளே ஹீரோ தன்னுடைய மனைவி, நண்பர்களுடன் உள்ளே நுழைகிறார். அங்கு நுழைந்து அந்தப் பணத்தைச் சொந்தமாக்கிக்கொள்ள நினைக்கும் வேளையில், ஒவ்வொருவராக மர்மமான சக்தியால் இறக்கத் தொடங்கிவிடுகின்றனர். அதிலிருந்து எப்படி மீண்டனர் என்பதே மீதிக்கதையாக உள்ளது.

யாதும் அறியான் (தமிழ்):
அறிமுக ஹீரோவாக தினேஷ், அப்பு குட்டி, தம்பி ராமையா ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கிற ‘யாதும் அறியான்’ திரைப்படம் ஜூலை 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. இப்படத்தை அறிமுக இயக்குநர் எம். கோபி இயக்கியிருக்கிறார். இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி, அதிலிருக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகின. விஜய் 2026-ல் முதலமைச்சராகி இருப்பது போல போஸ்டர் ட்ரெய்லரில் இடம்பெற்று ட்ரெண்ட் ஆனது. ரிசார்ட்டில் தங்கும் ஜோடிகளை ஒரு சைக்கோ கொலை செய்வதாக சைக்கோ த்ரில்லர் திரைப்படமாக இத்திரைப்படம் வெளியாகியிருக்கிறது.
ட்ரெண்டிங் (தமிழ்):
அறிமுக இயக்குனர் சிவராஜ் இயக்கத்தில் கலையரசன், பிரியாலயா, பிரேம் குமார் மற்றும் பெசன்ட் ரவி ஆகியோர் நடிப்பில் இன்று (ஜூலை 18) திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘ட்ரெண்டிங்’. இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் தம்பதிகள் செய்து வரும் ரீல்ஸ் வீடியோவினால் ஏற்படும் ஆபத்துகள் மற்றும் சந்திக்கும் பிரச்சினைகளைச் சொல்லும் திரைப்படமாக இத்திரைப்படம் உள்ளது.

நிகிதா ராய் (இந்தி):
குஷ் சின்ஹா இயக்கத்தில் சோனாக்ஷி சின்ஹா, பரேஷ் ராவல், அர்ஜுன் ராம்பால் ஆகியோர் நடிப்பில் இந்தி மொழியில் இன்று (ஜூலை 18) திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘நிகிதா ராய்’. ஒரு இளம் பெண் தனது குடும்பத்தின் கடந்தகாலத்துடன் தொடர்புடைய ஒரு மர்மத்தை விசாரிக்கிறாள், அதே நேரத்தில் அமானுஷ்ய நிகழ்வுகளை எதிர்கொள்கிறாள். இதனை மையப்படுத்தி இத்திரைப்படத்தின் கதை அமைந்துள்ளது.
தன்வி: தி கிரேட் (இந்தி):
சுபாங்கி கதாநாயகியாக அறிமுகமாகியிருக்கும் திரைப்படம் ‘தன்வி தி கிரேட்’. இத்திரைப்படத்தை அனுபம் கெர் இயக்கியுள்ளார். இந்திய ராணுவத்தில் சியாச்சின் பனிப்பாறையில் கொடிக்கு வணக்கம் செலுத்த வேண்டும் என்ற தனது மறைந்த தந்தையின் கனவை ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட தன்வி ரெய்னா அறிந்து கொள்கிறார். ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட போதிலும் அதனை எதிர்கொண்டு எப்படி இதனைச் சாதிக்கிறார் என்பதை மையப்படுத்தி திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

ஜூனியர் (தெலுங்கு):
ராதாகிருஷ்ண ரெட்டி இயக்கத்தில் கிரீதி ரெட்டி, ஸ்ரீலீலா, ஜெனிலியா ஆகியோர் நடிப்பில் இன்று (ஜூலை 18) திரையரங்குகளில் தெலுங்கு மொழியில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘ஜூனியர்’. இத்திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
JSK – ஜானகி VS ஸ்டேட் ஆஃப் கேரளா (மலையாளம்):
பிரவீன் நாராயணன் இயக்கத்தில் நடிகர்கள் சுரேஷ் கோபி, அனுபமா பரமேசுவரன் ஆகியோர் நடிப்பில் ஜூலை 17-ம் தேதி மலையாள மொழியில் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது ‘ஜானகி VS ஸ்டேட் ஆஃப் கேரளா’. பெங்களூரில் ஐடி ஊழியராக இருக்கும் ஜானகி விடுமுறையைக் கழிப்பதற்காக கேரளாவில் உள்ள தனது சொந்தக் கிராமத்திற்கு வருகிறார். அங்கு சிலரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகிறாள் ஜானகி. பின்பு நீதிக்காக எவ்வாறு நீதிமன்றத்தை அணுகுகிறார். நீதிக்காகப் போராடும் பெண்ணின் கதையைத் திரைப்படமாக எடுத்துள்ளனர்.

ஸ்மர்ப்ஸ் (ஆங்கிலம்) – அனிமேஷன்:
ஏற்கெனவே வெளியாகியுள்ள ஸ்மர்ப்ஸ் திரைப்படங்களின் வரிசையில் தற்போது க்ரிஷ் மில்லர் இயக்கத்தில் ‘ஸ்மர்ப்ஸ் 2025’ அனிமேஷன் திரைப்படம் வெளியாகியுள்ளது. மற்ற நாடுகளில் நேற்றே வெளியாகியுள்ள நிலையில் இந்தியாவில் இன்று (ஜூலை 18) வெளியாகியுள்ளது.