
மக்களவைத் தேர்தலுக்குப் பின், இந்தியா கூட்டணியில், ஆம் ஆத்மி கட்சி அங்கம் வகிக்கவில்லை என்று கட்சியின் எம்.பி. சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார்.
கடந்த 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலை ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து புது தில்லியில் போட்டியிட்டது. அதேவேளையில் ஹரியாணா மற்றும் தில்லி சட்டப்பேரவைத் தேர்தலை இவ்விரு கட்சிகளும் தனித்தனியாகவே சந்தித்தன.
ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் சஞ்சய் சிங் அளித்த பேட்டியில், மக்களவைத் தேர்தல் வரைதான், இந்தியா கூட்டணியில் ஆம் ஆத்மி இருந்தது என்ற எங்களது நிலைப்பாட்டை தெளிவுபடுத்திவிட்டோம்.
நாடாளுமன்றத்தைப் பொருத்தவரை, மத்திய அரசின் அனைத்து மோசமான கொள்கைகளையும் எதிர்ப்போம். தற்போது, பிகார், உத்தரப்பிரதேசம், பூர்வாஞ்சல் பகுதிகளில் மக்களின் வீடுகள், கடைகள் புல்டோசர் கொண்டு தரைமட்டமாக்கப்படுகிறது. இதைத்தான் நாங்கள் நாடாளுமன்றத்தில் எழுப்பவிருக்கிறோம் என்றார்.
மேலும் பேசிய அவர், அதிகாரப்பூர்வமாக நாங்கள் அறிவித்துவிட்டோம், இன்றைய நாள்படி, இந்தியா கூட்டணியில், ஆம் ஆத்மி கட்சி இல்லை. எங்கள் கூட்டணி மக்களைத் தேர்தலுடன் முடிந்துவிட்டது என்று குறிப்பிட்டிருக்கிறார்.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் ஜூலை 21ஆம் தேதி தொடங்கவிருக்கும் நிலையில், தில்லியில் குடிசைப் பகுதிகளை இடித்துத் தரைமட்டமாக்கிய விவகாரத்தை நாங்கள் எழுப்புவோம் என்று தெரிவித்தார்.