
பிரபல தேடுபொறி நிறுவனமான கூகுள் செய்யறிவு தொழில்நுட்பத்தை இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியின் ஒரு பகுதியாக தற்போது அனைத்துத் துறைகளிலும் ஏ.ஐ. எனும் செய்யறிவு தொழில்நுட்பம் புகுத்தப்பட்டு வருகிறது.
நமக்கு தேவையானவற்றை ஏஐ-யிடம் கேட்கும்பட்சத்தில் அது சில நொடிகளில் அதுதொடர்பான அனைத்துத் தகவல்களையும் சேகரித்துத் தருகிறது.
அந்தவகையில் கூகுள் நிறுவனம், கூகுள் தேடலில் ‘ஏஐ ஓவர்வியூ’ என்ற அம்சத்தை அறிமுகப்படுத்தியது. நாம் தேடும் தகவல்களை ஏஐ தரும்.
இதன் தொடர்ச்சியாக கூகுள் தேடலில் ஏஐ மோடு(AI Mode) அம்சத்தை முதலில் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தி சோதனையில் இருந்தது. தொடர்ந்து இந்தியாவிலும் சோதனை முறையில் அறிமுகப்படுத்தி அது வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது இந்தியா முழுவதும் கூகுளில் ஏஐ தொழில்நுட்பத்தை செயல்படுத்தியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பயன்படுத்துவது எப்படி?
இணையத்தில் கூகுள் தேடலுக்குச் சென்று உங்களது கேள்வியை உள்ளீடு செய்து மேலே ஏஐ மோடு என்பதை தேர்வு செய்தால் தகவல்கள் கிடைக்கும். ஏஐ ஓவர்வியூ-லும் தகவல்களைப் பெறலாம்.
கூகுள் தேடலிலும் கூகுள் மேப் செயலியிலும் இதனை பயன்படுத்தலாம். தற்போது ஆங்கிலத்தில் மட்டுமே தகவல்கள் வரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மற்ற மொழிகளில் இதனை செயல்படுத்தும் வேலைகள் நடந்து வருகின்றன.
இதற்கு கூகுள் கணக்கு உள்ளீடு செய்ய வேண்டும் என்று அவசியமில்லை. கூகுளில் நேரடியாக உங்களுக்கு வேண்டிய தகவல்களை டைப் செய்தோ, குரல் மூலமாகவோ அல்லது கூகுள் லென்ஸ் புகைப்படங்கள் மூலமாகவோ கேட்கலாம்.
குரல் வழியாக பதிவு செய்யும்போது மைக்ரோபோனை அழுத்திவிட்டு நீண்ட கேள்விகளைக் கூட கேட்கலாம். கூகுள் லென்ஸ் மூலமாக புகைப்படங்களை பதிவேற்றம் செய்து அதுதொடர்பான விவரங்களைப் பெறலாம்.
கேள்விகளுக்கு ஏற்ப தகவல்களையும் அதுதொடர்பான இணைப்புகளையும் கூகுள் தரும். கூடுதல் தகவல்கள் வேண்டுமென்றாலோ அல்லது சரிபார்ப்பு தேவைப்பட்டாலோ அந்த இணைப்புகளுக்குச் சென்று பார்க்கலாம்.
ஏதேனும் வழிமுறைகள் பற்றி கேட்டால் படிநிலைகளாக அவற்றை விரிவாகத் தரும். தொடர்ந்து மேலும் மேலும் அதைப்பற்றி கேட்டும் தகவல்களைப் பெறலாம்.
மொபைல்போனில் கூகுள் செயலி இருந்தாலே ஜெமினி பக்கம் திறக்கும். அதில் நேரடியாகவே தேவையான தகவல்களைக் கேட்டு பெறலாம்.
கூகுள் நிறுவனம் இதுபற்றி கூறுகையில்,
கூகுளின் மிக சக்திவாய்ந்த தேடல் கருவியாக இந்த கூகுள் ஏஐ மோடு இருக்கும். இது மேம்பட்ட அறிவை கொண்டிருக்கிறது. ஜெமினி 2.5-ன் பதிப்பால் இயக்கப்படுகிறது. நீண்ட விரிவான கேள்விகளையும் இதில் நீங்கள் கேட்க முடியும். தயாரிப்புகளை ஒப்பிடுவது, பயணங்களைத் திட்டமிடுவது மற்றும் பல்வேறு சவாலான பணிகளுக்கு பலரும் தற்போது கூகுள் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
ஏஐ தொழில்நுட்பம், பயனர்களுக்கு தேவையானவற்றை மிகவும் சரியாகத் தருகிறது. ஆன்லைனில் சரியான பயனுள்ள தகவல்களைப் பெற இது உதவுகிறது. அதற்கான புதிய வாய்ப்புகளை வழங்குகிறது.
கூகுளின் தரம், தரநிலைகளின் அடிப்படையில் இது கட்டமைக்கப்பட்டுள்ளது. துல்லியமான முடிவுகளுக்கு புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறது. ஏஐ உறுதியான தகவல்களை பெற முடியவில்லை எனில், சரியான தகவல்கள் என்ன இருக்கிறதோ அதை மட்டுமே வழங்கும். தற்போதைய ஏஐ தொழில்நுட்பத்தில் சில முடிவுகள் சரியாக இல்லை எனினும் காலப்போக்கில் அது மேம்படுத்தப்படும் என்று கூகுள் தெரிவித்துள்ளது.