
உலக அளவில் இரண்டாயிரம் கோடி ரூபாய் வசூல் செய்த ஒரே இந்திய திரைப்படமான `தங்கல்’ திரைப்படத்தின் இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில், இதுவரை எந்த இந்திய படமும் காணாத அதிக செலவில் `ராமாயணா’ திரைப்படம் எடுக்கப்பட்டு வருகிறது.
நமித் மல்ஹோத்ரா மற்றும் யஷ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில், ராமர் கதாபாத்திரத்தில் இந்தி நடிகர் ரன்பீர் கபூர், ராவணன் கதாபாத்திரத்தில் கன்னட நடிகர் யஷ், சீதை கதாபாத்திரத்தில் தமிழ் நடிகை சாய் பல்லவி ஆகியோர் நடிக்கின்றனர்.
இப்படத்துக்கான கிராபிக்ஸ் பணிகளை, 8 ஆஸ்கர் விருதுகளை வென்றிருக்கும் ‘DNEG’ என்ற கிராபிக்ஸ் நிறுவனம் செய்கிறது.

மேலும், இப்படத்துக்கு இந்திய ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரஹ்மானும், ஹாலிவுட் ஆஸ்கர் நாயகன் ஹான்ஸ் ஸிம்மரும் இணைந்து இசையமைக்கின்றனர்.
இவ்வாறு மிகப்பெரிய பட்ஜெட்டில் நட்சத்திர பட்டாளத்துடன் இரண்டு பாகங்களாக உருவாகும் இப்படத்தின் முதல் பாகத்தை 2026 தீபாவளியன்றும், இரண்டாவது பாகத்தை 2027 தீபாவளியன்றும் வெளியிடவிருக்கிறார்கள்.
இந்த நிலையில், ஹான்ஸ் ஸிம்மருடன் முதல்முறையாக இணைந்து பணியாற்றும் அனுபவம் குறித்து ஏ.ஆர். ரஹ்மான் மனம் திறந்திருக்கிறார்.
Connect Cine நேர்காணலில் பேசிய ஏ.ஆர். ரஹ்மான், “ராமாயணா போன்ற மிகப்பெரிய படத்தில் ஹான்ஸ் ஸிம்மருடன் நான் பணியாற்றுவேன் என்று யாராவது நினைத்துப் பார்த்திருப்பார்களா…
இருவருக்குமான முதல் சில அமர்வுகள் சிறப்பாக இருந்தன. முதல் அமர்வு லண்டனிலும், இரண்டாவது அமர்வு லாஸ் ஏஞ்சல்ஸிலும், மூன்றாவது அமர்வு துபாயிலும் நடந்தது.

இந்திய கலாச்சாரத்தைப் பற்றி ஆர்வமாகவும், விமர்சனத்துக்கு திறந்த மனதுடனும் அவர் இருக்கிறார்.
கதை உரையாடலின்போது, ‘இதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை, நான் ஒரு மேற்கத்திய கண்ணோட்டத்தைக் கொண்டு வர முடியுமா?’ என்று வெளிப்படையாகப் பேசினார்.
இப்படத்தைப் பற்றி நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இது நம் இந்திய கலாச்சாரம். எல்லாம் நன்றாக நடக்கும் என்று நம்புகிறேன்” என்று கூறினார்.