1000044510

கேரள மாநிலம் முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான உம்மன் சாண்டி மறைந்து ஓராண்டை முன்னிட்டு அவரது முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி கூட்டம் இன்று நடைபெற்றது.

அதில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு கோட்டயம் புதுப்பள்ளியில் உள்ள உம்மன் சாண்டி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

அந்த நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பேசுகையில், “2004 முதல் நான் அரசியலில் உள்ளேன். எனக்கு மிக விசாலமான அரசியல் அனுபவம் இல்லை. ஆனால், இந்திய அரசியலைப்பற்றிய சரியான அரசியல் அனுபவம் இருக்கிறது.

பலவிதமான அரசியல் தலைவர்களை நான் பார்த்திருக்கிறேன். அதில் மிகச் சிறப்பாக பேசும் அரசியல் தலைவர்களை நான் பார்த்திருக்கிறேன். நன்றாக சிந்திக்கும் தலைவர்களையும் பார்த்திருக்கிறேன். சில அரசியல் தலைவர்கள் மிகச் சிறப்பாக பேசுகிறார்கள், சிலர் அழகாக சிந்திக்கிறார்கள். ஒரு விஷயத்தைப் பற்றி நாம் பேசுவதற்கு முன்பு அது என்னவென்று சிந்திப்பது மட்டும் அல்ல, அதைப்பற்றி நாம் பீல் செய்ய வேண்டும். தங்கள் உணர்வுகளை புரிந்து கொள்ளும் தன்மை அரசியல் தலைவர்களுக்கு வேண்டும் என்பதைதான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

உம்மன் சாண்டி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய ராகுல் காந்தி

குறிப்பாக ஒரு விவசாயி மழை பெய்யுமா, குடும்பத்தை காப்பாற்ற முடியுமா என்பது பற்றி நினைப்பதை நீங்கள் உணர்ந்துள்ளீர்களா?.

வயநாட்டில் வன விலங்குகளால் மக்கள் தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள். அந்த மக்களின் பிரச்னை பற்றி பேச உங்களால் முடியும். ஆனால், அங்குள்ள சிறுவர்களின் உணர்வுகளை, புலி முன்னே வந்த சமயத்தில் அந்த மனிதரின் மனதில் தோன்றிய எண்ணத்தை உங்களால் புரிந்துகொள்ள முடியுமா? அரசியல் என்பது பேசுவதும், சிந்திப்பதும் மட்டும் அல்ல  மனிதனின் உள்ளத்தை புரிந்துகொண்டு அவரது உணர்வை ஃபீல் செய்வதாகும்.

அரசியலில் இவ்வளவு நாள்களில் உள்ள அனுபவத்தின் அடிப்படையில் இளைஞர்கள் என்னிடம் பேசுவதை நான் கவனமாக கேட்பேன். மக்களை பற்றி கவலைப்படும் உணர்வு அவர்களிடம் உள்ளதா என்பதை தெரிந்துகொள்வேன்.

நான் எதற்காக அரசியலை பற்றியும், உணர்வுகளை பற்றியும், ஃபீலிங்ஸ் பற்றியும் பேசுகிறேன் என நீங்கள் நினைக்கலாம். எனது 21 வருட அரசியல் அனுபவத்தில் மக்களை உணர்ந்துகொள்ளும் தலைவராக இருந்தவர் உம்மன் சாண்டி என்பதை நான் புரிந்துகொண்டேன்.

உம்மன் சாண்டி நினைவிடத்தில் ராகுல் காந்தி

பாரத் ஜோடோ யாத்திரையின்போது உம்மன் சாண்டி என்னுடன் நடக்க உள்ளதாக தெரிவித்தார். ஆனால் மருத்துவர்கள் அவரை நடக்கக்கூடாது என தெரிவித்தனர். அதையும் மீறி அவர் என்னுடன் நடந்தார். அவரை நடக்க வேண்டாம் என வற்புறுத்தி காரில் அமரச்சொன்னேன். உம்மன்சாண்டி ஒரு தனிமனிதன் மட்டும் அல்ல அவர் கேரளாவின் வெளிப்பாடு. உம்மன் சாண்டி போன்ற நிறைய ஆள்களை வளர்த்து கொண்டுவரவேண்டும் என்பதுதான் என் ஆசை.

உம்மன்சாண்டியிடமிருந்து பல விஷயங்கள் நான் கற்றுக்கொண்டேன். நியாயம் இல்லாத மிகவும் குரூரமான அரசியல் தாக்குதலை அவர் எதிர்கொண்டார். அவரைப்பற்றி தொடர்ந்து பொய்களை பரப்பினார்கள். அந்த காலகட்டத்தில் நான் அவரிடம் போனில் பேசிக்கொண்டிருந்தேன். அப்போதும் அவர் மற்றவர்களைப்பற்றி குற்றம்சாட்டி பேசியது இல்லை.

அவர் மக்களைப்பற்றி மட்டுமே சிந்தித்துக்கொண்டிருந்தார். நான் ஆர்.எஸ்.எஸையும், சி.பி.எம் கட்சியையும் எதிர்க்கிறேன். அவர்களைப் பற்றிய குற்றச்சாட்டு ஒன்று உள்ளது.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

ஆர்.எஸ்.எஸுக்கும், சி.பி.எம்-க்கும் மக்களை குறித்த புரிந்துணர்வு இல்லை. அவர்களுக்கு நிறைய கொள்கைகள் இருக்கலாம். அவர்களால் நிறைய பேச முடியும். ஆனால், மக்களுக்கள் மீது அன்பு இல்லை என்றால், அவர்களின் உணர்வுகளை புரிந்துகொள்ள முடியாமல் இருந்தால், அவர்களிடம் அன்பு செலுத்தாமல் இருந்தால், அவர்களை கட்டியணைக்க முடியாமல் இருந்தால் நீங்கள் ஒரு தலைவராக ஆக முடியாது.

இந்திய அரசியலில் மிகப்பெரிய துயரம் இதுதான். மக்களின் உணர்வுகளை உணர்ந்துகொள்ளவும், அவர்கள் கூறுவதை கேட்கவும் மறுக்கிறார்கள் என்பதுதான் நான் அரசியல்வாதிகள் மீது வைக்கும் குற்றச்சாட்டு” என்றார்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest