
பாகிஸ்தானில் பெய்து வரும் கனமழையால், அந்நாட்டின் பஞ்சாப் மாகாணத்திலுள்ள சிறையில் வெள்ளம் ஏற்பட்டு, 700-க்கும் மேற்பட்ட சிறைக் கைதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானில் கடந்த சில வாரங்களாகப் பெய்த கனமழையால், அந்நாட்டின் பஞ்சாப் மாகாணத்திலுள்ள மண்டி பஹாவுத்தீன் மாவட்டத்தின் சிறையில், வெள்ளம் ஏற்பட்டு குறைந்தது 5 அடி உயரத்துக்கு வெள்ள நீர் சூழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, அந்தச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அபாயாகரமான குற்றவாளிகள் உள்பட 700-க்கும் மேற்பட்ட சிறைக் கைதிகளை, மாவட்ட நிர்வாகம் வெளியேற்றி, ஹஃபிசாபாத் மாவட்ட சிறைக்கு இடமாற்றியுள்ளது.
பலத்த பாதுகாப்புடன் மேற்கொள்ளப்பட்ட இந்த மீட்பு நடவடிக்கைகளின்போது எந்தவொரு கைதியும் தப்பிக்க முயற்சிக்கவில்லை என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஜூன் 25 ஆம் தேதி முதல் பெய்யும் கனமழையால், அந்நாட்டின் பஞ்சாப் மாகாணத்தின் மண்டி பஹாவுத்தீன் உள்பட ஏராளமான மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
முன்னதாக, பாகிஸ்தானில் தற்போது பெய்து வரும் கனமழையின் பாதிப்புகளினால், சுமார் 170 பேர் பலியாகியுள்ளனர். இதில், பஞ்சாப் மாகாணத்தில் மட்டும் 109 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: கத்தார் உதவியுடன்… 81 ஆப்கன் மக்களை வெளியேற்றிய ஜெர்மனி!