
சட்டவிரோதக் காவலில் கைதியை சித்திரவதை செய்வதைப்போல வரதட்சணை கேட்டு மனைவியை சித்திரவதை செய்த போலீஸ்காரரின் செயல் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சாதாரண குடும்பம் முதல் வசதியான குடும்பப் பெண்கள் வரை வரதட்சணை கொடுமையால் வன்முறைக்கு உள்ளாவதும், தற்கொலை செய்வதும், கொலை செயப்படுவதும் தமிழகத்தில் தொடர்கதையாகி வருகிறது.
குடும்ப வன்முறையிலிருந்து பாதுகாத்துக்கொள்ள காவல்துறையினரை பெண்கள் நம்பியிருக்கும் நிலையில், போலீஸ்காரரான கணவரும், இன்ஸ்பெக்டரான மாமனாரும் அவர்களின் குடும்பத்தினரும் சேர்ந்து மருமகளை சித்திரவதை செய்துள்ளனர். அதுமட்டுமின்றி, தான் செய்த கொடூரத்தை போலீஸ் கணவன், தன் தங்கையிடம் சொல்லி மகிழ்ச்சியைடைந்த ஆடியோ வெளியாகி மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
மதுரையைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியையான தங்கபிரியாவுக்கும், அப்பன்திருப்பதி காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றும் பூபாலன் என்பவருக்கும் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. பூபாலனின் தந்தை செந்தில்குமரன் விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் இன்ஸ்பெக்டராக பணியாற்றுகிறார்.

இத்தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த சில மாதங்களாக கூடுதல் வரதட்சணை கேட்டு கணவர் பூபாலன், மாமனார் செந்தில்குமரன், மாமியார் விஜயா, கணவரின் தங்கை அனிதா ஆகியோர் தங்கபிரியாவை சித்திரவதை செய்து வந்துள்ளனர்.
60 பவுன் நகை, வெள்ளி பொருள்கள், சீர்வரிசையுடன், இரு சக்கர வாகனம் என பொருள்கள் திருமணத்தின்போது கொடுத்தும் திருபதியடையாமல் வீடு கட்டுவதற்கு பல லட்சம் பணமும், நகையும் கூடுதலாக வேண்டும் என தொடர்ந்து வற்புறுத்தி துன்புறுத்தி வந்துள்ளனர். கொடுமை தாங்காமால் இடையில் பெற்றோர் வீட்டுக்கு சென்ற தங்கபிரியாவை சமாதானம் பேசி பூபாலன் குடும்பத்தினர் தங்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இந்த நிலையில், தங்கபிரியாவை தினமும் கடுமையாக சித்திரவதை செய்து வந்த பூபாலன், இரண்டு நாள்களுக்கு முன் போலீஸ் கஸ்டடியில் கைதிகளை சித்திரவதை செய்வதைப்போல் தங்கபிரியாவின் முகத்தை நகத்தால் பிராண்டி, கால், கை மூட்டுகளை உடைத்து, குரல்வளையை நெறித்து சித்திரவதை செய்துள்ளார். இதனால் தங்கபிரியா மிக மோசமான நிலையை அடைந்தார்.

இந்த தகவல் தங்கபிரியாவின் பெற்றோருக்கு தெரிந்து உயிருக்கு போராடிக்கொண்டிருதவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்ததனர். தற்போது அவசர சிகிச்சைப் பிரிவில் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார்.
‘நாங்கள் போலீஸ் குடும்பம், எங்களை ஒன்றும் செய்ய முடியாது’ என்று எல்லோரிடமும் ஆணவமாகப் பேசி வந்தது மட்டுமின்றி, மனைவியை எப்படியெல்லாம் அடித்து சித்திரவதை செய்தேன், அடித்ததில் தனக்கே உடம்பு வலிக்கிறது என்று சிறிதும் குற்ற உணர்வில்லாமல் தன் தங்கையிடம் போனில் உற்சாகமாக தெரிவித்துள்ளார் பூபாலன். இந்த போன் ஆடியோ தற்போது வெளியாகி அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
தங்கபிரியாவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய காவல்துறையினர், கணவர் பூபாலன், மாமனார் செந்தில்குமரன் உள்பட 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்து தலைமுறைவான நான்கு பேரையும் 3 தனிப்படை போலீசார் மூலம் தேடி வருகின்றனர். இதற்கிடையே பூபாலனை சஸ்பெண்ட் செய்து மதுரை சரக டிஐஜி உத்தரவிட்டுள்ளார்.