
ராஞ்சி: ஆசியாவிலேயே மிகப்பெரிய பன்னோக்கு மருத்துவமனையாக ’ரிம்ஸ்-2’ என்னும் திட்டம் அமையவுள்ளது.
ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் ‘ராஜேந்திரா மருத்துவ அறிவியல் நிறுவனம்(ரிம்ஸ்-2)’ அமையவுள்ளது. ஆசியாவிலேயே மிகப்பெரிய சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனையாக ரிம்ஸ்-2 அமையவுள்ளதால் கூடுதல் கவனத்தைப் பெற்றுள்ளது.
ரிம்ஸ்-2 மருத்துவமனை திட்டமானது, நோயாளிகளுக்கென 2,600 படுக்கைகளுடன் மிகப் பிரம்மாண்டமாக கட்டப்பட உள்ளது. மருத்துவத்துறையின் அனைத்து பிரிவுகளையும் உள்ளடக்கிய ஒரே வளாகமாகவும் இது திகழும். தில்லியின் ஃபரீதாபாத்தில் உள்ள ‘அமிர்தா’ மருத்துவமனை திட்டத்தைப் பின்பற்றி ரிம்ஸ்-2 அமையவுள்ளதாக ஜார்க்கண்ட் சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் இர்ஃபான் அன்சாரி தெரிவித்திருக்கிறார்.
ரிம்ஸ் – 2 திட்டம் குறித்து, ஜார்க்கண்ட் சுகாதாரத் துறை அமைச்சர் பேசியிருப்பதாவது, “ரிம்ஸ் – 2 வெறும் மருத்துவமனை அல்ல. ஜார்க்கண்ட்டின் மருத்துவ அமைப்பை உலக தரத்துக்கு எடுத்துச் செல்வதற்கான நடவடிக்கை. இத்திட்டம் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையின்கீழ் விரைவாக அமல்படுத்தப்படும். கடந்த 20 ஆண்டுகளாக செயல்படுத்த முடியாத திட்டத்தை இப்போது நனவாக்கவுள்ளோம். ஒட்டுமொத்த தேசத்துக்கும் புது தரத்திலானதொரு சுகாதார அமைப்பாக ‘ரிம்ஸ்-2’ மருத்துவமனை வருங்காலத்தில் அமையும்” என்றார்.
இத்திட்டத்திற்கான பெரும்பகுதி நிதியை ஆசிய வளர்ச்சி வங்கியிலிருந்து பெறப்படவுள்ளது. அதன்படி, ரூ. 1,000 கோடி நிதியுதவி பெறப்பட்டு இத்திட்டம் சாத்தியமாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதிச் செலவை மாநில அரசு ஏற்றுக்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் நிறைவடைந்த பின்னர், கிழக்கு இந்திய பகுதிகளுக்கான முக்கிய சுகாதார மையமாகவும், மருத்துவ சுற்றுலா தலமாகவும் ஜார்க்கண்ட் மாறுவது மட்டுமில்லாது, ஒட்டுமொத்த தேசத்துக்குமான மருத்துவ சுற்றுலா தலமாகவும் விளங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.