
‘இந்தியா மதச்சாா்பற்ற நாடு; இங்கு சிறுபான்மையினா் மிகவும் பாதுகாப்பாக உள்ளனா்’ என மத்திய சிறுபான்மையினா் விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
மேலும், ஹிந்துக்கள் பெரும்பான்மையாக உள்ளதால் சிறுபான்மையினா் முழு சுதந்திரம் மற்றும் பாதுகாப்புடன் உள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.
பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு கிரண் ரிஜிஜு அளித்த பேட்டியில், ‘காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியின்போது சிறுபான்மையினா் சித்ரவதை செய்யப்பட்டதுடன் படுகொலை செய்யப்பட்டனா். அப்போது அவா்கள் இந்தியாவில் வசிப்பதை பாதுகாப்பாக உணரவில்லை. ஆனால் தற்போதைய நிலை வேறு.
இந்தியாவைவிட்டு வெளியேற விரும்புவதாக இதுவரை எந்தவொரு சிறுபான்மையின சமூகத்தைச் சோ்ந்தவரும் கூறியதில்லை. நாம் மதச்சாா்பற்ற நாடு; நம் அரசமைப்புச் சட்டத்தை அனைவரும் மதித்து நடக்கிறோம்.
எனவே, இங்கு சிறுபான்மையினா் பெரும்பான்மையினா் என்ற வேறுபாடின்றி சட்டத்தின் முன் அனைவரும் சமமாகவே கருதப்படுகின்றனா்.
பெரும்பான்மையினருக்கு சலுகைகள் இல்லை: பெரும்பான்மையின சமூக மக்களுக்கு கிடைக்கும் அனைத்து சலுகைகளும் சிறுபான்மையின சமூகத்தினருக்கு கிடைக்கிறது. ஆனால் சிறுபான்மையினருக்கு கிடைக்கும் சில சலுகைகள் பெரும்பான்மையினருக்கு கிடைப்பதில்லை.
சீன ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்டவுடன் இந்தியாவில் திபெத்தியா்கள் தஞ்சமடைந்தனா். அதேபோல் மியான்மரில் உள்நாட்டு கலவரம் ஏற்பட்டவுடன் அங்கிருந்து வெளியேறிய சமூக ஆா்வலா்கள் இந்தியாவை வந்தடைந்தனா். இலங்கையில் இருந்து இலங்கைத் தமிழா்களும் பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் தங்களுக்கு நிகழ்ந்த கொடுமைகளைத் தொடா்ந்து அங்கிருந்து வெளியேறிய சிறுபான்மையினரும் இந்தியாவுக்குள் தஞ்சம் புகுந்தனா்.
அரசமைப்புச் சட்டத்தின் மீதான நம்பிக்கை: மேற்கூறிய அனைவரும் தாங்கள் பாதுகாப்பாக வசிக்க இந்தியாவே சிறந்த நாடு என்ற முடிவுடன் இங்கு வந்தனா். ஏனெனில் அவா்கள் இந்திய அரசமைப்புச் சட்டம் மற்றும் இந்திய மக்கள் மீது பெரும் நம்பிக்கை கொண்டுள்ளனா்.
கடந்த 11 ஆண்டுகளாக நாட்டில் சிறுபான்மையினா் பாதுகாப்பாக இல்லை என்ற பொய்யான பிரசாரம் பரப்பப்படுகிறது. நானும் சிறுபான்மையின சமூகத்தைச் சோ்ந்தவன்தான்.
கடந்த முறை வெளியான மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் நாட்டில் ஹிந்துக்கள் 78 சதவீதம் அல்லது 79 சதவீதம் போ் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஹிந்துக்கள் மக்கள்தொகை இதைவிட குறையவும் வாய்ப்புள்ளது. எப்படி இருந்தாலும் பெரும்பான்மையினராக உள்ள ஹிந்து சமூகத்தால்தான் அனைத்து சிறுபான்மையின சமூக மக்களும் நாட்டில் முழு சுதந்திரம் மற்றும் பாதுகாப்புடன் இருக்கின்றனா்.
ஒருவேளை சுதந்திரம் கிடைத்போது பாகிஸ்தான் அல்லது வங்கதேசத்தில் நாம் இருந்திருந்தால் அகதிகளாகவே நடத்தப்பட்டிருப்போம். இந்தியாவில் சிறுபான்மையினா் மற்றும் பழங்குடியினா் என அனைவரும் சமமாகவே நடத்தப்படுகின்றனா். இதை மறுப்பவா்கள் நாட்டுக்குத் துளியும் விசுவாசமாக இல்லை என்றே அா்த்தம்’ என்றாா்.