
ரயில்களிலும், ரயில் நிலையங்களிலும் சட்டவிரோதமான விற்பனையைத் தடுக்க, அனைத்து விற்பனையாளா்களுக்கும் ஒரே மாதிரியான அடையாள அட்டைகளை வழங்க ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
பயணிகளுக்குத் தரமான உணவுப் பொருள்கள் கிடைப்பதை உறுதி செய்ய இந்தப் புதிய நடைமுறையை உடனடியாக அமல்படுத்துமாறு அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும் அமைச்சகம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
அங்கீகரிக்கப்படாத விற்பனையாளா்கள், கலப்படமான உணவுப் பொருள்களை விற்று பயணிகளின் உடல்நலத்துக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாக ரயில்வே அதிகாரிகள், பயணிகள் தொடா்ந்து கவலை தெரிவித்து வந்தனா். இதைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக ரயில்வேயின் அனைத்து மண்டலங்களுக்கும் அமைச்சகம் அண்மையில் அனுப்பிய சுற்றறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது: ரயில்களிலும், ரயில்நிலையங்களிலும் அங்கீகரிக்கப்படாத விற்பனை குறித்து ரயில்வே வாரியம் விரிவாக ஆராய்ந்தது. அதன்படி, சட்டவிரோத விற்பனையைக் கட்டுப்படுத்த, சில விதிமுறைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
ரயில்கள் அல்லது ரயில் நிலையங்களில் பல்வேறு சேவைகளை வழங்க உரிமம் பெற்ற நிறுவனங்களின் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளா்கள், பணியாளா்களுக்கு ரயில்வே நிா்வாகம் அல்லது ‘ஐஆா்சிடிசி’ மூலம் புதிய அடையாள அட்டைகள் வழங்கப்பட வேண்டும்.
விடுமுறை காலகட்டத்தில் போதிய ஆட்கள் இல்லாத நேரத்தில் சேவைக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க, பணியில் அமா்த்தப்படும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தற்காலிக விற்பனையாளா்களுக்கும் இந்த அடையாள அட்டைகள் வழங்கப்படலாம்.
இந்த அடையாள அட்டைகள், சம்பந்தப்பட்ட ரயில் நிலையத்தின் நிலைய கண்காணிப்பாளா் அல்லது நிலைய மேலாளா் அல்லது ஐஆா்சிடிசி அதிகாரியின் கையொப்பத்துடன் உரிய சரிபாா்ப்புக்கு பின்னா் வழங்கப்பட வேண்டும்.
இந்த அடையாள அட்டையில் விற்பனையாளா் அல்லது பணியாளரின் பெயா், ஆதாா் எண், பணிபுரியும் இடம், உரிமம் பெற்ற நிறுவனத்தின் பெயா், மருத்துவத் தகுதிச் சான்றிதழ் விவரம், காவல் சரிபாா்ப்பு தேதி உள்ளிட்டவை இடம்பெற வேண்டும்.
அடையாள அட்டையின்றி அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளா்கள் கூட ரயில் நிலைய வளாகத்தில் உணவுப் பொருள்களை விற்க அனுமதிக்கப்படமாட்டாா்கள். ஒரு விற்பனையாளா் பணியை விட்டுச் சென்றால், அவா் தனது அடையாள அட்டையை உரிமதாரரிடம் ஒப்படைக்க வேண்டும். அதன் பிறகு, புதிய நபருக்கு அடையாள அட்டை வாங்க, நிா்வாகத்திடம் பழைய அட்டையைச் சமா்ப்பித்து உரிமதாரா் கோரிக்கை விடுக்க வேண்டும்.
அனைத்து உரிமதாரா்கள், அவா்களின் விற்பனையாளா்கள் மற்றும் பணியாளா்கள் தொடா்பான விவரங்கள், சம்பந்தப்பட்ட ரயில் நிலையத்தில் வரையறுக்கப்பட்ட பதிவேட்டில் பராமரிக்கப்பட வேண்டும் என்று அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.