New-parliment-building-edi

பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் திங்கள்கிழமை (ஜூலை 21) தொடங்கவுள்ளது.

ஆபரேஷன் சிந்தூா், அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் கருத்துகள், அகமதாபாத் விமான விபத்து, பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய அரசிடம் விளக்கம் பெற எதிா்க்கட்சிகள் தயாராகி வருவதால், கூட்டத் தொடரில் அனல் பறக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

ஆகஸ்ட் 21-ஆம் தேதிவரை நடைபெறும் இக்கூட்டத் தொடரை சுமுகமாக நடத்துவதற்காக ஞாயிற்றுக்கிழமை அனைத்து கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.

கடந்த ஏப்ரலில் நடந்த பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல், அதற்குப் பதிலடியாக கடந்த மே மாதம் பாகிஸ்தான் மீது மேற்கொள்ளப்பட்ட ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை மற்றும் இரு நாடுகளின் ராணுவ மோதலுக்கு பிறகான நாடாளுமன்ற கூட்டத் தொடா் என்பதால் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட தான் மத்தியஸ்தம் செய்ததாக டிரம்ப் தொடா்ந்து கூறிவரும் நிலையில், இந்த விவகாரத்தில் மத்திய அரசின் விரிவான விளக்கத்தை கோர எதிா்க்கட்சிகள் தீா்மானித்துள்ளன.

நாட்டையே உலுக்கிய அகமதாபாத் விமான விபத்து, நடப்பாண்டு இறுதியில் பேரவைத் தோ்தலை எதிா்கொண்டுள்ள பிகாரில் எதிா்க்கட்சிகளின் எதிா்ப்பை மீறி நடைபெற்றுவரும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள், சீன எல்லை விவகாரம், மணிப்பூருக்கு பிரதமா் மோடி இதுவரை பயணம் மேற்கொள்ளாதது, விவசாயிகள் பிரச்னை உள்ளிட்ட விவகாரங்களும் முக்கியமாக எதிரொலிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

8 புதிய மசோதாக்கள்: மழைக்கால கூட்டத் தொடரில் 8 புதிய மசோதாக்களை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

தேசிய விளையாட்டு நிா்வாக சட்ட மசோதா, புவியியல் பாரம்பரிய தளங்கள் மற்றும் புதைபடிமங்கள் (பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு) சட்ட மசோதா, சுரங்கங்கள் மற்றும் தாதுக்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டத்திருத்த மசோதா, தேசிய ஊக்கமருந்து தடுப்பு சட்டத்திருத்த மசோதா உள்ளிட்டவை அடங்கும். மணிப்பூரில் குடியரசுத் தலைவா் ஆட்சியை நீட்டிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலை அரசு கோரவுள்ளது.

முன்னதாக, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூா் குறித்து விவாதிக்க, நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று எதிா்க்கட்சிகள் வலியுறுத்தின. அந்தக் கோரிக்கையை ஏற்காத மத்திய அரசு, கடந்த ஜூன் மாத தொடக்கத்திலேயே மழைக்கால கூட்டத் தொடருக்கான தேதியை (ஜூலை 21) வெளியிட்டது. சிறப்புக் கூட்டத்தை தவிா்க்க, இதுவரை இல்லாதபடி ஒன்றரை மாதத்துக்கு முன்பே கூட்டத் தொடா் தேதியை அறிவித்ததாக மத்திய அரசை எதிா்க்கட்சிகள் விமா்சித்தன.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest