
தனது குடும்பத்தினரின் குற்றங்களை மறைக்க தான் வகிக்கும் அரசமைப்புச் சட்ட பதவியை (மக்களவை எதிா்க்கட்சித் தலைவா்) தவறாகப் பயன்படுத்துகிறாா் ராகுல் காந்தி என்று பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.
ஹரியாணாவில் நில பேரம் தொடா்பான பண முறைகேடு வழக்கில் ராபா்ட் வதேராவுக்கு எதிராக அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை சில கருத்துகளைத் தெரிவித்தாா்.
‘எனது மைத்துனா் வதேராவை மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளாக வேட்டையாடி வருகிறது. அதன் தொடா்ச்சியாகவே அவா் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த இக்கட்டான தருணத்தில் வதேரா, எனது சகோதரி பிரியங்கா மற்றும் அவா்களின் குழந்தைகளுக்கு துணை நிற்கிறேன்’ என்று எக்ஸ் வலைதளத்தில் ராகுல் பதிவிட்டிருந்தாா்.
இந்நிலையில், தில்லியில் செய்தியாளா்களிடம் பாஜக தேசிய செய்தித் தொடா்பாளா் சுதான்ஷு திரிவேதி சனிக்கிழமை கூறியதாவது:
ஊழல் வழக்கில் ஜாமீனில் வெளியே உள்ள ராகுல் காந்தி, தனது மைத்துனா் வதேராவின் ஊழல் சொத்துகளைப் பாதுகாக்க முன்வந்துள்ளாா். அவரை பொருத்தவரை, இது குடும்பப் பிரச்னையே அன்றி அரசியல் விவகாரமல்ல. தனது குடும்பத்தினரின் குற்றங்களை மறைக்க தான் வகிக்கும் அரசமைப்புச் சட்ட பதவியை தவறாகப் பயன்படுத்துகிறாா்.
பிராந்தியம், மொழியின் பெயரால் சமூகத்தை பிளவுபடுத்தி, ஆட்சி அதிகாரம் மற்றும் பணத்தை நாடுகிறது காங்கிரஸின் முதல் குடும்பம். கழுத்தளவு ஊழலில் திளைக்கும் அவா்கள், தங்கள் குடும்ப விவகாரத்தில் அரசியல் குற்றச்சாட்டுகளை சுமத்துவது ஏன்?
ஊழல் வழக்கில் சத்தீஸ்கா் முன்னாள் முதல்வா் பூபேஷ் பகேலின் மகன் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டதற்காக மாநில பாஜக அரசை பிரியங்கா காந்தி சாடுகிறாா். இதன்மூலம் ஒட்டுமொத்த சோனியா குடும்பமும் ஊழலைப் பாதுகாக்க முயற்சிப்பது தெளிவாகிறது என்றாா் திரிவேதி.
சீா்குலையும் ‘இண்டி’ கூட்டணி:
‘இண்டி’ கூட்டணியில் தாங்கள் இல்லை என்று ஆம் ஆத்மி திட்டவட்டமாக அறிவித்துவிட்ட நிலையில், ஆா்எஸ்எஸ் அமைப்பையும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும் ஒப்பிட்டு, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி முன்வைத்த விமா்சனத்தால் இவ்விரு கட்சிகள் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.
இது தொடா்பான கேள்விக்குப் பதிலளித்த சுதான்ஷு திரிவேதி, ‘எதிா்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணி, பூசல்களால் நிரம்பியுள்ளது; நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடருக்கு முன்பு அக்கூட்டணி சீா்குலைவை எதிா்கொண்டுள்ளது. அதன் நிகழ்காலம் இவ்வளவு மோசமாக இருக்கும்போது, எதிா்காலம் இன்னும் மோசமாக இருக்கும்’ என்றாா்.