E0AEAEE0AEA3E0AEAEE0AE95E0AEB3E0AF81E0AE9FE0AEA9E0AF8D-E0AE9AE0AE95E0AF8BE0AEA4E0AEB0E0AEB0E0AF8DE0AE95E0AEB3E0AF8D-E0AEAAE0AEBFE0AEB0E0AEA4E0AF80E0AEAAE0AF8D-E0AE95E0AEAAE0AEBFE0AEB2E0AF8D

ஒரு ஆணை இரண்டு பெண்கள் திருமணம் செய்வதைப்பற்றி கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால் ஹிமாச்சல பிரதேசத்தில் ஒரு பெண் இரண்டு சகோதரர்களை ஒரே நேரத்தில் திருமணம் செய்துள்ளார்.

அங்குள்ள சிர்மௌர் மாவட்டத்தில் டிரான்ஸ்கிரி பகுதியில் இருக்கும் ஷில்லை என்ற கிராமத்தை சேர்ந்த சுனிதா செளகான் என்ற பெண் பிரதீப் மற்றும் கபில் ஆகிய இரண்டு சகோதரர்களை ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்தில் நாட்டுப்புற நடனங்களும், பாடல்களும் இடம் பெற்றது. அவர்களது திருமண வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி இருக்கிறது.

மணமகளுடன் சகோதரர்கள் பிரதீப், கபில்

திருமணம் குறித்து மணமகள் சுனிதா..

நாங்கள் எந்த வித நிர்ப்பந்தத்திற்கும் பணிந்து இத்திருமணத்தை செய்து கொள்ளவில்லை என்று சகோதரர்கள் இரண்டு பேரும் தெரிவித்துள்ளனர். திருமணத்திற்கு உறவினர்கள் அனைவரும் வந்து வாழ்த்தினர்.

இத்திருமணம் குறித்து பேசிய மணமகள் சுனிதா,”எனக்கு எங்களது பாரம்பர்யம் தெரியும். நான் எந்த வித நிர்ப்பந்தத்திற்கும் பணிந்து இத்திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. அவர்களது சகோதர பிணைப்பிற்கு நான் மரியாதை கொடுக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

மணமகன்கள் சொல்வதென்ன?

பிரதீப் அரசு ஊழியராக இருக்கிறார். அவரது சகோதரர் கபில் வெளிநாட்டில் வசிக்கிறார். இது குறித்து பிரதீப் கூறுகையில், “நாங்கள் பாரம்பரியத்தை பகிரங்கமாகப் பின்பற்றுகிறோம். அதற்காக நாங்கள் பெருமைப்படுகிறோம், இது எங்களின் கூட்டு முடிவு” என்று கூறினார்.

இது குறித்து கபில் கூறுகையில், ”திருமணத்தின் மூலம் ஒருங்கிணைந்த குடும்பமாக எங்கள் மனைவிக்கு ஆதரவு, ஸ்திரத்தன்மை மற்றும் அன்பை நாங்கள் உறுதி செய்திருக்கிறோம். நாங்கள் எப்போதும் வெளிப்படைத்தன்மையை நம்புகிறோம்” என்று கூறினார்.

மணமகளுடன் சகோதரர்கள் பிரதீப், கபில்

`ஜோடிதாரா’ முறை

இது போன்று ஒரே பெண்ணை இரண்டு ஆண்கள் திருமணம் செய்யும் முறைக்கு ஹிமாச்சல பிரதேச சட்டத்தில் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இதனை `ஜோடிதாரா’ என்று அங்குள்ள மக்கள் கூறுகின்றனர். டிரான்ஸ்கிரி பகுதியில் கடந்த 6 ஆண்டில் இது போன்று 5 திருமணங்கள் நடந்துள்ளது.

ஹட்டி இன மக்கள் ஹிமாச்சல பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் எல்லையில் வசிக்கின்றனர். 450 கிராமங்களில் 3 லட்சம் ஹட்டி இன மக்கள் வசிக்கின்றனர்.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்புதான் அவர்களை மத்திய அரசு பழங்குடியினராக அங்கீகரித்தது. இச்சமுதாயத்தில் ஒரே பெண்ணை இரண்டு ஆண்கள் திருமணம் செய்து கொள்வது பல நூறு ஆண்டுகளாக இருந்து வரும் பழக்கமாகும். ஆனால் வளர்ச்சி மற்றும் கல்வியறிவு ஏற்பட்ட பிறகு இது போன்ற திருமணங்கள் நடப்பது குறைந்துபோனது.

மணமகளுடன் சகோதரர்கள் பிரதீப், கபில்

ஹட்டி சமூகத்தின் பாரம்பர்ய முறை

இதுபோன்ற திருமணங்கள் ரகசியமாக நடத்தப்பட்டு சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன, ஆனால் சமீப காலமாக இது போன்ற நிகழ்வுகள் குறைவாகவே உள்ளன என்று கிராமத்தில் பெரியவர்கள் தெரிவித்தனர்.

சிர்மெளர் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் இன்னும் சில இடங்களில் இது போன்ற திருமணங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இது போன்ற திருமணங்கள் நடப்பதற்கு, மூதாதையர் நிலம் பிரிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்பதே முக்கிய காரணமாக இருக்கிறது.

இது குறித்து ஹட்டி சமூகத்தின் பிரதான அமைப்பான கேந்திரிய ஹட்டி சமிதியின் பொதுச் செயலாளர் குந்தன் சிங் சாஸ்திரி கூறுகையில், ”குடும்பத்தின் விவசாய நிலம் பிரிக்கப்படாமல் இருக்க ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இந்த பாரம்பர்ய முறை கண்டுபிடிக்கப்பட்டது. அதோடு குடும்பம் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்பதும் இதற்கு ஒரு காரணம்” என்றார்.

இத்திருமணத்தின் போது மணமகள் அவரது ஊரில் இருந்து ஊர்வலகமாக மணமகன் ஊருக்கு அழைத்து வரப்பட்டு அங்கு பெரியவர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெறுவது வழக்கம்.

இது தொடர்பான செய்தி சமூக வலைத்தள பக்கத்தில் வெளியானவுடன் நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துகளை பகிர்ந்துள்ளனர்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest