
மங்களூரு: மங்களூரு அருகேயுள்ள தர்மஸ்தலா பகுதியில் மண்ணுக்குள் சுமார் 100 பெண்கள் கொன்று புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் அடுத்தடுத்து சில திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன.
தர்மஸ்தலாவில் அமைந்துள்ள ஸ்ரீ மஞ்சுநாதேஷ்வரர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தலங்களுள் ஒன்றாகும். இந்த கோவில் ’ஜெயின் தர்மாதிகாரி மற்றும் பாஜக ஆதரவுடன் மாநிலங்களவைக்கு எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வீரேந்திர ஹெக்கடேவால்’ நிர்வகிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த கோவில் அருகேயுள்ள கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள், மாணவிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டும், கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு நிர்வாண நிலையில் புதைக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் கர்நாடக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
முழு விவரம்:
தக்ஷிண கன்னடா மாவட்டத்தின் தர்மஸ்தலாவில் 1998 – 2014 வரையிலான காலகட்டத்தில் தூய்மைப் பணியாளராக பணியாற்றிய ஒரு நபர், நிர்வாண நிலையில் இருந்த பல பெண்களின் உடல்களை மண்ணில் குழி தோண்டி புதைத்ததாக கடந்த சில நாள்களுக்கு முன்னர் பகிரங்கமாக புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில், தர்மஸ்தலா காவல் நிலையத்தில் கடந்த ஜூலை 4-இல் முதல் தகவல் அறிக்கை(எஃப்.ஐ.ஆர்.) பதியப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
அதனைத்தொடர்ந்து அந்த நபர், கடந்த ஜூலை 11-இல் பெல்தங்காடி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராகி இந்த கொடூரம் குறித்த விவரங்களை வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் முக்கியமாக, இந்த கொடூர கொலைகளின் பின்னணியில் செல்வாக்குமிக்க பல முக்கிய மனிதர்கள் இருப்பதாகவும், தனது மனசாட்சிக்கு விரோதமாக இந்த குற்றச்செயலில் தானும் இத்தனை நாள்கள் ஈடுபட்டதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும், தனக்கும் தன் குடும்பத்துக்கும் உரிய பாதுகாப்பு அரசு தரப்பிலிருந்து அளிக்கப்படும்பட்சத்தில், உடல்கள் புதைக்கப்பட்டுள்ள இடத்தை அடையாளம் காட்ட தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தனக்கும் தன் குடும்பத்துக்கும் கொலைகாரர்களிடமிருந்து தொடர்ந்து அச்சுறுத்தல் கொடுக்கப்பட்டதால், உயிருக்கு பயந்து 2014-க்குப் பின் அண்டை மாநிலங்களுக்கு பிழைப்பு தேடிச் சென்று ஆங்காங்கே இடம்பெயர்ந்து இத்தனை நாள்களாக வாழ்ந்து வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கான முக்கிய காரணமாக அவர் குறிப்பிடுவது யாதெனில், தர்மஸ்தலாவிலுள்ள ஒரு பள்ளியில் பணியாற்றிய உடற்பயிற்சி ஆசிரியரால் தூய்மைப்பணியாளரது குடும்பத்தைச் சேர்ந்த சிறுமியொருவர் அந்த பள்ளி வளாகத்தில் பாலியல் கொடுமைகளுக்கு ஆளானதாகவும், இதனையடுத்து அவர்கள் தர்மஸ்தலாவிலிருந்து குடும்பமாக இடம்பெயர்ந்துவிட்டதாகவும் தெரிவித்திருக்கிறார்.
இன்னொருபுறம், தூய்மைப் பணியாளரின் புகார் அளிக்கப்பட்ட சில நாள்களுக்குக்கு பின், 60 வயது பெண்மணி ஒருவர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், மருத்துவக் கல்வி பயின்று வந்த தமது மகள் கடந்த 2003-ஆம் ஆண்டிலிருந்து மாயமானதாக குறிப்பிட்டுள்ளார். அவரைத் தேடிக் கண்டுபிடித்து ஒப்படைக்க வேண்டுமென்று வலியுறுத்தியுள்ள அவர், இந்தச் சம்பவமும் தர்மஸ்தலாவிலேயே நிகழ்ந்துள்ளதாகவும் குறிப்பிடுகிறார்.
இதனிடையே, இச்சம்பவத்தின் தீவிரத்தன்மையை அறிந்து இது குறித்து கர்நாடக முதல்வரை அம்மாநில வழக்குரைஞர்கள் அமைப்பினர் கடந்த வியாழக்கிழமை கூட்டாகச் சந்தித்து பேசினர். அப்போது முதல்வரிடம், ‘காவல் நிலையத்தில் இச்சம்பவம் தொடர்பாக புகார் அளிக்கப்பட்டு சுமார் 3 வார காலமாகிவிட்டது. ஆனால், காவல் துறையால் முனைப்புடன் எந்தவொரு விசாரணையும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அறிய முடியவில்லை. இது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி வி. கோபால கௌடாவும் இதே கருத்தை வலியுறுத்தியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து முதல்வர் சித்தராமையா வெள்ளிக்கிழமை பேசும்போது: “புகார் அளித்துள்ள நபர் 10 வருடங்களுக்குப் பின், இப்போது வந்து வாக்குமூலம் அளித்திருக்கிறார். அவர், பெண்களின் உடல்கள் புதைக்கப்பட்ட இடங்களை அடையாளம் காண்பிப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். ஆகவே, காவல் துறையால் முதல்கட்ட விசாரணை நடத்தப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அதன் அடிப்படையில், முடிவெடுக்கப்படும்.
பொது மக்கள், நீதிபதிகள் போன்றோரின் கோரிக்கைகள் ஒருபுறம் இருந்தாலும், எந்தவித அழுத்தத்துக்கும் அரசு அடிபணியாது. சட்டத்தின்படி என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை மேற்கொள்வோம். சிறப்பு புலனாய்வுக் குழு(எஸ்.ஐ.டி.) அமைக்க வேண்டுமானால் அதுவும் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படும்” என்றிருந்தார்.
இதனிடையே, கர்நாடக மாநில மகளிர் ஆணையமும் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு அரசிடம் வலியுறுத்தியுள்ளது.
இதனையடுத்து, கர்நாடக அரசு 4 ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை இன்று(ஜூலை 20) அமைத்து உத்தரவிட்டுள்ளது.
டிஜிபி ப்ரோனாப் மோகண்ட்டி தலைமையிலான இந்த குழுவில் காவல் துறை டிஐஜி எம். என். அனுசேத், டிசிபி சௌமியலதா, எஸ்பி ஜிதேந்திர குமார் தயாமா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இனி மேற்கண்ட வழக்கின் முழு விசாரணையை இக்குழு மேற்கொண்டு அரசுக்கு அறிக்கையை சமர்ப்பிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: பாலியல் பலாத்காரம்! கோயில் நிலத்தில் 100 பெண்கள் கொன்று புதைப்பு?