ஒரு ரிலீஸ் மூலமாக வைரலாகி இன்று உலகம் முழுக்க தன்னையும் தன் பாடல்களைப் பரிச்சயமாக்கி இருக்கிறார் வாகீசன்.

அந்த ட்ரெண்டைத் தொடர்ந்து தமிழில் தன்னுடைய ஆட்டத்தைத் தொடங்கிவிட்டார்.

இதோ இவரின் வரிகளில் இப்போது ‘சீ போ தூ…’ பாடல் வெளியாகியிருக்கிறது.

அதுமட்டுமல்ல, தமிழ் சினிமாவில் பாடல்களும் பாடிக் கொண்டிருக்கிறார்.

Vaaheesan Interview - Che Pae Thu
Vaaheesan Interview – Che Pae Thu

ஹீரோவாகவும் ஒரு படத்தில் நடிக்கக் கமிட்டாகியிருக்கிறார். இந்தப் புதிய சுயாதீனப் பாடலுக்காக அவரைச் சந்தித்து உரையாடினோம்.

இலங்கைத் தமிழில் நம்மை வாஞ்சையோடு வரவேற்றவரிடம் கேள்விகளை அடுக்கினோம்.

“இந்த சுயாதீனப் பாடல்ல ஜாலியாக எந்த விஷயத்தைப் பற்றி பேசலாம்னு நீங்க முடிவு பண்ணீங்க?”

“இந்தப் பாடலில் முதல்ல ‘சீ போ தூ..’ ங்கிற வரியை வைக்கணும்னு எங்களுக்கு ஐடியாவே இல்லை. பிறகு, அதுதான் பாடலின் தலைப்பாகவும் வந்திருக்கு. ஜாலியாக சில விஷயங்கள் பேசிட்டு, ட்ரெண்டான என்னுடைய பாடலை இதுல வைப்போம்னு இசையமைப்பாளர் தரண் அண்ணா சொன்னார். எனக்குமே அந்தப் பாடலுக்கு அதிகாரப்பூர்வமான பாடலாக வடிவம் கொடுக்கணும்னு தோணிச்சு. எனக்கு எப்போதுமே என்னைத் திருப்திப்படுத்தும் வரிகளைத் தான் எழுதுவேன். அப்படித்தான் இந்தப் பாடலும் பண்ணியிருக்கேன்.”

Vaaheesan Interview - Che Pae Thu
Vaaheesan Interview – Che Pae Thu

“இன்னைக்கு சுயாதீனப் பாடலுக்கு பெரும் வரவேற்பு கிடைச்சிட்டு இருக்கு. சோஷியல் மீடியாவில் நம் பாடலை ஹிட் அடிக்கச் செய்ய ஒரு ஹூக் வார்த்தை தேவைங்கிற பிரஷர்னால கொண்டுவரப்பட்டதுதான் ‘சீ போ தூ…’ வரியா?”

“கிடையவே கிடையாது. என் பாடல் வைரலாகணும்ங்கிற, ட்ரெண்டிங் அடிக்கணும்ங்கிற எண்ணம் எனக்கு இருந்தது. ஆனா, இந்த வரியை வச்சுத்தான் அப்படிப் பண்ணணும்னு நான் யோசிக்கல. முதன் முதல்ல இந்த வார்த்தை பாடல்ல கிடையவே கிடையாது. பாடல் முடிச்சிட்டு கேட்கும்போதுதான் இந்த வார்த்தை வந்தால் நல்லா இருக்கும்னு யோசிச்சு வச்சோமே தவிர, வேற எந்த நோக்கத்திற்காகவும் வைக்கல.”

“இந்தப் பாடலை சந்தோஷ் நாராயணன் பாடியிருக்கார். அவர் என்ன சொன்னார்?”

“இந்தப் பாடல் பற்றி அவர்கிட்ட எதுவும் பேசல. ஆனா, இதுக்கு முன்னாடியே நான் அவரைச் சந்திச்சிருக்கேன். இலங்கையில அவருடைய கான்சர்ட்ல நான் பாடியிருக்கேன். அப்போ என்னை வாழ்த்தியிருக்கார். என்னுடைய ‘பவித்ரா’ங்கிற பாடல் அவருக்கு பிடிக்கும்.”

Vaaheesan Interview - Che Pae Thu
Vaaheesan Interview – Che Pae Thu

“பாடலாசிரியர் யுகபாரதி உங்களை அடையாளப்படுத்தி சமீபத்தில் ஒரு மேடையில் பேசியிருந்தாரே! அவரை மீட் பண்ணீங்களா?”

“என்னுடைய ரீல்ஸ் ட்ரெண்டாகத் தொடங்கின சமயத்திலே அவர் எங்களைக் கூப்பிட்டு பேசினார். அவர் சில வரிகளைக் குறிப்பிட்டு ‘எப்படி எழுதினங்க’னு கேட்டார். அதை எழுதுறதுக்குத்தான் எழுத்தாளர்களாகிய நாங்கள் கஷ்டப்படுறோம். நீங்க எழுதியிருக்கீங்க’னு சொன்னார். நான் ஒலிகளுக்கேற்ப அர்த்தமுள்ள சொற்களைக் கொண்டு வருவேன். அது அவருக்கு பிடிச்சிருந்தது. யுகபாரதி ஐயா மாதிரியான எழுத்தாளர்கள் என்னை அழைத்து கௌரவித்தது எனக்கு பெரிய அடையாளம்!”

“குழுவோடு கமல் ஹாசனை சந்திச்சிருந்தீங்க! அவர் என்ன சொன்னார்?”

“எதிர்பார்க்காமல் அமைந்த தருணம் அது. நாங்கள் அவரைச் சந்திக்கப் போகும்போதே எங்களோட பாடலைக் கேட்டு தாளம் போட்டுட்டு இருந்தார். அப்போதுதான் என்னுடைய பாடலை முதல் முறையாகக் கேட்கிறாரோனு நினைச்சேன். ஆனால், அதுக்கு முன்னாடியே என்னுடைய பாடல்களைக் கேட்டு அதற்கான அர்த்தங்களை விளக்கி என்கிட்ட பேசினார். அவருடனான சந்திப்புக்கு கிடைச்ச 20 நிமிஷத்துல அவரிடம் நான் அதிகம் பேசணும்னு நினைச்சேன். அதுனால நேரத்தை கழிக்க வேண்டாம்னு அவர் முன்னாடி பாடினேன். மற்றபடி அவர் நிறைய விஷயங்களை எங்களுக்குச் சொல்லிக் கொடுத்தார்.”

Vaaheesan Interview - Che Pae Thu
Vaaheesan Interview – Che Pae Thu

“தமிழ் சுயாதீன இசைக் கலைஞர்களில் உங்களுடைய நண்பர்கள் யார்?”

“அறிவு அண்ணா, அசல் கோளாறு என பலரும் என்னுடைய நண்பர்கள்தான். அறிவு அண்ணாவுடைய வரிகள் எனக்கு பிடிக்கும். ராப் பாடகர்கள்னு சொன்னாலே, அவர்களை ஏளனமாகப் பார்க்கும் பார்வை இருக்கு. ஆனால் அவர்களுடைய வரிகளை உன்னிப்பாகக் கவனித்துப் பார்த்தால் அதுல ஆழமான அர்த்தங்கள் இருக்கும். அப்படி அறிவு அண்ணா தன்னுடைய வரிகள்ல பல விஷயங்கள் பேசுவது வேற லெவல்!

அதுபோலத்தான் அசல் கோளாறும். அவருடைய ‘யாரா இந்தப் பையன்’ வரி மட்டும்தான் பலருக்கும் தெரியும். ஆனா, அந்தப் பாடல்ல ‘அழுக்கு கையை வச்சு ஆயிரம் பேர் மறைச்சாலும், சூரியன் திரும்பும் சாயங்காலம் அது மறைந்தாலும்’ங்கிற முக்கியமான வரியும் அந்தப் பாடல்ல இருக்கு. நீங்கள் எவ்வளவுதான் ஒருவரைத் தடுக்க நினைச்சாலும் அவன் வரணும்னு முடிவு பண்ணிட்டா, கண்டிப்பா வருவான்ங்கிறதுதான் அந்த வரியின் அர்த்தம்.

அதே மாதிரி வேடனையும் எனக்கு பிடிக்கும். அவருடைய வரிகளிலும் ரொம்ப முக்கியமான விஷயங்களைப் பேசுவார். அதுபோல சமீபத்தில் முருகன் பாடல் பாடியிருந்த கெளுத்தி தம்பியையும் பிடிக்கும்!”

“வேடனை சந்திச்சிருக்கீங்களா?”

“வேடனை சந்திச்சது கிடையாது. ஆனா மெசேஜ்ல பேசியிருக்கேன். அவருக்கு வணக்கம் தெரிவிச்சப்போ, வணக்கம் சொல்லி ஒரு புலி எமோஜி அனுப்பினார். அப்போதே அவருடைய ஈழத் தன்மை பற்றித் தெரிந்தது! பிறகு அவருடைய தாயை எனக்கு அறிமுகப்படுத்திய பிறகுதான் அவரைப் பற்றி முழுமையாகத் தெரிஞ்சுகிட்டேன்.”

VEDAN
VEDAN

“உங்களுடைய இசைப் பயணத்தைத் தொடங்கும்போது இலங்கையில் எப்படியான களம் இருந்துச்சு? அங்கிருந்த சூழல் உங்களைப் பாதிச்சதா?”

“யுத்தத்தை நாங்க எதிர்கொண்டோம். இந்தியாவில் இருப்பதைவிட சினிமா தொழில்நுட்ப ரீதியாக இலங்கையில நாங்க 20 வருடம் பின்தங்கிதான் இருக்கோம். தொழில்நுட்ப ரீதியாக நாங்க முன்னேறுவதற்கு கொஞ்சம் டைம் எடுத்தது. அதனால, இப்படியான துறை மீது எங்க பெற்றோர்களுக்கு நம்பிக்கை வரல. வீட்டிலும் பொருளாதார ரீதியாகக் கொஞ்சம் பின்தங்கிய குடும்பம். அவங்ககிட்ட பாடல்கள் பண்றதுக்காக பணம் கேட்க முதல்ல தயக்கமாகத்தான் இருந்தது. என்னுடைய நண்பர்கள்தான் அப்படியான தருணத்துல ஹெல்ப் பண்ணினாங்க. பிறகு சோஷியல் மீடியா வந்ததும் அதை இறுக்கமாகப் பிடிச்சு தொடர்ந்து வீடியோக்கள் செய்து முன்னேறத் தொடங்கினோம்.”

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest