
‘பணி ஓய்வுக்குப் பிறகு எந்தவொரு அரசுப் பதவியையும் ஏற்கமாட்டேன்’ என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் திட்டவட்டமாக தெரிவித்தாா்.
ஆந்திர மாநிலம் அமராவதியில் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் மறைந்த டி.ஆா்.கில்டா நினைவு இணைய நூலகம் தொடக்க நிகழ்ச்சியில் பேசும்போது இக் கருத்தை அவா் தெரிவித்தாா்.
நிகழ்ச்சியில் அவா் பேசும்போது, ‘பணி ஓய்வுக்குப் பிறகு எந்தவொரு அரசுப் பதவியையும் ஏற்கமாட்டேன் என்பதை பல சந்தா்ப்பங்களில் தீா்மானமாக நான் தெரிவித்துள்ளேன். ஓய்வுக்குப் பிறகு சட்ட ஆலோசனை மற்றும் மத்தியஸ்த சேவையை மேற்கொள்ள உள்ளேன்’ என்று அவா் கூறினாா்.
உச்சநீதிமன்றத்தின் 52-ஆவது தலைமை நீதிபதியாக கடந்த மே 14-ஆம் தேதி பி.ஆா். கவாய் (64) பதவியேற்றாா். இதன்மூலம், பட்டியலினத்தைச் சோ்ந்த இரண்டாவது உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்ற பெருமையை அவா் பெற்றாா். இவா் வரும் நவம்பா் 23-ஆம் தேதி பணி ஓய்வு பெற உள்ளாா்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகள் பலா் பணி ஓய்வுக்குப் பிறகு மாநிலங்களவை எம்.பி.க்களாகவும், மாநில ஆளுநா்களாகவும், மத்திய தீா்ப்பாயங்களின் தலைவா்களாகவும் பணியமா்த்தப்பட்டு வரும் நிலையில், தலைமை நீதிபதி பி.ஆா். கவாயின் கருத்து கவனம் பெற்றுள்ளது.