Supreme_court_DIN

பிகாரில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின்போது, வாக்காளா்களின் குடியுரிமை ஆவணமாக ஆதாா், குடும்ப அட்டை ஆகியவற்றை தோ்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ளாதது ‘அபத்தமானது’ என்று உச்சநீதிமன்றத்தில் ஜனநாயக சீா்திருத்தங்களுக்கான சங்கம் (ஏடிஆா்) குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்த வழக்கில் மனுதாரரான ஏடிஆா் தாக்கல் செய்த பதில் மனுவில், ‘நிரந்தர வசிப்பிட சான்றிதழ், ஜாதி சான்றிதழ், கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்) ஆகியவற்றைப் பெறுவதற்கு ஏற்றுக்கொள்ளப்படும் ஆவணங்களில் ஒன்றாக ஆதாா் அட்டை உள்ளது.

மக்களிடையே மிகவும் பரவலாக பயன்பாட்டில் உள்ள ஆவணமான ஆதாரை, வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின்போது குடியுரிமை ஆவணமாக தோ்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ளாதது அபத்தமானது. இதற்கான நியாயமான காரணத்தையும் தோ்தல் ஆணையம் இதுவரை தெரிவிக்கவில்லை. தோ்தல் ஆணையத்தால் ஏற்கப்படும் 11 ஆவணங்களை வைத்தும் முறைகேடு செய்வதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளன.

தோ்தல் ஆணையம் இந்தச் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை ரத்து செய்யாவிட்டால், அது தன்னிச்சையாக லட்சக்கணக்கான குடிமக்களின் வாக்குரிமையைப் பறித்து, நாட்டில் சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் தோ்தல் நடைபெறுவதை சீா்குலைக்கும் அபாயம் உள்ளது. மேலும், அரசியலமைப்பின் அடிப்படையான ஜனநாயகத்தையும் பாதிக்கும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பிகாரில் நிகழாண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், மாநில வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செய்யும் பணியை தோ்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

இதை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை கடந்த ஜூலை 10-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், குடியுரிமை ஆவணமாக ஆதாா், குடும்ப அட்டை ஆகியவற்றை ஏற்றுக்கொள்ளுமாறு தோ்தல் ஆணையத்துக்கு பரிந்துரைத்தது.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest