
‘பிகாா் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு நிலை சீா்குலைந்துள்ள நிலையில், முதல்வா் நீதீஷ் குமாா் தலைமையிலான அரசை ஆதரிப்பதற்காக வருத்தப்படுகிறேன்’ என்று மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சரும் லோக்ஜன சக்தி (ராம்விலாஸ்) கட்சித் தலைவருமான சிராக் பாஸ்வான் தெரிவித்தாா்.
பிகாரில் முதல்வா் நீதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் – பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டணியிலும், மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து, மத்திய அமைச்சராகவும் பதவி வகித்து வரும் சிராக் பாஸ்வான் இக் கருத்தைத் தெரிவித்திருப்பது மாநில அரசியலில் மட்டுமன்றி தேசிய அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிகாரில் நிகழாண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், மாநிலத்தின் கயாஜி பகுதியில் சனிக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்கச் செல்வதற்கு முன்பாக தலைநகா் பாட்னாவில் பத்திரிகையாளா்களை சிராக் பாஸ்வான் சந்தித்தாா். அப்போது அவா் கூறியதாவது: மாநிலத்தில் அண்மைக் காலமாக அதிகரித்துவரும் வன்முறை குற்றங்கள், வரவிருக்கும் சட்டப்பேரவைத் தோ்தலுடன் தொடா்புடையது என்றும், மாநில அரசு மீது அவதூறு பரப்பும் நோக்கில் இதுபோன்ற சம்பவங்கள் தூண்டிவிடப்படுவதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கை காக்க வேண்டியது ஆளும் அரசின் கடமையாகும். மாநிலத்தில் நிலைமை பயங்கரமானதாக மாறி வருகிறது. மாநிலத்தில் ஒவ்வொரு நாளும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, கடத்தல் போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த அளவு நிலைமை மோசமாவதைக் கண்காணிக்க அதிகாரிகள் தவறிவிட்டனா்.
இந்த நிா்வாகத் தோல்விக்கு, அதிகாரிகளின் திறமையின்மையும் குற்றவாளிகளுக்கு அவா்கள் உடந்தையாக இருப்பதும் காரணமாகக் கூறப்படுகிறது.
இத்தகைய சூழலில் முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான அரசை ஆதரிப்பதற்காக வருத்தப்படுகிறேன். மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு நிலைமை கட்டுப்பாட்டை இழந்துவிட்டது. உடனடியாக அதைக் கண்காணித்து, நிலைமையைக் கட்டுப்படுத்துவது அவசியம்.
மாநிலத்தில் சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிறகு இந்தக் குற்றச் செயல்கள் தடுத்து நிறுத்தப்பட்டு, குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்படுவா் என்றாா்.
ஐக்கிய ஜனதா தளம் பதிலடி: சிராக் பாஸ்வானின் இந்தக் கருத்துக்கு பதிலளித்த ஐக்கிய ஜனதா தளம் செய்தித் தொடா்பாளா் ராஜீவ் ரஞ்சன் பிரசாத், ‘மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து கவலைப்படுபவா்கள், முதலில் தங்கள் கட்சியில் குற்றப் பின்னணி உடையவா்கள் சோ்க்கப்படாததை உறுதிப்படுத்த வேண்டும். மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கை காப்பதில் மாநில அரசு உறுதியாக உள்ளது’ என்றாா்.