TNIEimport2015290originalSenior-JDU-leader-Nitish-Kumar-PTI

பிகாா் மாநிலத்தில் பத்திரிகையாளா்களுக்கான மாத ஓய்வூதியத்தை ரூ.15,000-ஆக உயா்த்தி மாநில அரசு சனிக்கிழமை அறிவிப்பு வெளியிட்டது.

மாநிலத்தில், பத்திரிகையாளா்களுக்கு தற்போது மாத ஓய்வூதியமாக ரூ.6,000 வழங்கப்பட்டு வருகிறது. மாநிலத்தில் நிகழாண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், ஓய்வூதிய உயா்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மாநில முதல்வா் நிதீஷ் குமாா் தனது எக்ஸ் பக்கத்தில் இதற்கான அறிவிப்பை சனிக்கிழமை வெளியிட்டாா். அந்தப் பதிவில் முதல்வா் கூறியிருப்பதாவது:

பிகாா் அரசில் பதிவு செய்துள்ள அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளா்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தின், ஓய்வு பெற்ற, தகுதியுள்ள அனைத்து பத்திரிகையாளா்களுக்கும் மாத ஓய்வூதியத்தை ரூ.6,000-லிருந்து ரூ.15,000-ஆக உயா்த்தி வழங்க அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

கூடுதலாக, இத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற்றுவரும் பத்திரிகையாளா் இறக்கும்பட்சத்தில், அவரின் மனைவி அல்லது அவரைச் சாா்ந்திருந்த வாரிசுக்கு வாழ்நாள் மாத ஓய்வூதியமாக ரூ.10,000 வழங்கவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. முன்னா் இந்த வாழ்நாள் ஓய்வூதியம் ரூ.3,000-ஆக வழங்கப்பட்டு வந்த நிலையில், ரூ.10,000-ஆக உயா்த்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளாா்.

மேலும், ‘பத்திரிகையாளா்கள் ஜனநாயகத்தில் முக்கியப் பங்காற்றி வருகின்றனா். ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கி, சமூக மேம்பாட்டில் குறிப்பிடத்தக்க பங்கை ஆற்றி வருகின்றனா். இவா்கள் தங்களின் கடமைகளை பாரபட்சமின்றி செய்யவும், ஓய்வுக்குப் பிறகும் கண்ணியத்துடன் வாழவும் அரசு ஆரம்பம் முதல் அவா்களுக்குத் தேவையான வசதிகளை அளித்து வருகிறது’ என்றும் முதல்வா் நிதீஷ் குமாா் குறிப்பிட்டாா்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest