InCollage20250727225244465

இங்கிலாந்து – இந்தியா அணிகளுக்கிடையே மான்செஸ்டரில் நடந்த நான்காவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்திருக்கிறது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி பெரிய முன்னிலையை எடுத்த போதும், இந்திய அணியின் சிறப்பான பேட்டிங்கால் போட்டி டிராவை நோக்கி நகர்ந்திருக்கிறது.

முதல் மூன்று போட்டிகளில் இங்கிலாந்து அணி இரண்டை வென்றிருந்தது. மான்செஸ்டரில் நடந்த இந்த நான்காவது போட்டியை வென்றால் இங்கிலாந்து அணி தொடரைக் கைப்பற்றும் எனும் நிலை. போட்டியும் இங்கிலாந்துக்கு சாதகமாகத்தான் சென்றது. இந்திய அணிதான் முதலில் பேட்டிங் செய்தது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 358 ரன்களை எடுத்தது. பதிலுக்கு பேட்டிங்கை தொடங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் வலுவாக நின்று ஆடி 669 ரன்களை எடுத்தது.

ரூட்டும் பென் ஸ்டோக்ஸூம் சதமடித்திருந்தனர். இந்திய அணியின் பௌலிங் எடுபடவே இல்லை. பும்ரா தனது டெஸ்ட் கரியரில் முதல் முறையாக ஒரு இன்னிங்ஸில் 100 ரன்களுக்கு மேல் வழங்கியிருந்தார். இங்கிலாந்து அணி 311 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்தது. இரண்டு நாட்கள் கூட முழுமையாக இல்லாத நிலை. தோல்வியை தவிர்க்க இந்திய அணி முழுமையாக நின்று பேட்டிங் ஆட வேண்டும். போட்டி இங்கிலாந்தின் கையில்தான் இருந்தது

அதற்கேற்றவாறு இரண்டாம் இன்னிங்ஸை தொடங்கியவுடனே ஜெய்ஸ்வாலும் சாய் சுதர்சனும் கிறிஸ் வோக்ஸின் பந்தில் டக் அவுட் ஆகினர். அவ்வளவுதான் இங்கிலாந்து இந்தப் போட்டியை வெல்லப் போகிறது என தோன்றுகையில்தான், இந்திய பேட்டர்கள் அணியை மீட்டெடுக்கும் பணியை சிறப்பாக செய்தனர். ராகுலும் கில்லும் சேர்ந்து 188 ரன்களை அடித்தனர். கில் சதத்தை கடந்தார். இவர்களின் பார்ட்னர்ஷிப்பை ஸ்டோக்ஸ் உடைத்தார். இந்த பார்ட்னர்ஷிப் உடைந்த பிறகு போட்டி இங்கிலாந்தின் பக்கம் மாறும் சூழல் ஏற்பட்டது.

அந்த சமயத்தில் ஜடேஜாவும் வாஷிங்டனும் பொறுப்பேற்றுக் கொண்டனர். இருவரும் நேர்த்தியாக ஆடி சதத்தை கடந்தனர். இதனால் போட்டி டிராவை நோக்கி நகர்ந்தது. கையிலிருந்த போட்டி டிராவை நோக்கி நகர்ந்ததில் இங்கிலாந்து வீரர்கள் கடுப்பாகினர். இனி போட்டியில் ஒன்றுமில்லை என்பதை அறிந்து ஸ்டோக்ஸ் இடையிலேயே டிராவில் முடித்துக் கொள்ளலாம் என்றார். ஆனால், இந்திய அணி ஒத்துக்கொள்ளவில்லை. ஜடேஜா, வாஷி இருவரும் சதமடித்த பிறகே இந்திய அணி டிராவுக்கு ஒத்துக்கொண்டது.

கடைசியாக இந்திய அணி 114 ரன்களை முன்னிலையாக எடுத்திருந்த போது இரு அணி வீரர்களும் கைகுலுக்கி போட்டியை டிராவில் முடித்துக் கொண்டனர். தொடரில் 2-1 என இங்கிலாந்தே முன்னிலையில் இருக்கிறது.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest