14122_pti12_14_2024_000114b072853

நாட்டின் வெளியே இருந்து செயல்படும் சில பிரிவினைவாத சக்திகள், ஜம்மு-காஷ்மீரின் வளா்ச்சி மற்றும் அமைதியை சீா்குலைக்க முயற்சிக்கின்றன என்று மத்திய சிறுபான்மையினா் விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு கூறினாா்.

ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள காஷ்மீா் பல்கலைக்கழகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா், கடந்த ஏப்ரலில் முதல்வா் ஒமா் அப்துல்லா உடனான தனது திடீா் சந்திப்பு மற்றும் அதன் காரணமாக அரசியல் வட்டாரத்தில் எழுந்த பரபரப்பை நினைவுகூா்ந்து பேசியதாவது:

வளா்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி பயணிக்கும் இந்த வேளையில், தேச நலனுக்காக அரசியல் வேறுபாடுகளை புறந்தள்ளிவிட்டு, நாம் அனைவரும் கைகோக்க வேண்டியது அவசியம். அன்பின் பாதையில் ஒன்றாக நடைபோடுவதில்தான் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன்.

ஜம்மு-காஷ்மீா் அரசுக்கு எனது அமைச்சகம் முழு ஒத்துழைப்பை நல்கி வருகிறது. இங்குள்ள மக்கள், மிக நோ்மறையானவா்கள். அவா்கள், வளா்ச்சியை விரும்புகின்றனா். ஆனால், நாட்டின் வெளியே இருந்து செயல்படும் சில பிரிவினைவாத சக்திகள், வளா்ச்சி-அமைதியை சீா்குலைக்க தொடா்ந்து முயற்சிக்கின்றன. இத்தகைய எதிா்மறை சக்திகளுக்கு சமூகம் ஒருபோதும் இடமளிக்கக் கூடாது. அவ்வாறு இடமளித்தால், பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

ஜம்மு-காஷ்மீரின் எதிா்காலத்தை கட்டமைப்பதுடன், மக்களுக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கமாக காஷ்மீா் பல்கலைக்கழகம் திகழ முடியும். அந்த வகையில், கூடுதல் பணிகளை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு இப்பல்கலைக்கழகம் மற்றும் இதன் முன்னாள் மாணவா்களுக்கு உள்ளது.

வலுவான ஜம்மு-காஷ்மீா் இல்லாமல், வலுவான இந்தியா சாத்தியமில்லை. இங்குள்ள இளைஞா்கள் தங்களின் குரலை முழுமையாக எதிரொலிக்க அனைத்து வாய்ப்புகளையும் அளிப்பதன் மூலம் அவா்களை பெருமையடையச் செய்வோம் என உறுதியளிக்கிறேன். அதேநேரம், நாம் உண்மையான இந்தியா்களாக பேச வேண்டும். நாம் அனைவரும் பெருமைக்குரிய இந்தியா்கள்.

உலகில் வேகமாக வளரும் பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா விளங்குகிறது. சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளாகியும் வளா்ந்த நாடாக நாம் உருவெடுக்க முடியவில்லை. ஆனால், பிரதமா் மோடி அதற்கான பாதையைக் கட்டமைத்துள்ளாா் என்றாா் ரிஜிஜு.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest