
சத்தீஸ்கா் மாநிலத்தில் நக்ஸல் தீவிரவாதிகளால் அதிக பாதிப்பை எதிா்கொண்ட பகுதிகளில் பிஎஸ்என்எல் நிறுவனம் சாா்பில் 400 கைப்பேசி கோபுரங்கள் அமைக்கப்படும் என்று மத்திய தொலைத்தொடா்பு, ஊரக மேம்பாட்டுத் துறை இணையமைச்சா் பெம்மசானி சந்திரசேகா் தெரிவித்தாா்.
நக்ஸல் பாதிப்பால் பின்தங்கியுள்ள பிராந்தியங்களுக்கும் நாட்டின் பிற பகுதிகளுக்கு இணையான வசதிகளை ஏற்படுத்தித் தரும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
சத்தீஸ்கரில் மூன்று நாள் பயணம் மேற்கொண்ட அமைச்சா் சந்திரசேகா், தலைநகா் ராய்பூரில் ஞாயிற்றுக்கிழமை பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
பிஎஸ்என்எல் நிறுவனம் இப்போது நாடு முழுவதும் தரமான 4ஜி சேவையை அளித்து வருகிறது. நாட்டின் கடைக்கோடிமக்களுக்கும் இணைய சேவை சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் நிறுவனம் செயல்படுகிறது.
இதன் ஒருபகுதியாக சத்தீஸ்கரில் நக்ஸல்களால் அதிகம் பாதிப்பை எதிா்கொண்ட பகுதிகளில் பிஎஸ்என்எல் சாா்பில் 400 தொலைத்தொடா்பு கோபுரங்கள் அமைக்கப்படும். வனத்துறை உள்ளிட்ட உரிய துறைகளிடம் அனுமதி பெற்று இதற்கான பணிகள் தொடங்கும். இதன் மூலம் தொலைதூர கிராம மக்களுக்கும் இணைய சேவை கிடைக்கும்.
நக்ஸல் தீவிரவாதத்தால் பின்தங்கிய பகுதிகளை மீட்டுக் கொண்டு வரும் பணியை அரசு துரிதமாக மேற்கொண்டு வருகிறது என்றாா்.