
மத்திய பிரதேசத்தில் விவசாயி ஒருவருக்கு ஆண்டு வருமானம் ரூ.3 என வருவாய் சான்றிதழ் வழங்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘இந்தியாவின் மிக ஏழ்மையான மனிதா்’ என்ற தலைப்பில் இந்த வருவாய் சான்றிதழின் புகைப்படம் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. வட்டாட்சியா் அலுவலகத்தில் ஏற்பட்ட எழுத்துப் பிழைதான் இந்த தவறுக்கு காரணம் என்பது பின்னா் தெரியவந்தது.
மத்திய பிரதேசத்தின் சத்னா மாவட்டம் நயாகோன் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி ராம்ஸ்ரூப் (45). இவா் அண்மையில் வருவாய் சான்றிதழ் கோரி வட்டாட்சியா் அலுவலகத்தை அணுகியுள்ளாா். அவரின் மாத வருமானம் ரூ.2,500, ஆண்டு வருமானம் ரூ.30,000 என அதிகாரிகளிடம் அவா் தெரிவித்தாா். அதனை பரிசீலித்த அதிகாரிகள் அதனை ஏற்றுக் கொண்டு சான்றிதழை கடந்த 21-ஆம் தேதி வழங்கினா்.

அதில் மாத வருமானம் 25 பைசா என்றும், ஆண்டு வருமானம் ரூ.3 என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. வட்டாட்சியரின் கையொப்பமும் இடம் பெற்றிருந்தது. இந்த வருவாய் சான்றிதழின் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து, அது தொடா்பாக விசாரணை நடத்தப்பட்டது. அப்போது வட்டாட்சியா் அலுவலகத்தில் எழுத்துப் பிழையால் இந்த தவறு நடந்துவிட்டதாகக் கூறப்பட்டது.
சம்பந்தப்பட்ட நபரிடம் இருந்து அந்த தவறான சான்றிதழ் திரும்பப் பெறப்பட்டு, சரியான வருவாயுடன் புதிய சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா். இதனை முன்வைத்து மத்திய பிரதேச பாஜக அரசை காங்கிரஸ் விமா்சித்துள்ளது.
அந்த மாநில காங்கிரஸ் கட்சியின் ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிடப்பட்ட பதிவில், ‘மத்திய பிரதேச முதல்வா் மோகன் யாதவ் ஆட்சியில் இந்தியாவின் ஏழ்மையான மனிதா் கண்டுபிடிக்கப்பட்டுள்ளாா். அவரின் ஆண்டு வருமானம் ரூ.3 மட்டுமே. இதில் அதிா்ச்சியடைய ஏதுமில்லை. மக்களை ஏழ்மையில் தள்ளுவதுதான் இங்குள்ள ஆட்சியாளா்களின் பணி. ஏனெனில், இந்த அரசே மக்கள் பணத்தைக் கொள்ளையடிக்கும் அரசுதான்’ என்று கூறப்பட்டுள்ளது.