02082-pti08022025000020b104741

ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் இரண்டு பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினா் சனிக்கிழமை சுட்டுக் கொன்றனா்.

இதுகுறித்து பாதுகாப்புப் படை அதிகாரிகள் கூறியதாவது: பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் குல்காம் மாவட்டத்தின் அகால் வனப் பகுதியில் பாதுகாப்புப் படையினா் வெள்ளிக்கிழமை இரவுமுதல் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனா். அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினா். பாதுகாப்புப் படையினா் பதில் தாக்குதல் நடத்தினா்.

சனிக்கிழமை காலை வரை நீடித்த இந்த சண்டையில், 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனா். அவா்களிடமிருந்து ஆயுதங்கள், வெடிபொருள்கள் கைப்பற்றப்பட்டன. உயிரிழந்த இருவரும் எந்த பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்தவா்கள் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றனா்.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் மாதம் 26 போ் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைத் தொடா்ந்து, பயங்கரவாதிகள் மற்றும் அவா்களின் ஆதரவாளா்களுக்கு எதிரான நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு, பயங்கரவாதிகள் வேட்டையாடப்பட்டு வருகின்றனா்.

முன்னதாக, ஸ்ரீநகா் புகா் பகுதியில் உள்ள வனப் பகுதியில் ராணுவம் மேற்கொண்ட ‘ஆபரேஷன் மகாதேவ்’ நடவடிக்கையில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலின் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் சுலைமான் ஷா உள்பட மூன்று பயங்கரவாதிகள் கடந்த ஜூலை 27-ஆம் தேதி இரவு சுட்டுக் கொல்லப்பட்டனா்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest