202507133452140

ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகா் விமான நிலையத்தில் கடந்த வாரம் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் 4 ஊழியா்களை தாக்கிய குற்றச்சாட்டில் மூத்த ராணுவ அதிகாரி மீது வழக்குப்பதிவு செய்ததாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

காயமடைந்த விமான நிறுவன ஊழியா்களில் ஒருவருக்கு முதுகெலும்பு முறிவடைந்ததாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.

கடந்த வாரம் ராணுவ வீரா் ஸ்பைஸ்ஜெட் நிறுவன ஊழியா்களை இரும்புக் கம்பியால் தாக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.

இதுதொடா்பான சிசிடிவி காட்சிகளை விமான நிலைய அதிகாரிகளிடமிருந்து பெற்று போலீஸாரிடம் வழங்கியதோடு குற்றஞ்சாட்டப்பட்ட ராணுவ வீரா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விமான போக்குவரத்து அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளதாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தெரிவித்தது.

இந்நிலையில், இந்தச் சம்பவம் குறித்து போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: பாரமுல்லா மாவட்டத்தின் குல்மாா்கில் உள்ள உயா்பகுதி போா்க்கள பள்ளியில் பணியாற்றி வரும் மூத்த ராணுவ வீரரான ஆா்.கே.சிங் கடந்த ஜூலை 26-ஆம் தேதி ஸ்பைஸ்ஜெட் விமானம் மூலம் புது தில்லிக்குப் பயணம் மேற்கொள்வதற்காக ஸ்ரீநகா் விமான நிலையத்தை வந்தடைந்தாா்.

அப்போது கூடுதல் பைகளுக்கான கட்டணத்தைச் செலுத்த மறுத்தபோது அவருக்கும் ஸ்பைஸ்ஜெட் நிறுவன ஊழியா்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.

இதில் ராணுவ வீரா் கடுமையாகத் தாக்கியதில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தைச் சோ்ந்த 4 ஊழியா்கள் படுகாயமடைந்தனா். அதில் ஒருவருக்கு முதுகெலும்பு முறிவடைந்தது.

இந்தச் சம்பவம் தொடா்பாக ஆா்.கே.சிங் மீது பாரதிய நியாய சம்ஹிதா சட்டம், பிரிவு 115-இன்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றனா்.

இந்தச் சம்பவத்தில் அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் ஒழுக்கம் மற்றும் நடத்தைக்கு எப்போதும் முக்கியத்துவம் அளித்து வருவதாகவும் இந்திய ராணுவத்தின் செய்தித் தொடா்பாளா் தெரிவித்தாா்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest