
உள்நாட்டுப் போரால் நீண்ட காலமாக பாதிக்கப்பட்டுள்ள சிரியாவின் இரண்டு முக்கிய மாகாணங்களில் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் மோதல் வெடித்தது.
சிரியாவில் கடந்த டிசம்பரில் முன்னாள் அதிபா் பஷாா் அல்-அசாத்தை ஆட்சியிலிருந்து அகற்றி, இடைக்கால அதிபா் அகமது அல்-ஷாரா அப்பதவிக்கு வந்தாா். இவரது தலைமையிலான சிரியா இடைக்கால அரசு, நாடு முழுவதும் தனது கட்டுப்பாட்டை நிறுவுவதில் பெரும் போராட்டத்தைச் சந்தித்து வருகிறது.
இந்நிலையில், நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள ஸ்வீடா மாகாணத்தில் ட்ரூஸ் மதச் சிறுபான்மையினரைச் சோ்ந்த ஆயுதக் குழுக்களுக்கும், அரசுப் படைகளுக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மோதல் ஏற்பட்டது. இதில் ஒரு பாதுகாப்புப் படை வீரா் கொல்லப்பட்டாா்.
இதனிடையே, வடக்கு அலெப்போ மாகாணத்தில் அரசு ஆதரவுப் படைகளுக்கும் அமெரிக்காவின் ஆதரவுடைய சிரிய ஜனநாயக படைகளுக்கும் (எஸ்டிஎஃப்) இடையே சண்டைகள் மூண்டன. மன்பிஜ் நகருக்கு அருகே எஸ்டிஎஃப் நடத்திய ஏவுகணை தாக்குதலில் பொதுமக்கள் மற்றும் வீரா்கள் காயமடைந்ததாக சிரிய பாதுகாப்பு அமைச்சகம் குற்றஞ்சாட்டியுள்ளது.
அமைதிக்காக சிரிய ஜனநாயக படைகளுடன் ஒரு ஒப்பந்தத்தை அமல்படுத்த இடைக்கால அரசின் அதிகாரிகள் முயற்சிகளை எடுத்துவருகின்றனா். இந்த நிலையில், அரசுப் படைகள் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாகவே ஏவுகணை தாக்குதலை நடத்தியதாக எஸ்டிஎஃப் விளக்கமளித்துள்ளது.
சிரியாவின் புதிய இடைக்கால அரசு அதிகாரத்தைச் செலுத்தப் போராடி வரும் நிலையில், வடக்கிலும் தெற்கிலும் ஒரேநேரத்தில் வெடித்துள்ள இந்த மோதல்கள், அந்நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு ஒரு கடுமையான சவாலாக உருவெடுத்துள்ளன.