
தஞ்சாவூர் அருகே கள்ளம்பெரம்பூர் 2ம் சேத்தி மெயின்ரோட்டை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (54) விவசாயி. இவரது மனைவி ராமாயி (47) இவர்கள் இருவரும் பூதலுார் சாலையில் உள்ள தங்கள் வயலுக்கு சென்றுள்ளனர். நேற்று இரவு பலத்த காற்று வீசியதில் மின்கம்பி அறுந்து கம்பி வேலியில் கிடந்துள்ளது. இதனை யாரும் கவனிக்கவில்லை.
மின்வாரிய ஊழியர்களும் மறுநாள் விடிந்த பிறகு பலத்த காற்று வீசியதே எங்காவாது மின்கம்பி அறுந்து கிடக்கிறதா என்று பார்க்காமல் அலட்சியமாக இருந்ததாக சொல்கிறார்கள்.

இந்த நிலையில், சுப்பிரமணியனும், ராமாயியும் வயலுக்கு நடந்து சென்றுள்ளனர். சகதியாக இருந்ததால் வழுக்கியுள்ளது. இதனால் கீழே விழாமல் இருக்க கம்பி வேலியை பிடித்துள்ளனர். அறுந்து கிடந்த மின்கம்பி மிசாரம் பாய்ந்த நிலையில் அந்த கம்பி வேலியில் கிடக்க மின்சாரம் தாக்கிய தம்பதி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
அவ்வழியாக சென்றவர்கள் இதை பார்த்து அதிர்ச்சியடைந்து கள்ளப்பெரம்பூர் போலீஸார் மற்றும் மின்வாரியத்துறை அலுவலர்களுக்கு தகவல் அளித்தனர்.
வயலுக்கு சென்ற அப்பா, அம்மா இறந்த தகவல் அறிந்த இவர்களது மகன் கார்த்திகேயன் (21) மகள் சுப்ரியா (17) இருவரும் கதறியது சோகத்தை ஏற்படுத்தியது. ஆடிபெருக்கு நாளில் வயலுக்கு சென்ற தம்பதி இறந்த சம்பவம் அறிந்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து அங்கு திரண்டனர்.
மேலும் தஞ்சாவூர் பூதலூர் சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர். இதனால், சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் வல்லம் டி.எஸ்.பி., கணேஷ்குமார், தஞ்சாவூர் தாசில்தார் சிவக்குமார் ஆகியோர் கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதின் பேரில், மறியலை கைவிட்டனர்.

இது குறித்து ஊர் மக்கள் கூறுகையில், “மின்கம்பி அறுந்து விழுந்து இருவர் உயிரிழந்த தகவலை சொன்ன பிறகும் மின்வாரிய அலுவலர்கள் உடனே வராமல் மூன்று மணி நேரத்திற்கு பிறகு தான் சம்பவ இடத்திற்கு வந்தனர். மின்கம்பி தாழ்வாக செல்வது குறித்து பலமுறை மின்வாரிய அலுவலர்களிடம் புகார் அளித்தும் கண்டுக்கொள்ளவில்லை, எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவர்களது அலட்சியம் தான் இரு உயிர் பறிபோவதற்கு காரணமாகியிருக்கிறது. அம்மா, அப்பாவை இழந்து விட்டு பிள்ளைகள் என்ன செய்யப்போகிறார்கள் என தெரியவில்லை. அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்” என்றனர்.