export

இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஆண்டுதோறும் 5.333 பில்லியன் டாலர் (ரூ.46,718 கோடி) மதிப்புள்ள ஆடைகள் ஏற்றுமதியாகி வரும் நிலையில், டிரம்ப் அறிவித்த புதிய விரி விதிப்பால், ஆடைத் தயாரிப்புத் துறையில் 20 லட்சம் பேர் வேலையிழக்கும் அபாயம் எழுந்துள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அண்மையில் அறிவித்த 25 சதவீத விரி விதிப்பு காரணமாக, இந்திய ஆடை மற்றும் ஜவுளித் தொழில் மிக மோசமான நெருக்கடியை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் 20 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயமும், ஆடை தயாரிப்பு துறை, குறிப்பிடத்தக்க சரிவை சந்திக்கும் நிலையும் ஏற்பட்டிருப்பதாக இத்துறை சார்ந்த நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்தியாவில், ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனங்கள் என்று எடுத்துக்கொண்டால், பாதி அளவுக்கு தமிழ்நாட்டில் இருப்பதும், ஆயத்த ஆடை உற்பத்தியில் முதலிடத்திலும், ஜவுளி உற்பத்தியில் நாட்டிலேயே தமிழகம் இரண்டாவது இடத்திலும், நாட்டு மக்கள் தொகையில் 35 சதவீதத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் துறையாக ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை தொழில் இருக்கும் நிலையில், அமெரிக்காவின் 25 சதவீத வரி விதிப்பு என்பது தமிழகத்தை நேரடியாக பாதிக்கும் என்பதை உணர்த்துகிறது.

நாட்டில் ஆயத்த ஆடை தயாரிப்புத் தொழிலில் உள்ள தொழிலாளர்களில் 19 சதவீதம் பேர் தமிழகத்தில் உள்ளனர். திருப்பூரில் மட்டும் 1.8 லட்சம் பேர் ஆடைத் தயாரிப்புத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டம், எண்ணற்ற ஆயத்த ஆடைத் தயாரிப்புத் தொழிற்சாலைகளுடன் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஏற்றுமதியில் முக்கியப் பங்கு வகித்து வருகிறது. 50 சதவீத தொழிலாளர்கள் திருப்பூரிலும், மற்ற 50 சதவீத தொழிலாளர்கள் ஈரோடு, திருவள்ளூர், கோவையிலும் பணியாற்றி வருகிறார்கள். நாள்தோறும் வட மாநிலங்களிலிருந்து திருப்பூருக்கு வரும் ரயில்களில் வந்திறங்குவோர் அனைவரும் நேராகச் செல்வது ஆயத்த ஆடை உற்பத்தி தொழிற்சாலைகளுக்குத்தான். நாள்தோறும் எண்ணற்றவர்கள் வந்திறங்கினாலும் வேலை இல்லை என்று ஒருநாளும் யாரும் திரும்பிப்போவதில்லை. போனதில்லை என்ற அளவுக்கு வேலை வாய்ப்பு பெருகிக் கொண்டிருந்தது. ஆனால் இனி?

இந்த நிலையில்தான், 25 சதவீத வரி விதிப்பு என்பது சுற்றி வளைக்காமல் தமிழகத்தின் ஆடைத் தயாரிப்புத் தொழில்துறையை நேரடியாக பாதிக்கும் என்பது கண்கூடு. ஏற்கனவே நூல் விலை உயர்வு, செலவினங்கள் அதிகரிப்பு என பல சவால்களை சந்தித்துவரும் இந்தத் துறையை 25 சதவீத வரி, பல ஆண்டுகளுக்குப் பின்னோக்கிக் கொண்டு செல்லும் அபாயத்தில் உள்ளது.

இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு, ஏற்றுமதி செய்யும் பொருள்களுக்கான புதிய வரி விகிதம் 25 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவே, 20 சதவீதம் என்ற குறைந்த வரியைக் கொண்டிருக்கும், இந்தியாவின் முக்கிய போட்டியாளர்களாக விளங்கும் வங்கதேசம், வியத்நாம் போன்ற நாடுகளுக்கு சாதகமாக மாறியிருக்கிறது. இவர்களை விட இந்தோனேசியா, கம்போடியா நாடுகள் 19% வரியைக் கொண்டுள்ளன.

அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றதும், அதிபர் டொனால்ட் டிரம்ப் அனைத்து நாடுகளுக்கும் அறிவித்த வரி விகிதமானது, மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்திய ஆடைத் தொழிலுக்கு மிகவும் சிறப்பாகவே அமைந்திருந்தது. அதாவது, இந்தியாவுக்கு முதலில் அறிவித்திருந்த வரி 26%. ஆனால், அதே நேரத்தில் வங்கதேசத்திற்கு 37%, வியத்நாமுக்கு 46%, இலங்கைக்கு 44% மற்றும் சீனாவுக்கு 145% என இருந்தது. இப்போது நிலைமை அப்படியே தலைகீழ்.

2024-25 ஆம் நிதியாண்டில் இந்தியாவில் இருந்து ஆடை ஏற்றுமதி செய்யப்படும் நாடுகளில் அமெரிக்கா முன்னிலையில் உள்ளது. அதாவது இந்தியாவின் ஆடை ஏற்றுமதியில் 33-34 சதவீதம் அமெரிக்காவுக்கு செல்கிறது. கடந்த நிதியாண்டில் மட்டும் ரூ.46,718 கோடி மதிப்புக்கு ஏற்றுமதி நடந்துள்ளது. உலகம் முழுவதும் நடைபெறும் ஆடை ஏற்றுமதியில் இந்தியா 6.1 சதவீதத்தைக் கொண்டிருக்கிறது.

இது தொடர்பாக இந்திய ஜவுளித் தொழில் கூட்டமைப்பு (CITI) தன்னுடைய மிகப்பெரிய கவலையைத் தெரிவித்துள்ளது. அதாவது, புதிய வரி விதிப்பு என்பது, ஏற்கனவே சவாலான சூழ்நிலையை மேலும் கடினமானதாக மாற்றியிருக்கிறது என்று.

கூட்டமைப்பின் தலைவர் ராகேஷ் மெஹ்ரா எக்ஸ்பிரஸ் குழுவுக்கு அளித்த பேட்டியில், அமெரிக்க சந்தையில் நமது இடத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்கான போட்டியில் இருக்கும் வங்கதேசத்தை விடவும் நமக்கு வரி விதிப்பு அதிகமாக இருப்பது, இந்திய ஆடை மற்றும் ஜவுளி ஏற்றுமதித் துறைக்கு மிகப்பெரிய சவாலாக மாறியிருக்கிறது, ஏனென்றால், நாங்கள் கடுமையான வரி விதிப்பை எதிர்கொண்டு கையறு நிலையில் நிற்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

ஆடை தயாரிப்பு தொழில் துறையினரின் கவலையை, ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலும் (AEPC) எதிரொலித்துள்ளது. அமைப்பின் பொதுச் செயலர் மிதிலேஷ்வர் தாகுர் எக்ஸ்பிரஸ் குழுவுக்கு அளித்த நேர்காணலில், புதிய வரி விதிப்பு முறை அனைத்தையும் மாற்றிவிடும் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆடை ஏற்றுமதித் துறையில் நமது நாட்டுடன் போட்டியிடும் வங்கதேசம், வியத்நாம், இலங்கை, பாகிஸ்தான் போன்றவை, வரிப் பட்டியலில் நம்மை விடக் குறைந்த வரியுடன் உள்ளன. அது மட்டுமல்ல, குறிப்பிடப்படாத அபராதத் தொகை மற்றும் 25 சதவீத வரி என்பது, செலவினத்தைக் கணக்கிட முடியாத துயர நிலைக்கு தொழில்துறையினரை ஆளாக்கிவிடும். ஏற்றுமதியின்போது எந்த அளவுக்கு அபராதத் தொகை வசூலிக்கப்படும் என்று தெரியாமல், அதன் விலையை தொழில்துறையினர் நிர்ணயிக்க முடியாமல் போகும், இது மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு தொடர்ந்தால், நாட்டின் ஆடைத் தயாரிப்பு துறை மட்டுமே மிகப்பெரிய இழப்பை சந்திக்க நேரிடும், இது, வேலை வாய்ப்புகளைக் குறைத்துவிடும். ஏனென்றால், அமெரிக்க சந்தை என்பது, விலையை அடிப்படையாக வைத்திருக்கும், குறிப்பிடத்தக்க பிராண்டுகளின் சந்தையாகவே இருக்கிறது. ஒருவேளை, இந்த வரி விதிகமே நீடிக்கும்பட்சத்தில், இந்தியாவின் ஆடைத் தயாரிப்பு துறையானது, மிகப்பெரிய பின்னடைவையும் அதன் தொடர்ச்சியாக ஏராளமானோர் வேலை இழக்கும் அபாயத்தையும் ஏற்படுத்திவிடும் என்கிறார்.

இந்த சவால்களை எதிர்கொள்ளும் நிலை ஏற்படும்போது, இந்திய ஆடைத் தயாரிப்பு மற்றும் ஜவுளித் துறைக்கு உதவ மத்திய அரசு முன்வர வேண்டும் என்று தொழில்துறையினர் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

சர்வதேச அளவில், ஆடைத் தயாரிப்புக்குத் தேவையான மூலப்பொருள்கள் குறைந்த விலையில் கிடைப்பதை எளிதாக்குவது ஒரு அவசரகால உதவியாக இருக்கும் என்றும், இந்த பேருதவியானது, இந்திய தொழில்துறையினர், தங்கள் உலகளாவிய போட்டியாளர்களுடன் சிறப்பாக போட்டியிட உதவும் என்றும் தொழில்துறை நம்புவதாகக் கூறியிருக்கிறார்.

மேலும், இந்தியா – அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிலையில், வரி விதிப்பு மற்றும் அபராதம் என்ற நிலைமைகள் மாறும் என்று ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் மற்றும் இந்திய ஜவுளித் தொழில் கூட்டமைப்புகள் நம்பிக்கைத் தெரிவித்திருக்கின்றன.

The Indian apparel and textile industry is facing a potential crisis with the latest tariff rates announced by the U.S. government, which industry leaders warn could lead to over 2 million job losses and a significant downturn for the sector.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest