
`வேட்டையன்’ திரைப்படத்திற்குப் பிறகு ரஜினிகாந்த் நடிப்பில் `கூலி’ திரைப்படம் வெளியாக இருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் இந்தப் படத்தில் நாகர்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, செளபின் ஷாஹிர், ஸ்ருதி ஹாசன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி இத்திரைப்படம் வெளியாக இருக்கிறது. புரொமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ரஜினிகாந்த் தெலுங்கில் ‘கூலி’ படம் குறித்து பேசியிருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி இருக்கிறது.
“தெலுங்கு ரசிகர்களுக்கு வணக்கம். நான் சினிமா துறைக்கு வந்து 50 வருடங்கள் ஆகிவிட்டது. என்னுடைய வைர விழாவான இந்த ஆண்டில் ஆகஸ்ட் 14 -ல் ‘கூலி’ வெளியாகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், லோகேஷ் இயக்கத்தில், அனிரூத் இசையில் ‘கூலி’ படம் வெளியாகிறது.

லோகேஷ் கனகராஜ் தெலுங்கு திரையுலகின் ராஜமௌலியை போன்றவர். ராஜமெளலியைப் போலவே லோகேஷ் எடுத்த எல்லா படங்களும் சூப்பர் ஹிட். தென்னிந்திய திரைப்படத்தில் அமீர்கான் முதன் முதலாக நடிக்கிறார். அதுவும் கேமியோ ரோலில். அவருடைய கரியரிலேயே அவர் கேமியோ ரோலில் நடித்ததில்லை. இதுதான் முதல் முறை.
அதேமாதிரி, கிங் நாகார்ஜூனா வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சைமன் என்கிற அந்த வில்லன் கதாபாத்திரத்தை கேட்டவுடன் நானே நடிக்கலாமா என்று கூட தோன்றியது. எனக்கு எப்போதும் வில்லன் கதாபாத்திரங்கள் ரொம்ப பிடிக்கும். அடிப்படையில் நான் வில்லனாகத்தான் சினிமாவுக்கு வந்தேன்” என்று பேசியிருக்கிறார்.