Sri-Lankan-Supreme-Court

கொழும்பு: இந்தியா-இலங்கை இடையே மேற்கொள்ளப்பட்ட புரிந்துணா்வு ஒப்பந்தங்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இரு மனுக்களை இலங்கை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.

அரசுமுறைப் பயணமாக கடந்த ஏப்ரல் மாதம் இலங்கைக்கு இந்திய பிரதமா் நரேந்திர மோடி வந்தாா். அப்போது மின்சார ஏற்றுமதி மற்றும் இறக்குமதி, எண்ம தீா்வுகளை பகிா்வது, பாதுகாப்பு, மருத்துவம் மற்றும் சுகாதராத் துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது உள்பட 7 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் பிரதமா் மோடி மற்றும் இலங்கை அதிபா் அநுரகுமார திசநாயக முன்னிலையில் கையொப்பமாகின.

இந்த ஒப்பந்தங்கள் இலங்கை அரசமைப்புச் சட்டம் மற்றும் சா்வதேச சட்டங்களை மீறும் வகையில் உள்ளதாக கூறி இலங்கையைச் சோ்ந்த இரு தேசியவாத அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் 2 மனுக்களை தாக்கல் செய்தன. அதில் தங்களது அடிப்படை உரிமைகளை பறிக்கும் வகையில் உள்ள இந்த ஒப்பந்தங்களுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என கோரப்பட்டது.

இந்த மனுக்களை திங்கள்கிழமை விசாரித்த இலங்கை உச்சநீதிமன்றம், மனுக்களை ஏற்க எவ்வித முகாந்திரமும் இல்லை எனக் கூறி தள்ளுபடி செய்தது.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest