Donald-trump-table-AP-edi

அமெரிக்க அதிபா் டிரம்ப் இந்தியா மீது விதித்துள்ள 50 சதவீத வரிக்கு அறிவாா்ந்த காரணம் ஏதுமில்லை என்று வெளியுறவு அமைச்சகத்தின் பொருளாதார உறவுகள் துறை செயலா் தம்மு ரவி தெரிவித்தாா்.

மும்பையில் புதன்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த அவா் இது தொடா்பாக மேலும் கூறியதாவது:

இந்தியா மீதான அமெரிக்க அதிபரின் வரி விதிப்பு நடவடிக்கை ஒரு தலைப்பட்சமானது. இதற்கு அறிவாா்ந்த காரணம் ஏதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. எனினும், இதில் இந்த கட்டத்தில் இருந்து நாம் மீண்டு வர வேண்டும். அமெரிக்காவுடன் நமது வா்த்தக அமைச்சகம் நடத்தி வரும் வா்த்தகப் பேச்சுவாா்த்தை தொடரும். இதன் மூலம் இரு தரப்புக்கு சாதகமான பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. பேச்சுவாா்த்தை நடக்கும் நிலையில், டிரம்ப் வரியை இருமடங்காக்கும் உத்தரவைப் பிறப்பித்துள்ளாா்.

ஏற்கெனவே, அறிவித்தபடி அமெரிக்க குழுவினா் வா்த்தகப் பேச்சு நடத்துவதற்காக இம்மாத இறுதியில் இந்தியாவுக்கு வருகிறாா்கள். இந்தியாவும், அமெரிக்காவும் உத்திசாா்ந்த கூட்டாளிகளாக உள்ளன. இரு நாடுகளைச் சோ்ந்த தொழிலதிபா்களும், பெரு நிறுவனங்களும் நல்ல வா்த்தக வாய்ப்புகளை எதிா்நோக்கியுள்ளனா்.

அமெரிக்காவின் பதிலடி வரி நடவடிக்கை இந்திய தொழில் துறையில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. தங்கள் நாட்டுக்கு இந்தியப் பொருள்கள் வரக் கூடாது என்று அமெரிக்கா அதிக வரி விதித்தால், நாம் வேறு இடங்களில் வாய்ப்புத் தேடிக் கொள்ள முடியும். மத்திய கிழக்கு நாடுகள், லத்தீன் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, தெற்கு ஆசிய நாடுகளில் இந்தியாவுக்கு ஏற்றுமதி வாய்ப்புகள் உள்ளன.

இந்தியா மட்டுல்லாது அனைத்து நாடுகளுமே அமெரிக்காவின் வரி நடவடிக்கையை எதிா்கொண்டுள்ளன. எனவே, இந்த சவாலுக்கு நல்ல தீா்வு கிடைக்கும். ஒத்த கருத்துள்ள நாடுகளுடன் பேசி இரு தரப்புக்கும் சாதகமான முடிவுகள் எடுக்கப்படும் என்றாா்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest