newindianexpress2025-07-26ucxb3bf7AP25207292004926

காஸா பகுதியை முழுவதுமாக ஆக்கிரமித்து, தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான இஸ்ரேல் அரசின் திட்டத்துக்கு, அந்நாட்டின் நாடாளுமன்றம் நேற்று (ஆக.7) ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்நிலையில், இஸ்ரேலின் இந்தப் புதிய திட்டத்துக்கு சர்வதேச நாடுகளும், அமைப்புகளும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றன.

ஐ.நா.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையத்தின் தலைவர், வோல்கர் டுர்க், ”இஸ்ரேலின் இந்தப் புதிய திட்டமானது உடனடியாகக் கைவிடப்பட வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

ஹமாஸ்

”இஸ்ரேல் அரசின் இந்தத் திட்டமானது, காஸாவுக்கு எதிராக ஆக்கிரமிப்பு ராணுவம் செய்யும் புதிய போர் குற்றம்” எனக் குறிப்பிட்டு தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

பிரிட்டன்

”இஸ்ரேலின் இந்தத் திட்டம், மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும், பிணைக் கைதிகளின் விடுதலைக்கும் எந்தவொரு வகையிலும் உதவாது” என பிரிட்டன் பிரதமர் கெயிர் ஸ்டார்மெர் விமர்சித்துள்ளார்.

சீனா

”காஸா பாலதீன மக்களுக்கு சொந்தமானது மற்றும் அது பாலஸ்தீனத்தின் பிரிக்க முடியாத ஒரு அங்கம்” என சீன வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளர் கூறியுள்ளார்.

மேலும், மனிதாபிமான நெருக்கடிகளைத் தணிக்கவும், பிணைக் கைதிகளை விடுவிப்பதற்கும், உடனடி போர்நிறுத்தம் மட்டுமே சரியான தீர்வு எனவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

ஜெர்மனி

காஸாவில் பயன்படுத்தக் கூடிய ராணுவத் தளவாடங்களின் ஏற்றுமதிகள் அனைத்தும் அடுத்த அறிவிப்பு வரும் வரையில் தடை செய்யப்படுவதாக, ஜெர்மனி பிரதமர் ஃப்ரைட்ரிச் மெர்ஸ் அறிவித்துள்ளார்.

மேலும், இஸ்ரேலின் இந்த நடவடிக்கைகள் காஸாவில் எப்படி தங்களது இலக்குகளை அடைய உதவி செய்யும் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

துருக்கி

இஸ்ரேலின் இந்தத் திட்டத்தை உடனடியாக நிறுத்துவதற்கு, சர்வதேச நாடுகளும் அழுத்தம் கொடுக்க வேண்டுமென, துருக்கி அரசு வலியுறுத்தியுள்ளது.

“பாலஸ்தீனர்களை அவர்களது சொந்த இடத்தில் இருந்து வெளியேற்றும் நோக்கத்தைக் கொண்ட இந்தத் திட்டத்தை, சர்வதேச சமூகம் தடுக்க வேண்டுமென நாங்கள் வலியுறுத்துகின்றோம்” என துருக்கி வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஸ்பெயின்

”காஸா மீதான இஸ்ரேலின் ராணுவ ஆக்கிரமிப்புகளை அதிகரிக்கும் இந்தத் திட்டத்தை நாங்கள் கடுமையாகக் கண்டிக்கிறோம்” என ஸ்பெயின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜோஸ் மேனுவல் அல்பாரெஸ் தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டத்தால், அதிகப்படியான பாதிப்புகள் மட்டுமே உருவாகும் எனக் கூறிய அவர், உடனடி மற்றும் நிரந்தர போர்நிறுத்தம் தேவை எனவும் வலியுறுத்தியுள்ளார்.

பெல்ஜியம்

இந்த முடிவுக்கான பெல்ஜியம் அரசின் முழுமையான மறுப்பைத் தெரிவிக்க, அந்நாட்டுக்கான இஸ்ரேல் தூதரை நேரில் வருமாறு அவர்கள் அழைப்பு விடுத்ததாக, பெல்ஜியம் வெளியுறவுத் துறை அமைச்சர் மாக்ஸிமே ப்ரேவொட் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சவுதி அரேபியா

இந்தப் புதியத் திட்டத்தினால், இஸ்ரேல் அரசை கடுமையாகச் சாடிய சவுதி அரேபியாவின் வெளியுறவுத் துறை அமைச்சகம், ”தங்களது அரசு சகோதர பாலஸ்தீன மக்களுக்கு எதிராக பட்டினி, மிருகத்தனமான நடைமுறைகள் மற்றும் இன அழிப்பு போன்ற குற்றங்களைச் செய்வதை திட்டவட்டமாகக் கண்டிக்கிறது” என்று எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

ஜோர்டான்

இருநாட்டு தீர்வுகளுக்கும், பாலஸ்தீன மக்களின் உரிமைகளுக்கும் எதிரான இஸ்ரேலின் இந்த நடவடிக்கைகளுக்கு ஜோர்டான் மன்னர் அப்துல்லாவின் அரசு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

எகிப்து

காஸாவுக்கான இஸ்ரேலின் இந்தத் திட்டத்தை “மிகக் கடுமையான வார்த்தைகளால்” கண்டிப்பதாக, எக்பித் அரசின் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, காஸாவில் பாலஸ்தீனர்கள் மீதான வன்முறைகளை இஸ்ரேல் கைவிடவில்லை என்றால், பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்போம் என பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: காலிஸ்தான் குடியரசு? கனடாவில் திறக்கப்பட்ட தூதரகத்தால் பரபரப்பு!

International countries and organizations are registering their condemnation of this new Israeli plan about Gaza.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest