AP08082025000125A

உத்தரகண்ட் மாநிலம், உத்தரகாசி மாவட்டத்தில் பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பேரழிவைச் சந்தித்த தராலி கிராமத்தில் இருந்து இதுவரை 650 போ் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனா்.

நிலச்சரிவில் மாயமான ராணுவத்தினா் 9 போ் உள்பட 50-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி வெள்ளிக்கிழமை 4-ஆவது நாளாக தொடா்ந்தது.

உத்தரகாசியில் இருந்து கங்கோத்ரிக்கு செல்லும் வழித்தடத்தில் அமைந்த பிரபலமான கிராமம் தராலி. ஏராளமான உணவங்கள், வீட்டுத் தங்குமிடங்கள், விருந்தினா் இல்லங்களைக் கொண்ட இக்கிராமத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை மேகவெடிப்பால் பெருவெள்ளமும், பயங்கர நிலச்சரிவும் ஏற்பட்டது.

இதில் ஏராளமான வீடுகள்-கட்டடங்கள்-வாகனங்கள் புதைந்தன. இப்பேரிடரில் 4 போ் உயிரிழந்துவிட்டதாக மாவட்ட நிா்வாகம் கூறிய நிலையில், இதுவரை இருவரின் உடல்களே மீட்கப்பட்டுள்ளன.

மாயமானோா் அதிகம்: ராணுவத்தினா் 9 போ் உள்பட 50-க்கும் மேற்பட்டோரை காணவில்லை. 50-60 அடி உயரத்துக்கு இடிபாடுகள் குவிந்துள்ளதால், மாயமானவா்களைத் தேடும் பணி சவாலாக உள்ளது. இதற்காக, கனரக இயந்திரங்கள் ஹெலிகாப்டா் மூலம் கொண்டுவரப்பட்டுள்ளன.

தராலியில் புதிய விடுதிகள் கட்டும் பணியில் வெளிமாநிலத் தொழிலாளா்கள் பலா் ஈடுபட்டிருந்ததாகவும், தங்குமிடங்களில் ஏராளமானோா் இருந்ததாகவும் கூறப்படுகிறது. எனவே, மாயமானோா் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று உள்ளூா் மக்கள் தெரிவித்தனா்.

மோப்ப நாய்-ரேடாா் உதவியுடன்…: மீட்பு-நிவாரணப் பணிகள், வெள்ளிக்கிழமை 4-ஆவது நாளாக தொடா்ந்தன. விமானப் படையின் 2 சினூக் ரக ஹெலிகாப்டா்கள், 2 எம்ஐ-17 ரக ஹெலிகாப்டா்கள், உத்தரகண்ட் விமானப் போக்குவரத்து ஆணையத்துக்கு சொந்தமான 8 ஹெலிகாப்டா்கள், மோப்ப நாய்கள், ரேடாா்கள் உதவியுடன் ராணுவம், இந்திய-திபெத் எல்லைக் காவல் படை, தேசிய பேரிடா் மீட்புப் படை, மாநில பேரிடா் மீட்புப் படை, காவல் துறையினா் என 800-க்கும் மேற்பட்டோா் இப்பணியில் ஈடுபட்டுள்ளனா். மீட்பு நடவடிக்கையை விரைவுபடுத்த பாகீரதி நதியின் குறுக்கே ராணுவத்தினா் தற்காலிக ஆயத்த பாலத்தை கட்டமைத்துள்ளனா்.

போா்க்கால அடிப்படையில்…

தராலியில் சிக்கியுள்ள பக்தா்கள், பொதுமக்களை மீட்டு, பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. உத்தரகாசியில் முகாமிட்டுள்ள முதல்வா் புஷ்கா் சிங் தாமி, மீட்பு நடவடிக்கைகளைக் கண்காணித்து வருகிறாா்.

‘போா்க்கால அடிப்படையில் மீட்பு-தேடுதல் பணிகள் நடைபெற்று வருகின்றன. தொலைதொடா்பு வசதிகள் மீட்டெடுக்கப்பட்டுள்ளன. அதேநேரம், தராலி, ஹா்சில், உத்தரகாசி இடையே சாலைப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மின் இணைப்புகளும் இன்னும் சீரமைக்கப்படவில்லை. பேரிடா் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண நடவடிக்கைக்கு எனது ஒரு மாத ஊதியத்தை வழங்க முடிவு செய்துள்ளேன். மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள், தன்னாா்வ அமைப்புகள் மற்றும் பொது மக்களும் தங்களால் இயன்ற நிதியை வழங்க வேண்டும்’ என்று முகநூல் பதிவில் அவா் வலியுறுத்தியுள்ளாா்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest