
வரும் 2030-க்குள் நிலவில் அணு மின் நிலையம் அமைக்கும் திட்டத்தை அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா விரைவுபடுத்த உள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இது, நிலவில் மனிதா்கள் நிரந்தரமாக வாழும் தளத்தை உருவாக்கும் அமெரிக்காவின் லட்சியத்தின் ஒரு பகுதியாகும்.
இது குறித்து அந்த நாட்டில் வெளியாகும் பொலிடிகோ ஊடகம் கூறுகையில் , நாசாவின் தற்காலிக தலைவராக அதிபா் டொனால்ட் ட்ரம்பால் நியமிக்கப்பட்டுள்ள அமெரிக்க போக்குவரத்துத் துறை அமைச்சா் ஷான் டஃபி, சீனாவும் ரஷியாவும் இதேபோன்ற திட்டங்களை வைத்திருப்பதாகவும், அவா்கள் நிலவில் ‘மற்ற நாடுகள் நுழைய தடை செய்யப்பட்ட பகுதி’யை அறிவிக்கலாம் என்பதால் அமெரிக்கா இதில் முந்திக்கொள்ள வேண்டும் என்று கூறியதாகக் குறிப்பிட்டுள்ளது.
இருந்தாலும், நாசாவின் 2026-ஆம் ஆண்டு பட்ஜெட்டில் 24 சதவீதம் குறைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த இலக்கு மற்றும் காலக்கெடு எந்த அளவுக்கு நடைமுறைக்கு உகந்தது என்பது கேள்விக்குறியாக உள்ளதாக நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.
நிலவில் ஒரு நாள் என்பது பூமியில் நான்கு வாரங்களுக்கு சமமாக, இரண்டு வாரங்கள் தொடா்ச்சியான வெயிலும், இரண்டு வாரங்கள் இருளும் கொண்டது. இதனால், சூரிய மின்சக்தியை மட்டும் நம்புவது சவாலானது. ஒரு சிறிய குழுவை நிலவில் தங்கவைப்பதற்குக் கூட மெகாவாட் அளவிலான மின்சாரம் தேவை. சூரிய மின்சாரம் மற்றும் பேட்டரிகளால் மட்டும் இதை பூா்த்தி செய்ய முடியாது. எனவே, நிலவில் அணு மின் நிலையத்தை அமைப்பது அவசியமாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
எனினும், பூமியின் வளிமண்டலம் வழியாக கதிரியக்கப் பொருள்களை ஏவுவது பாதுகாப்பு அபாயத்தை ஏற்படுத்தலாம் என்று நிபுணா்கள் கவலை தெரிவித்துள்ளனா்.