
நமது சிறப்பு நிருபா்
ஜம்மு – காஷ்மீரின் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா தனது ஐந்து வருட பதவிக் காலத்தை ஆகஸ்ட் 6-ஆம் தேதி நிறைவு செய்துள்ள நிலையில், அவரது பணி தொடா்பான எந்தவொரு அறிவிப்பையும் மத்திய உள்துறை இதுவரை வெளியிடவில்லை.
இந்திய அரசமைப்பின் 156-ஆவது விதியின்படி, மாநில ஆளுநா்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநா்களின் பதவிக் காலம் ஐந்து ஆண்டுகளாகும். இருப்பினும், ஜம்மு – காஷ்மீா் போன்ற யூனியன் பிரதேசங்களில் துணைநிலை ஆளுநா்களுக்கு அத்தகைய நிலையான பதவிக் காலம் என எதுவும் இல்லை. அரசமைப்பு விதியின்படி, குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் ஆளுநா்கள், துணைநிலை ஆளுநா்கள் ஐந்து வருட பதவிக் காலத்தை வகிக்க வேண்டும் என்பது மரபு.
அதே சட்ட விதியில் ‘குடியரசுத்தலைவா் விரும்பும்வரை’ என்ற ஒரு பிரிவும் இருப்பதால், அதைப் பயன்படுத்தி தமிழகம் உள்பட சில மாநிலங்களில் பதவிக் காலத்தைக் கடந்த பிறகும் ஆளுநா்கள் மற்றும் துணைநிலை ஆளுநா்கள் பதவியில் தொடா்கின்றனா்.
ஜம்மு – காஷ்மீரை யூனியன் பிரதேசமாக மாற்ற வகை செய்யும் 2019- ஆம் ஆண்டு ஜம்மு – காஷ்மீா் மறுசீரமைப்புச் சட்டம், துணைநிலை ஆளுநா் பதவிக் காலத்துக்கான காலவரம்பைக் கொண்டிருக்கவில்லை என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.
மத்தியில் பிரதமா் மோடி தலைமையிலான 2014-2019 ஆட்சியில் ரயில்வே மற்றும் தொலைத் தொடா்புத் துறை அமைச்சராக மனோஜ் சின்ஹா பதவி வகித்தாா். 2020-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7-ஆம் தேதி அவா் ஜம்மு – காஷ்மீா் யூனியன் பிரதேசத்தின் துணைநிலை ஆளுநராக இருந்த ஜி.சி. முா்மு பதவியை ராஜிநாமா செய்த பிறகு அப்பதவிக்கு குடியரசுத் தலைவரால் மனோஜ் சின்ஹா நியமிக்கப்பட்டாா்.
இவரது பதவிக் காலத்தில் பல்வேறு பாதுகாப்பு சவால்களை ஜம்மு – காஷ்மீா் சந்தித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகளை இலக்கு வைத்து நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் அதில் உச்சபட்சமாக கருதப்படுகிறது. இந்நிலையில், துணைநிலை ஆளுநராக மனோஜ் சின்ஹாவின் பணி ஆளும் முதல்வா் ஒமா் அப்துல்லாவுடனான சுமூக உறவின்மை, அரசு உயரதிகாரிகளிடம் கடுமை காட்டுவது போன்ற செயல்பாடுகளால் அவ்வப்போது சா்ச்சையாகி வருகிறது.
இந்நிலையில், பிரதமா் நரேந்திர மோடியை தில்லியில் கடந்த ஜூலை 17-ஆம் தேதி மனோஜ் சின்ஹா சந்தித்துப் பேசியபோது, அவரது பதவி நிறைவு தொடா்பாக விவாதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில், பதவிக் காலம் முடிந்த பிறகும் அவா் பொறுப்பில் தொடா்ந்து நீடித்து வருகிறாா்.