
கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்தார் செங்கோட்டையன்.
இதை சகித்துக்கொள்ளாத எடப்பாடி பழனிசாமி அப்போதே, கட்சிப் பொறுப்புகளிலிருந்து செங்கோட்டையனை நீக்கினார்.
அதைத் தொடர்ந்து, மன நிம்மதிக்காக, ராமனை தரிசிக்க ஹரித்வாருக்குச் செல்கிறேன் எனக் கூறிய செங்கோட்டையன், கடந்த வாரம் டெல்லிக்குச் சென்று அமித் ஷாவைச் சந்தித்து வந்தார்.
இந்த நிலையில், அ.தி.மு.க பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “கைக்கூலிகள் யாரென்று அடையாளம் கண்டுவிட்டோம்.
விரைவில் முடிவு கட்டப்படும். எங்களுக்கு ஆட்சி அதிகாரத்தை விட தன்மானம்தான் முக்கியம்” என்று கூறிவிட்டு நேற்று டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றார்.
இரவு 8 மணியளவில் எடப்பாடி பழனிசாமி மற்றும் அ.தி.மு.க நிர்வாகிகள் அமித் ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்தனர்.
முதல் அரை மணி நேர சந்திப்புக்குப் பிறகு, எடப்பாடி பழனிசாமி உடன் வந்த நிர்வாகிகள் மட்டும் அங்கிருந்து தனியாக காரில் புறப்பட்டனர்.
அதன் பின்னர் 20 நிமிடங்களுக்கு மேல் அமித் ஷாவும், எடப்பாடி பழனிசாமியும் தனியே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அதிமுக அமைச்சர்கள் இன்றி தனியே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்ததும், தனியே காரில் திரும்பும்போது முகத்தை மறைக்கும்படியான செயல்களில் எடப்பாடி பழனிசாமி ஈடுபடும் காட்சியும் சமூக ஊடகங்களில் வைரலானது.
இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி தன் எக்ஸ் பக்கத்தில், “ மாண்புமிகு இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களை தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் கழக நாடாளுமன்ற உறுப்பினர்களோடு நேற்று சந்தித்து,
தேச விடுதலைக்காக பாடுபட்ட தெய்வத் திருமகனார் பசும்பொன் ஐயா உ.முத்துராமலிங்கத் தேவர் அவர்களுக்கு இந்தியத் திருநாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா வழங்கிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.