Screenshot-2025-08-03-202228

சூர்யாவின் அகரம் பவுண்டேஷனின், விதைத் திட்டம் 15-வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு சென்னையில் இன்று பிரமாண்ட விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், சிவக்குமார், சூர்யா, கார்த்தி, தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, வெற்றிமாறன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ஒளிபரப்பப்பட்ட காணொளியில், “அகரம் பவுண்டேஷன் மூலம் 6,378 மாணவர்கள் கல்வி பெற்றிருப்பதாகவும், அவர்களில் 4,800 மாணவர்கள் முதல் தலைமுறை மாணவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Agaram விதை 15-ம் ஆண்டு விழா
Agaram விதை 15-ம் ஆண்டு விழா

அந்தக் காணொளியைத் தொடர்ந்து, அகரம் பவுண்டேஷனால் கல்விபெற்ற மாணவர்கள் மேடையில், “கல்வி பெற்று, வேலை பெற்று குறைந்தபட்சம் ஒருவரையாவது படிக்க வைப்போம்” என்று உறுதிமொழி ஏற்றனர்.

ட்ரம்ஸ் சிவமணியின் இசை நிகழ்ச்சி அரங்கேற்றப்பட்டது. இதில், பறை உள்ளிட்ட தாள கருவிகள் இசைக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து, அகரம் பவுண்டேஷன் மாணவர்களுக்கு உதவிய கல்வி நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் நபர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

தொடர்ந்து மேடையில் பேசிய சூர்யா, ” `அறம் செய விரும்பு’ என்ற ஒரு எண்ணத்தில் ஆரம்பித்தது தான் அகரம்.

நான் நடிக்க வந்ததுக்கு பிறகு, எனக்கு இவ்வளவு அன்பு கொடுக்கிறார்களே இவர்களுக்கு நான் என்ன திருப்பி செய்ய முடியும் என்ற நன்றி உணர்வுதான் அகரம்.

இதற்கு எனக்கு வழிகாட்டிய ஞானவேல் அவர்களுக்கு நான் எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது.

உணவு, உடை, இருப்பிடம் ஆகியவை அடிப்படைத் தேவை என்றால், அதேமாதிரி கல்வியும் அடிப்படைத் தேவை.

கல்வியைக் கொடுத்து விட்டால் மற்றதை அவர்களே தங்களுக்கு செய்து கொள்வார்கள் என்று உணர்ந்தோம்.

எப்படி இதை சரியாக செய்யப் போறோம் என்று தேடிக் கொண்டிருக்கும்போது, ஒரு பழங்குடி பள்ளியைத் தத்தெடுத்தோம்.

அகரம் - சூர்யா
அகரம் – சூர்யா

அப்போதுதான், அங்கு ஆறாவதிலிருந்து பனிரெண்டாவது வரை படிக்கும் மாணவர்களின் குடும்ப சூழ்நிலை, எதனால் படிப்பை பாதியிலேயே விடுகிறார்கள், என்னென்ன பிரச்சனைகள் அங்கு நடக்கிறது என்று நேரடியாக எங்களால் பார்க்க முடிந்தது.

இதை சரி செய்ய, படிப்பை நம்ப வேண்டும் என்பதற்காக `ஹீரோவா ஜீரோவா’ என்று குறும்படம் எடுத்தோம்.

அதுல விஜய், மாதவன், என்னோட ஜோ, நான் என நான்கு பேர் நடித்தோம். அரசு அதை எல்லா பள்ளிகளுக்கும் கொண்டு போய் சேர்த்தது.

படிக்கிறதுக்கு பணம் ஒரு பிரச்னையாக இருக்கக் கூடாது.

எனக்கு இன்னமும் நியாபகம் இருக்கு, சிங்கம் படம் ஷூட்டிங் நடுவுல இதே மாதிரி ஒற்றை சிந்தனை இருக்கின்ற எல்லோருக்கும் போன் பண்ணி, `உதவி செஞ்சீங்கன்னா இவங்க எல்லாம் படிப்பாங்கனு’ சொன்னதுல ஒரு கோடி ரூபாய் கெடச்சது.

அப்றம் `ஒரு கோடியில் ஒரு தொடக்கம்’ என்று ஒரு நிகழ்ச்சி பண்ணினோம். அந்த நிகழ்ச்சிக்கு அப்றம் நிறைய மாணவர்கள் அப்ளிகேஷன் அனுப்பினார்கள்.

100 பேரை நாங்கள் படிக்க வைக்கப் போகிறோம் என்று உறுதியளித்தோம். ஆனால், 160 பேரை படித்து வைத்தாக வேண்டிய நிலைமை வந்தது.

100 பேருக்கு தான் பட்ஜெட் இருந்தது, 60 பேருக்கு இல்ல. திரும்ப போன் பண்ணேன், நல்ல உள்ளங்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்தாங்க.

நிறைய கல்லூரிகள் இலவசமாக இடங்கள் தருகிறோம் என்று முன்வந்தார்கள். அந்த உறவு இப்போது வரைக்கும் நீடிக்கிறது.

160-ல் ஆரம்பித்தது இப்போது பதினைந்து வருடங்கள் கழித்து 6,000 மாணவ, மாணவிகளுக்கு மேல் நாம் கொண்டுபோய் சேர்த்திருக்கிறோம்.

அகரம் - சூர்யா
அகரம் – சூர்யா

அகரத்தின் தனித்தன்மை என்பது மதிப்பெண் மட்டுமல்ல.

மாணவர்கள் எங்கிருந்து வருகிறார்கள், அவர்களின் வாழ்வாதாரம் என்ன, அப்பா அம்மா இருக்கிறார்களா, இல்லையா, அப்பா இருக்கிறார் அம்மா இல்லையா இன்னும் கொஞ்சம் அதிகமா மார்க் கொடுக்கலாம்.

ஏனெனில், பெண்கள் இல்லாத வீட்டில் கல்வி கிடைப்பது அரிதான விஷயமாக இருந்தது.

அம்மா இருந்தாங்க என்றால் எப்படியாவது படிக்க வைத்து விடுவார்.

அதேமாதிரி, 40 கிலோமீட்டர் தொலைவிலிருந்து வந்து படிக்கிறார்களா அவர்களுக்கு எக்ஸ்ட்ரா மார்க், வீட்டுக்கு கூரை இல்லையா அவர்களுக்கு இன்னும் எக்ஸ்ட்ரா மார்க் என பிளஸ் டூ மார்க் மட்டுமில்லாமல் தனி மார்க் போட்டு தகுதியான மாணவர்களை அனுப்பும்போது, அத்தனை கல்லூரிகளும் `இந்த மாதிரியான மாணவர்களைக் கொடுத்தால் எவ்வளவு இடங்கள் வேண்டுமானாலும் கொடுக்கிறோம்’ என்றன.

160 சீட்டிலிருந்து வருஷா வருஷம் 700 சீட் வரை உயர்ந்தது. அவர்களெல்லாம் (மாணவர்கள்) வந்த பிறகு பொருளாதாரத் தடைகளை நாங்கள் நீக்கி விடுகிறோம்.

ஆனால், அவர்களுக்கு மனதளவில் நிறைய தடைகள் இருந்தது. தமிழ் வழியில் படித்தவர்கள் ஆங்கிலத்தில் படிக்க வேண்டும், மன அழுத்தம், தற்கொலை எண்ணம் போன்ற நிறைய மனத்தடைகள் இருந்தது.

அப்போதுதான் தன்னார்வலர்கள் வந்தார்கள். அண்ணாவாக, அக்காவாக இன்னமும் தொடர்பிலே இருக்கிறார்கள். இது ஒரு அழகான பயணம்.

அகரம் - சூர்யா
அகரம் – சூர்யா

இவர்கள் எல்லாம் இல்லாமல் இந்த ஒரு அழகான பயணம் கிடைத்திருக்காது.

அதேமாதிரி நீங்கள் படிப்பை பாதியில் நிறுத்தியிருந்தால், கனவுகளை எல்லாம் நீங்கள் ஜெயிக்கவில்லை என்றால் எங்களின் 15 வருட பயணங்கள் இருந்திருக்காது.

எதிர்நீச்சல் போட்டு, இதுதான் என் இலக்கு, நான் கல்வியை நம்புகிறேன், கல்வி தான் எனக்கு ஆயுதம், நிச்சயமாக நான் படிப்பேன் என்று 15 வருஷம் விடாமல் நீங்கள் செய்த முயற்சிதான் இந்த நாளுக்கு நம்மை கூட்டிட்டு வந்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் நீங்கள் திருப்பிக் கொடுத்திருக்கிறீர்கள்.” என்று கூறினார்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest