
தென்னிந்திய சினிமாவில் தமிழ், தெலுங்கு என ஒரே நேரத்தில் பிஸியான நடிகையாக வலம் வந்தவர் நடிகை அனுஷ்கா ஷெட்டி.
இயக்குநர் சுந்தர் சி-யின் `ரெண்டு’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அனுஷ்கா, `அருந்ததி’ படத்தின் வெற்றியால் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
தொடர்ந்து, சூர்யாவுடன் `சிங்கம்’, விஜய்யுடன் வேட்டைக்காரன், அஜித்குமாருடன் `என்னை அறிந்தால்’, ரஜினியுடன் `லிங்கா’ என முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்தார்.

இவரின் கரியரில் கடைசியாக `பாகுபலி’ படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
அதன்பிறகு பெரிய வெற்றிப்படம் இவருக்கு அமையவில்லை.
இவ்வாறான சூழலில் இவரின் நடிப்பில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியிருக்கும் `காட்டி (Gaati)’ என்ற படம் ஜூலை 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருந்த நிலையில் தற்போது அது ரிலீஸ் தேதியிலிருந்து தள்ளிப்போயிருக்கிறது.
மறுபக்கம், இவரின் படம் ரிலீஸுக்கு வரும்போதெல்லாம் அனுஷ்காவுக்கு எப்போதும் திருமணம் என்ற கேள்வி சுற்றிக்கொண்டிருக்கும்.
ஒருகட்டத்தில், பிரபாஸும், அனுஷ்காவும் காதலிப்பதாகப் பேச்சு அடிபட்டன.
ஆனால், தாங்கள் இருவரும் நண்பர்கள் என்று கூறி அவர்கள் முற்றுப்புள்ளி வைத்தனர்.

இந்த நிலையில், 43 வயதாகும் அனுஷ்கா, தனக்கு வந்த முதல் Love Proposal பற்றி மனம் திறந்திருக்கிறார்.
பேட்டியொன்றில் இதனைப் பகிர்ந்த அனுஷ்கா, “பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும்போது, என் வகுப்பைச் சேர்ந்த பையன் என்னிடம், “உயிருக்கு உயிராக உன்னைக் காதலிக்கிறேன். ஐ லவ் யூ” என்றான்.
அப்போது, ஐ லவ் யூ என்பதன் அர்த்தம்கூட எனக்குத் தெரியாது. இருப்பினும், அப்போது ஓகே என்று சொன்னேன்.
இப்போதும் அது ஒரு இனிமையான நினைவாக இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.