Asia-Cup

ஆசியக்கோப்பை 2025 இறுதிப்போட்டி கடந்த செப்டம்பர் மாதம் 28ம் தேதி நடைபெற்றது. இதில் வெற்றிபெற்ற இந்திய அணி, ஆசியா கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக இருக்கும் பாகிஸ்தான் அமைச்சர் மொஹ்சின் நக்வியின் கைகளால் கோப்பையைப் பெற்றுக்கொள்ள மறுத்ததால் அவரே கோப்பையை எடுத்துச் சென்றார்.

கோப்பை இல்லாமல் வெற்றியைக் கொண்டாடிய இந்திய அணி
கோப்பை இல்லாமல் வெற்றியைக் கொண்டாடிய இந்திய அணி

இந்தியா – பாகிஸ்தான் இடையே பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைகளுக்குப் பிறகு ராஜாந்திர உறவுகள் பலவீனமாக உள்ளன. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், தொடர் முழுவதும் பாகிஸ்தான் கேப்டனுடன் கைகுழுக்குவதைத் தவிர்த்தார்.

தொடரில் விளையாடிய மூன்று போட்டிகளிலும் வீரர்கள் ஒருவருக்கொருவர் கை கொடுத்துக்கொள்ளவில்லை. அதன் நீட்சியாகவே பாகிஸ்தான் அமைச்சரிடமிருந்து கோப்பையைப் பெற்றுக்கொள்ள மறுத்தார் சூர்யகுமார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் (செப் 30) நடந்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் பிசிசிஐ கோப்பையை வழங்குவது பற்றிய விவகாரத்தை எழுப்பியது. பிசிசிஐ அதிகாரிகள் ராஜீவ் சுக்லா மற்றும் ஆஷிஷ் ஷெலர், கோப்பையை துபாயில் உள்ள ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கிளை அலுவலகத்தில் வைத்து, அங்கிருந்து இந்தியாவுக்கு அனுப்பலாம் என்றனர்.

ஆனால் இந்த முடிவுக்கு உடன்பட மறுத்தார் மொஹ்சின் நக்வி. “கோப்பையை வழங்குவது பற்றி பேச கூட்டம் நடைபெறவில்லை” எனக் கூறி பேச மறுத்தார்.

இறுதியாக பிசிசிஐ கோப்பையைப் பெற ஒரு வழியைக் கூறினார். ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அலுவலகத்துக்கு வந்து சூர்யகுமார் யாதவ் தனது கைகளால் பெற்றுக்கொள்ளலாம் என்றார். “இந்திய அணி கோப்பையை விரும்பினால், கேப்டன் ACC அலுவலகத்திற்கு வந்து என்னிடமிருந்து அதைப் பெற்றுக்கொள்ளலாம்.” எனக் கூறியுள்ளார்.

கோப்பையைத் தர நக்வி மறுத்ததால் இது குறித்து ஐசிசியில் புகார் அளிக்கப்படும் என பிசிசிஐ எச்சரித்துள்ளது.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest