Screenshot-2025-12-17-at-11.44.32-AM

கடிகார டாஸ்க்கையும் டான்ஸ் டாஸ்க்கையும் கலந்து காக்டெயிலாக ‘டான்ஸ் மாரத்தான் 2.O’ என்று புது டாஸ்க்கை உருவாக்கிவிட்டார் பிக் பாஸ்.

நேரத்தை கணக்கிடுவதில் மக்கள் பிஸி என்பதால் சண்டையின் சத்தம் குறைவாக இருந்தது. ‘ஒரு மணி நேரம் பார்வதியை பேச வைக்காமல் இருந்ததால் இந்த டாஸ்க் சூப்பர்’ என்று எஃப்ஜே சொன்னது முற்றிலும் உண்மை.

BB TAMIL 9 - Day 72
BB TAMIL 9 – Day 72

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? –  நாள் 72

நன்றாக மேக்கப் போட்டுக்கொண்டு, எப்போது பார்த்தாலும் எழவு வீட்டில் இருப்பது போலவே மூலையில் சோகமாக அமர்ந்திருக்கும் சான்ட்ராவின் போக்கு வீட்டில் பலருக்கும் பிடிக்கவில்லை. ஒரு சாதாரண உரையாடலில்கூட அவர் முகம் கொடுத்து பேசாதது கனிக்கு கோபத்தைத் தந்திருக்கிறது. “அது என்னதது.. மூஞ்சியைப் பார்க்காம போறது. .. ச்சீன்னு.. சொன்னத வெச்சு சீன் போடறது?” என்று புலம்பிக் கொண்டிருந்தார். 

இன்னொரு பக்கம் சான்ட்ராவை அநாவசியமாக சமாதானம் செய்ய முயன்று கொண்டிருந்தார் வினோத். (தல உத்தியோகத்தை காப்பாத்தியாகணுமே!). கூட நின்று கொண்டிருந்த கம்மு, கார்டன் ஏரியாவில் தன்னிச்சையாக துப்ப, அதைப் பார்த்து தலையில் அடித்துக்கொண்டார் பாரு. இதனால் கம்முவிற்கு கோபம் வந்து ‘என்ன.. நீ மட்டும் ரொம்ப சுத்தமா?’ என்று விலகிப் போய்விட்டார். 

கம்மு சென்ற பிறகு அவரைப் பற்றிய புறணியை ஆரம்பித்துவிட்டார் பாரு. “டிரையாங்கிள் கட் ஆச்சுன்னு சொன்னாலும் அரோ கூடவேதான் இன்னமும் சுத்தறான். அவளும் அதை வெச்சே இத்தனை நாளு ஓட்டிட்டா பாரு.. அதான் எனக்கு ஆச்சரியம்” என்று பாரு சொல்ல “கம்முவும் அப்படித்தான் ஓட்டறான்.. நீ வாயடிக்கறதால இன்னும் நிக்கற” என்று பாருவை ஊமைக்குத்தாக குத்தினார் சான்ட்ரா. 

மற்றவர்களின் பலம், பலவீனங்களை எடைபோடத் தெரிகிற சான்ட்ராவிற்கு, தான் இப்படி பொழுது பூராவும் ஒப்பாரிக் கோலத்தில் இருந்தால் பார்வையாளர்கள் எரிச்சலடைவார்கள் என்பது மட்டும் தெரியாதா?!

BB TAMIL 9 - Day 72
BB TAMIL 9 – Day 72

‘என்னது.. திவ்யாவின் தலைவலி டிராமாவா?” – விக்ரம் தாமத அதிர்ச்சி

நாள் 72. தன்னுடைய கோபத்திற்கும் சோகத்திற்குமான காரணத்தை விக்ரமிடம் விளக்கிக்கொண்டிருந்தார் சான்ட்ரா. ‘ச்சீன்னு சொல்றாங்க.. இந்த நிகழ்ச்சியை குழந்தைகள்லாம் பார்க்காறாங்கன்னு தெரியாதா..?” என்று திடீர் நியாயம் பேசினார் சான்ட்ரா. விக்ரமை ‘உங்க டிக்கியும் டிங்கு டிங்குன்னு ஆடுது’ என்று நக்கலடிப்பது முதல் சான்டரா செய்த அழிச்சாட்டியங்கள் பல. அவற்றை குழந்தைகள் பார்க்காதா?!

திவ்யா மீதான கோபத்திற்கு காரணத்தையும் சான்ட்ரா சொன்னார். ஆனால் அது பைசாக்கு பெயராத காரணம். “நானே பிரஜின் போன சோகத்துல இருக்கேன். இவ என்னடான்னா.. பெட்டியை காலி செய். துணியை வைக்கணும்ன்றா..” என்று சான்ட்ரா சொல்வது அற்பமான காரணம் என்று தோன்றகிறது. திவ்யா மீது அளவுக்கு அதிகமான சலுகையை பிரஜின் காட்டியதால் ஏற்பட்ட சந்தேகம்தான் சான்ட்ராவின் மனதில் நெருப்பாக புகைந்து கொண்டிருக்கிறதோ?!

“திவ்யா உங்களைப் பத்தி தப்பா நெனக்கற மாதிரி தெரியல” என்று விக்ரம் சொல்லிப் பார்த்தார். அந்தச் சமயத்தில்தான் இன்னொரு உண்மை வெளியே வந்தது. “ஜெயிலுக்கு போற அன்னிக்கு தலைவலின்னு திவ்யா துடிச்சா இல்லையா.. அது உண்மையான தலைவலி இல்ல. கனி ஏன் ஜெயிலுக்குப் போகலைன்னு அவளுக்குக் கோபம். அதனாலதான் டிலே பண்ணா.. உண்மையான தலைவலின்னா மாத்திரை போடணும்ல?!” என்று சான்ட்ரா மூட்டையை அவிழ்த்து விட இப்போது விக்ரமிற்கு அதிர்ச்சி. (அடப் பாதகத்திகளா.. நைட்டு முழுக்க எங்களை தூங்க விடாம டிராமாவா போட்டீங்க?!)

திவ்யாவின் தலைவலி டிராமா  விஷயத்தை கொண்டு போய் அப்படியே கனியிடம் ஒப்பித்தார் விக்ரம். “ரெண்டு பக்கமும் நம்ப வேணாம்” என்று எச்சரித்தார் கனி. 

BB TAMIL 9 - Day 72
BB TAMIL 9 – Day 72

‘சான்ட்ரா பின்னாடியே கெஞ்சிட்டிருக்க முடியுமா?” – வினோத்தின் நியாயமான கோபம்

முணுக்கென்றால் கோபித்துக்கொள்வது, ஒப்பாரிவைப்பது, ஒட்டு மொத்த வீடும் தன் பின்னால் வந்து சமாதானம் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பது என்று சான்ட்ராவின் குணாதிசயங்கள் வினோத்திற்குப் பிடிக்கவில்லை. “நம்மள போல அவங்க ஒரு போட்டியாளர்.. அவங்க பின்னாடியே செல்லம் கொஞ்சிட்டிருக்க முடியுமா?” என்று அவர் கேட்பது சரியான பாயிண்ட். 

“ச்சீன்றதுல்லாம் ஒரு பிரச்சினையா.. பேச விட்டு சான்ட்ரா பாயின்ட் பிடிக்கறாங்க.. திவ்யா கூட பிரச்சினைன்னா.. அதை இழுத்துட்டே இருக்கா ஒக்காந்து பேசலாம். அதை விட்டுட்டு புறணி பேசிட்டே இருந்தா.. மக்கள் என்ன நினைப்பாங்க. நீங்க அழுதா பின்னாடியே வரணுமா?” என்றெல்லாம் விக்ரமிடம் அனத்திக் கொண்டிருந்தார் வினோத். 

இந்த வாரத்தின் வீக்லி டாஸ்க்கை அறிவித்தார் பிக் பாஸ். ‘டான்ஸ் மாரத்தான் 2.O’. கடிகாரம் மற்றும் நடனத்தின் கலவை. கரகாட்டக் கும்பல், யம்மாடி ஆத்தாடி, ஆடினே இருப்போம் என்று மூன்று அணிகளாக வீடு பிரியும். 

இந்த அறிவிப்பை செய்த பிறகு ‘ஃப்ரீஸ்’ என்று சொல்லி ஷாக் தந்தார் பிக் பாஸ். ‘ஃபேமிலி டாஸ்க்கும் இதனுடன் இருக்கிறதோ” என்று மக்கள் ஒரு கணம் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். “இல்லை.. அடுத்த வாரம்தான் ஃபேமிலி டாஸ்க். அதற்கான ஒத்திகைதான் இது. வெற்றி பெறும் அணி தல போட்டிக்குத் தகுதி பெறுவதோடு, அதில் ஒருவரின் குடும்பம் 24 மணி நேரத்திற்கு தங்குவார்கள்” என்று சலுகை காட்டினார் பிக் பாஸ். 

BB TAMIL 9 - Day 72
BB TAMIL 9 – Day 72

ஃபேமிலி டாஸ்க்கில் சான்ட்ரா என்னவெல்லாம் செய்வாரோ?

இப்படி ஆசை காட்டினால்தான், கடிகார டாஸ்க்கை மக்கள் வெறி கொண்டு ஆடுவார்கள் என்பது பிக் பாஸின் கணக்கு. அதனால்தான் முன்கூட்டியே சீக்ரெட்டை வெளியிட்டுவிட்டார். ஃபேமிலி டாஸ்க் என்பது போட்டியாளர்களுக்கு ஊக்கமும் மகிழ்ச்சியும் தரும் விஷயம்தான். ஆனால் பிரஜின் மற்றும் குழந்தைகளைப் பார்த்தவுடன் சான்ட்ரா ஆடப் போகும் டிராமாவை நினைத்தால்தான் இப்போதே ‘கெதக்’ என்று இருக்கிறது. 

கடிகார டான்ஸ் போட்டி ஆரம்பித்தது. ‘கரகாட்டக் கும்பல்’ அணியில் அமித், வினோத், திவ்யா, சான்ட்ரா. குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டதில் திவ்யாவும் சான்ட்ராவும் ஒரே அணியில் இருக்க நேர்ந்தது காலத்தின் காமெடி. 

‘யம்மாடி ஆத்தாடி’ அணியில் கனி, ஆதிரை, பாரு, கம்மு ஆகியோர் இருக்கிறார்கள். கம்முவின் அணியில் லக் அடித்ததில் பாருவிற்கு ஹாப்பி. ‘ஆடினே இருப்பேன்’ அணியில் விக்ரம், எஃப்ஜே, சபரி, அரோரா, சுபிக்ஷா. 

முதல் சுற்றில் 35 நிமிடங்கள் என்பது டார்கெட்டாக அமைக்கப்பட்டது. அணியில் ஒருவர் விநாடி முள்ளாகவும், இன்னொருவர் நிமிட முள்ளாகவும், மூன்றாமவர் மணி முள்ளாகவும் இருந்து நேரத்தைக் கண்காணிக்க வேண்டும். 

BB TAMIL 9 - Day 72
BB TAMIL 9 – Day 72

வெற்றி பெற்ற கரகாட்டக் கும்பலும் யம்மாடி ஆத்தாடியும்

முதல் சுற்றில் கரகாட்டக் கும்பல், தரப்பட்டிருந்த நேரத்திற்கு நெருக்கமாக கணக்கிட்டு வெற்றி பெற்றது. இதனால் விக்ரமும் சுபிக்ஷாவும் பரபரப்படைந்தார். அடுத்த சுற்றில் கவுன்ட்டை சரியாக செய்ய வேண்டும் என்பதற்காக பல விஞ்ஞான முயற்சிகளில் ஈடுபட்டார்கள். 

“நான் போய் ஓவனை ஆன் பண்ணி டைமிங் பார்த்துட்டு வரேன்” என்று புத்திசாலித்தனமாக கிளம்பினார் சுபிக்ஷா. ‘நீங்க படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட்மாஸ்டர்’ என்கிற மாதிரி அதை ஆஃப் செய்து வைத்து வைத்திருந்தார் பிக் பாஸ். தண்ணீர் சொட்டும் நேரத்தைக் கூட விடவில்லை. 

இரண்டாவது சுற்றில் 1 மணி நேரம் 17 நிமிடங்கள் என்பது டார்கெட்டாக தரப்பட்டது. இதில் ‘யம்மாடி ஆத்தாடி’ அணி வெற்றி பெற்றது. 

மற்ற இரு அணிகளும் பாயின்ட் பெற்று ஸ்கோர் போாட்டில் இடம் பெற்றதால் ‘ஆடினே இருப்பேன்’ அணிக்கு நெருக்கடி. அடுத்ததில் அவர்கள் எப்படியாவது வெற்றி பெற்றாக வேண்டும். 

எஃப்ஜேவும் விக்ரமும் மற்ற அணியினரை நோண்டி கவனத்தைக் கலைக்க முயன்றார்கள். இதனால் திவ்யா, சான்ட்ராவிற்கு கோபம் வந்தது. “டாஸ்க்கை வெறுமனே செஞ்சா என்ன சுவாரசியம் இருக்கு?” என்று நியாயம் கற்பித்தார் விக்ரம். இவர்களைப் பார்த்து கனியும் பிளான் செய்தார். 

BB TAMIL 9 - Day 72
BB TAMIL 9 – Day 72

ஒருவழியாக பேச ஆரம்பித்த சான்ட்ரா – திவ்யா

ஒரே அணியில் இருந்ததால் சான்ட்ராவும் திவ்யாவும் ஒருவழியாக பேச ஆரம்பித்தார்கள். எதிர் அணியினர் செய்யும் கவனக்கலைப்பு குறித்து பொதுவாக புகார் செய்து பேசினார்கள். “எனக்கு தல போட்டி கூட வேண்டாம். ஃபேமிலி டாஸ்க்கிற்காக ஜெயிக்கணும்” என்றார், பிரஜினின் சட்டையை அணிந்திருந்த சான்ரா. (யப்பா.. முடியல!) 

“என்ன வினோத்.. கிச்சன் ஏரியா சுத்தமா இல்ல. பாத்திரங்கள் கழுவப்படல. பார்க்கக்கூடாதா?” என்று வீட்டு ‘தல’யிடம் சுட்டிக் காட்டினார் பிக் பாஸ். “டாஸ்க் எப்ப ஆரம்பிக்கும்ன்னு அந்த டென்ஷன்ல இருந்துட்டோம்” என்று சமாளித்த வினோத், பாருவை கூப்பிட “ம்க்கும்.. மொதல்ல நாங்கதான் கண்ல படுவோமோ.. பாத்திரங்களை சுத்தம் செய்யச் சொல்லுங்க” என்று மறுத்தார். அதானே.. பாருவாவது.. வேலை செய்தாவது.. 

பாத்திரம் என்று பிக் பாஸ் சொன்னதை, பாத்ரூம் என்று தவறாக வினோத் புரிந்து கொள்ள “ஏய்.. எங்க பக்கம் வந்தே. டென்ஷன் ஆயிடுவன். .நாங்கள்லாம் ஒழுங்கா வேலை பண்ணியிருக்கோம்” என்று எகிறினார் கம்மு. 

மூன்றாவது சுற்றை 45 நிமிடங்களுக்கு செட் செய்தார் பிக் பாஸ். பேப்பரில் விநாடியைக் கணக்கிட்ட அரோவை வினோத் கண்டித்தார். 

இந்த நடனப் போட்டியில் ‘வாடி.. வாடி க்யூட் பொண்டாட்டி’ பாடலும் ஒலிபரப்பானது. ‘நல்லா பார்த்துப்பேன்னு பொய்யா நடிப்பான்’ என்கிற வரி வரும் போது காமிரா காட்டியது கம்முவை. (அநியாயக் குறும்பு!). நடனம் ஆடுவதற்காக வழங்கப்பட்டிருந்த ஆடைகள் விநோதமாக இருந்தன.

மஞ்சள் நிறத்தில் அரேபிய பாணியில் காமெடியாக இருந்தார் பாரு. மாஜிக்மேன் தோற்றத்தில் இருந்தார் வினோத்.

BB TAMIL 9 - Day 72
BB TAMIL 9 – Day 72

வெஸ்டர்ன் பாணியில் கம்முவின் ஆடை ஸ்டைலாக இருந்தது. ராஜஸ்தான் தலைப்பாகையை கட்டியிருந்தார் சபரி. கோவாவின் ஹாலிடே மோடில் இருந்தார் அரோ. 

ஒருவழியாக மூன்றாவது சுற்றில் ‘ஆடினே இருப்போம்’ அணி வெற்றி பெற்றதால், மூன்று அணிகளும் தலா 2 புள்ளிகள் பெற்று சமமாக இருக்கிறது. 

‘ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சாலன்ஜ்’ என்று பிக் பாஸ் அறிவித்திருக்கிறார். எனில் நாளைய போட்டியில் என்ன வித்தியாசம் என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest