G7vd-PyaMAQ8Uo6

சென்னையில் ஜியோ ஹாட்ஸ்டார் ‘South Unbound’ என்ற நிகழ்வை நேற்றைய தினம் நடத்தியது.

பல இளம் திறமையாளர்களை ஊக்குவிப்பதற்காக நான்கு மாநிலங்களில் 12,000 கோடி ரூபாயை முதலீடு செய்யப் போவதாக ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம் அறிவித்திருக்கிறது. அதில் 4000 கோடியை தமிழகத்தில் முதலீடு செய்யவும் திட்டமிட்டிருக்கிறார்கள்.

Jio Hotstar
Jio Hotstar

ஜியோ ஹாட்ஸ்டாரின் அடுத்த ஆண்டின் லைன் அப் அப்டேட்களையும் இந்த நிகழ்வில் அறிவித்தார்கள். நிகழ்வில் இறுதியில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழி பிக் பாஸ் தொகுப்பாளர்களும் ஒன்றாக மேடைக்கு வந்தார்கள்.

அங்கு தாதா சாகேப் பால்கே விருது பெற்ற மோகன்லாலுக்கு நாகர்ஜூனாவும் விஜய் சேதுபதியும் சால்வை அணிவித்து கெளரவப்படுத்தினர்.

நான் அதிர்ஷ்டசாலி

மோகன்லால், “மிகவும் நெகிழ்வான தருணம் இது. நான் நாகர்ஜூனாவின் தந்தையுடன் இணைந்து நடித்திருக்கிறேன். ‘காண்டீவம்’ என்ற படத்தில் நாங்கள் இணைந்து நடித்திருக்கிறோம்.

இப்படியான நிகழ்வை ஒருங்கிணைத்த ஜியோ ஹாட்ஸ்டாருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பிக் பாஸில் நான் மொத்தமாக 7 சீசன்களைத் தொகுத்து வழங்கியிருக்கிறேன். பிக் பாஸ் என்பது டிராமா போல ஒருங்கிணைக்கும் நிகழ்ச்சி கிடையாது. அதனால்தான் அந்த நிகழ்ச்சி இத்தனை பெரிய ஹிட்டானது.

Mohanlal
Mohanlal

அந்த நிகழ்ச்சி முழுக்க முழுக்க நேர்மறையான விஷயங்களால் நிரம்பியது. பலருக்கு இந்த நிகழ்ச்சி மீது பல விமர்சனங்கள் இருக்கின்றன.

ஆனால், அந்த நிகழ்ச்சியில் பொழுதுபோக்கு அம்சங்களும், எமோஷன்களும் நிறைந்திருப்பதாக நம்புகிறேன். நான் அதிர்ஷ்டசாலி. தொடக்கத்தில் நான் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு தயக்கப்பட்டேன்.

ஆனால், பிறகு அதற்கு நான் அடிமை ஆகிவிட்டேன். மேலும், மூன்றாண்டுகளுக்கு நான் பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறேன். பிக் பாஸ் என்பது திறமையாளர்களுக்கான களம். 100 நாட்களில் அந்த நிகழ்ச்சி ஒருவரை நட்சத்திரமாக உயர்த்தும்.

இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவது அவ்வளவு எளிதானது கிடையாது. பலர் இதனை ஸ்கிரிப்டெட் நிகழ்ச்சி எனச் சொல்லிவிடுவார்கள். ஆனால், எனக்கு உள்ளிருக்கும் ரகசியங்களும் தெரியும்.” என உற்சாகத்துடன் பேசினார்.

கன்டென்ட்தான் கிங்

நாகர்ஜூனா பேசும்போது, “மகிழ்ச்சியான தருணமாக இது இருக்கிறது. தாதா சாகேப் பால்கே விருது வென்ற மோகன்லாலுக்கு வாழ்த்துகள் தெரிவித்துக் கொள்கிறேன். பெரும் மதிப்பிற்குரிய விருது அது.

மிகத் தகுதியான நபரிடம் அந்த விருது வந்துசேர்ந்திருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியைப் பொறுத்தமட்டில் கன்டென்ட்தான் கிங்! போட்டியாளர்களும் கிங்தான். மோகன்லால் 7 சீசன்களைத் தொகுத்து வழங்கியிருக்கிறார்.

Nagarjuna
Nagarjuna

அதில் நான் அவரைவிட கொஞ்சம் சீனியர். முதல் சீசனில் எனக்கு இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க துளியும் விருப்பமில்லை. ஆனால், இப்போதும் நானும் இதற்கு அடிமையாகிவிட்டேன்.

16 வருடங்களுக்கு முன்பு ஸ்டார் நெட்வொர்க்குடன் இணைந்து பணியாற்றத் தொடங்கினேன். பிக் பாஸில் முதல் வாரத்தில் ஒருவர் வெளியேறினாலும் அவர் நட்சத்திரமாக வெளியே பார்க்கப்படுவார்.” எனப் பேசினார்.

விஜய் சேதுபதி பேசுகையில், “என்னை நினைத்து நானே பெருமைப்படுகிறேன். இவ்வளவு பெரிய மனிதர்களுடன் நானும் இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். நான் மோகன்லால் சாரின் பெரிய ரசிகன்.

அவரிடம் ஆட்டோகிராஃப் வாங்கி அதனை நான் என்னுடைய வீட்டில் ஃப்ரேம் செய்து வைத்திருக்கிறேன். நாகர்ஜூனா சார் ஒரு ஜெண்டில்மென். அவருக்கு வயதாகவே இல்லை (சிரித்துக் கொண்டே…).

அவரிடம் கூலான எனர்ஜி எப்போதும் இருக்கும். சின்ன வயதிலிருந்து அவரை நான் டிவியில் பார்க்கிறேன். ஆனால், நான் வளர்ந்துவிட்டேன். அவர் இன்னும் அதேபோல்தான் இருக்கிறார்.

Vijay Sethupathi
Vijay Sethupathi

பிக் பாஸ் எனக்கு கண்ணாடியைப் போன்றது!

என்னுடைய பேரக்குழந்தைகள் வந்தாலும் நாகர்ஜூனா சார் இப்படியேதான் இருப்பார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் எதுவுமே டிராமா கிடையாது. பிக் பாஸ் எனக்கு கண்ணாடியைப் போன்றது. ஒவ்வொரு போட்டியாளரிடமும் நான் என்னைப் பார்க்கிறேன்.

நாகர்ஜூனா சாரைப் போல நானும் முதலில் பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கமாட்டேன் எனக் கூறினேன். பிக் பாஸ் நிகழ்ச்சியில் எனக்கு முதலில் மாற்றுக்கருத்து இருந்தது.

ஆனால், அந்த நிகழ்ச்சி மனிதர்களைப் படிக்கும் புத்தகத்தைப் போன்றது. நானும் அங்கிருந்து பல விஷயங்கள் கற்று வருகிறேன். அந்த நிகழ்ச்சியில் பல விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.

எனக்கு பதில்களைவிட கேள்விகள்தான் மிகவும் பிடிக்கும். பிக் பாஸ் நிகழ்ச்சி என்னிடம் பல கேள்விகளை எழுப்புகிறது. நான் அதிலிருந்து பலவற்றை கற்றிருக்கிறேன்.” எனக் கூறினார்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest